Pages

வியாழன், 19 ஜூன், 2025

மனனம் - சொல், மற்றும் ''மாதிரி''

 இன்று மனனம் என்ற சொல்லைக் காண்போம்

இது மனப்பாடம் செய்தலைக் குறித்தலுடன்,  சிந்தித்தலையும் குறிக்கும்.  

மனம் என்பது மனன் என்று தமிழில் வரும்.  அறம் என்பது அறன் என்று வருதல் காண்க.  திறம் என்பது திறன் என்றும் வருதல் அறிக. போல இருப்பவை போலி எனப்படும்.  அதாவது ஒரே மாதிரியானவை. மாதிரி என்றால்  அதே அளவில் திரிக்கப்பட்டவை,  அல்லது அதே அளவில் செய்யப்பட்டவை. திரித்தல் என்றால் உருவாக்குதல் என்றும் பொருள் உண்டு.  

மா -  அளவு. ( அளவில்)   திரி =  திரிக்கப்பட்டவை.  திரி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  தேவநேயப் பாவாணர்  ''மாடல்'' என்ற ஆங்கிலச் சொல்தான் மாதிரி என்ற திரிந்துள்ளது என்றார் எனினும்  இதை வலைப்பதிவுகளில் உலவிய தமிழன்பர்களும் அறிஞர்களும் ஒப்பவில்லை. ( பதினைந்து ஆண்டுகட்கு முன்). இவர்களின் கருத்தே இங்கு மேற்கொள்ளப்படுகிறது.  பாவாணர் கூற்றுக்குக் காரணம்  '' ஹாஸ்பிட்டல்'' என்ற ஆங்கிலம்  ''ஆஸ்பத்திரி'' என்றானதுதான். ஆனால் ஹாஸ்பிட்டல்  என்பதில் வரும் ''டல்''  -tal என்று முடிவது.   மாடல் என்பதில்  வரும் ....del என்பது சற்று வேறுவிதமான -டல்.  Dull என்பதில் டல்,   டல்லென்றே மாற்றமின்றித் தமிழில் ஒலிக்கிறது. பெடல் என்பதில் வரும் டல் மாறுவதில்லை. மெடல் என்பதும் மாறுவதில்லை. இவற்றையும் இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

இனி மனனுக்குத் திரும்புவோம். மனனில் அல்லது மனத்துள் படித்ததை அமைத்துக்கொள்வது மனனம்  எனப்படும். அம் என்பது அமைத்துக்கொள்ளுதல் என்பதற்கு ஏற்புடைய விகுதி. ஆகவே மனனம் என்பது நல்ல தமிழ்ச்சொல் ஆகும்.

இங்கு இரு சொற்களைக் கவனித்தோம். மனன் >  மனனம்,  மாதிரி என்பவை இவை.  இவை இரண்டும் தமிழல்ல என்று முடிவு செய்வதற்குக் காரணம் எதுவும் இல்லை.  ஒரு சொல் எந்த மொழிக்குரியது என்று முடிவு செய்வதில்,  முதலாவது  வழக்கு அல்லது பயன்பாடு என்னும் செயலும் இரண்டாவதாக எத்தகு மூலச்சொற்களால் இவை ஆக்கப்பட்டுள்ளன என்னும் நிலையும் முக்கியமானவை. ஒருசொல் ஒரு மொழியில் வழங்குவதால் மட்டுமே அச்சொல் அம்மொழிக்குரியது என்று முடிவு செய்வது பேதைமை. மனனம் என்பது தமிழிலும் உள்ளது; சமஸ்கிருதத்திலும் உள்ளது.  இவ்வாறு மட்டும் காண்கையில் இது எம்மொழிச் சொல்லாகவும் இருத்தல் கூடும்;  ஆயின் மூலங்கள் தமிழிலிருத்தலால், இவை தமிழ்ச் சொற்களே என்று முடிவுசெய்வதுதான் சரியானதும் காரணத்துடன் கூடியதும் ஆகுமென்க .  சமஸ்கிருதம் என்பது இந்திய மொழியே என்பது இங்கு வேறு இடுகைகளால் நிறுவப்பட்டுள்ளது. அது வெளிநாட்டு மொழி என்பது வெள்ளைக்காரன் புனைவு ஆகும்.  இது களையப்பட வேண்டிய மடமை என்பது முடிவு.

மாதிரி என்பது  மா-  அளவு;  (பொதுப்பொருள் ).  இச்சொல் நில அளப்பிலும் வருகிறது. பெரிது என்ற பொருளிலும் வருகிறது.  இவை எல்லாம் அளவு பற்றிய பொருண்மைகள். சொல் வரலாற்றில் ஒரு சொல் பலவேறு பொருள்கள் கொண்டு வழங்கி இன்று இறுதியில் ஒரு பொருளில் வழங்குவது என்பது பல சொற்களில் நாம் அறிந்துகொள்ளும் செய்தியாகும். தேவரடியாள் அல்லது தேவடியாள் என்பது இவ்வாறு காண்புறும் சொல்லுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இவ்வாறு நிறைய உள்ளன.  ஆகையால் மாதிரி என்பது தமிழ்ச்சொல். நல்ல ஆதாரங்கள் கிடைக்கும்போது தவறான முடிவைப் பற்றிக்கொண்டு அதில் தொங்கிக்கொண்டிருபது அறியாமையின் அறிகுறி. சான்றின்படி செல்லாதவன் ஒரு தீர்ப்பு எழுதும் தகுதியை இழந்துவிடுகிறான். சொற்கள் என்பவை ஒலிகளால் ஆனவை.  அவற்றின்பால்  வெற்று வெறுப்புக் கொள்வோனும் ஆய்வாளனாகும் தகுதியை இழப்பவனே. ஒருக்கால் ஒருவன் செய்த தவறான முடிவை பிற்பாடு மாற்றி அமைத்துக்கொள்கிறபோது  அவன் உண்மையில் அறிவாளி ஆகிவிடுகிறான்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.