Pages

வெள்ளி, 4 மார்ச், 2016

இடையில் நின்ற அதுவும் இதுவும்

சொற்கள் பலவற்றைப்  பிரித்து  ஆய்வு செய்வோர் பிரிக்கப் பட்ட துண்டுகளுக்கு இடையில்  அது  இது   என்பன  நிற்றலைக் காண்பர்.
எடுத்துக்காட்டாக  பருவதம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

பருத்தல் என்பது தமிழ் .  உள்ளது பரிது ( பெரிது ) ஆவதைக் குறிக்கிறது இந்தச் சொல்.  சிறு சிறு மேடுகளையும் குன்றுகளையும் பார்த்துப் பழக்கப்பட்ட ஒருவன்  ஒரு பெரிய மலையைக் கண்டவிடத்து  வியக்கிறான்;  பெருத்தது, பருத்தது என்று அவன் அதை வருணிக்கிறான். இப்படி அமைந்ததே பருவதம் என்ற சொல்.

பரு +  அது + அம் =  பருவதம்.

இதில் அது என்னும் சுட்டு இடையில் நின்று சொல்லமைப்புக்குத்  துணை புரிந்தது.  மலை என்ற சொல்லும் கண்டு வியத்தல் என்னும்  மலைவு என்பதனோடு தொடர்புடைய கருத்தே ஆதலின் இவற்றின் கருத்தொருமை நன்கு புலப்படுவதாகும்.

இடையில் நின்று சொல் அமைப்புக்குத் துணைசெய்வனவற்றை இடை நிலை என்றனர் இலக்கணியர் .  ஆனால் வினைமுற்றுக்களை ஆய்வு செய்த காலையே அவர்கள்  அங்ஙனம் கூறினர் .  வினைமுற்று அல்லாத பெயர்களிலும் இது காணப்படுகின்றமையின்  தமிழில் வினைமுற்றுக்கள் அமைந்த விதத்தினைப் பின்பற்றியே  பருவதம் முதலிய சொற்கள் பிற்காலத்துப் புனைவுற்றன என்று முடித்தல் பொருத்தமே.

இடையில் அது என்னும் இடைநிலை  நிற்றல் தேவை ஆயிற்று.   இன்றேல்  பரு+ அம்  =  பரம் என வந்து  பர+ அம் =  பரம் என  உருக்கொண்டு இறைவனைக் குறிக்கும் சொல்லுடன்   மலைவு  (குழப்பம் )   நேர்தல் காண்க.


தெய்வதம் என்ற சொல் இப்படியே புனைவு பெற்றது என்பது தெளிவு.

தெய்வம் + அது + அம் =  தெய்வ + அது + அம்  = தெய்வ +  து + அம் >   தெய்வ + த் + அம் >   தெய்வதம்.

இரண்டு அகரங்கள் வரின் ஓர் அகரம் வெட்டுப்படும். அது நிலைச்சொற்பாகத்தினது ஆயினும்  வருஞ்சொற்பாகத்தினதாயினும்  முடிபு வேறுபடுதல் இல்லை.

இடை நிலை இறுதி உகரமே மறையு,ம்,  இறுதி விகுதி அகரத் தொடக்கத்தினதாயின்

அப்தெய்வத என்ற சங்கதச் சொல்லில்   அது என்பது நின்று அம் என்பது  வாலிழந்த நிலையில் முற்றுப்பெற்றமை காண்க.   அப்தெய்வத எனின் நீரைத் தெய்வமாய்க் கும்பிடும் கொள்கையர் என்பதாம்.  இவர்களை வேறுபடுத்திக் காண ஒரு சொல் தேவைப் பட்டதுபோலும். அக்கினியை வணங்குதலினின்று  வேறுபாடு இதனால் அறியப்பட்டது. இக்காலத்து இரண்டும் இணைப்புற்றமை காணலாகும்.

பெரிது  சிறிது என்பவற்றில்  இகரம் வந்தமை காண்க.  வேறு சொற்களில்  " இது"   இடைநிலை  வந்தது பின் ஓர் இடுகையில் காண்போம்.

"  அது" இடை நிலையை  விரியப் பயன்படுத்திச்  சமஸ்கிருதமும் பெருவெற்றி அடைந்தது --  சொல்லமைப்புக் கலையில்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.