Pages

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

குரோதம், குரோதித்தல்.

குரோதித்தல் என்ற வினைக்கு  வேறு பொருள் கூறப்பட்டாலும் அப்பொருள் வந்த விதத்தை யாம் முன்னர் எழுதியுள்ளோம்,  இப்போது குறு  ( குறுமை) என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தி அந்தப் பொருள் வராவிட்டாலும் பொருந்தும் ஒரு பொருள் வருகிறதா என்று ஆய்வு செய்வோம்,

குரோதம் என்ற சொல் குறிலை அடுத்து ஓகார நெடில் பயின்ற காரணத்தால்,  தமிழாயிருக்காது என்று சிலர் துணிந்தனர்.  மேலும் இதைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, கீழ்க்கணக்கு நூல்களிலும் காணமுடியவில்லை. ஆனாலும்ப் வழக்கில் உள்ளது.  இது பெரும்பாலும் பேச்சு வழக்கில் வந்த சொல் என்று அறிகிறோம்.  பழைய செய்யுள் நூல்களில் கண்டால் இங்குப் பின்னூட்டம் இடவும்.

மிகக் குறுகிய காரணங்களுக்காக ஒருவனை ஒகிக்கிவைத்து அவன்மேல் காழ்ப்புணர்ச்சியைப் பயன்படுத்துவதுதான் குரோதம் என்று சொல்லப்படுவது. இதில்வரும் குறு என்ற சொல், சொல்லாக்கத்தில் குரு அல்லது குர் என்று மாறிவிட்டது.  குரு என்பது ஆசிரியனையும் ஒலியையும் குறிப்பதால் அச்சொல்லுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.   எடுத்துக்காட்டு:  குர் > குரல்; குர்>  குரை; குர் (ஒலி) > குருவி எனக்காண்க.

குரோதம் என்பதில் குறு என்ற அடியும் ஒது> ஒதுங்கு  என்பதில் உள்ள ஒது என்ற என்ற அடியும் உள்ளன.  குறு+ ஒது+ அம் > குரோதம்.   இங்கு ஒது அம் என்பவை ஓதம் என்று நீண்டன.  ஒது என்பது ஓது என்று நீண்டதற்குக் காரணம், முதனிலை நீண்ட தொழிற்பெயராவதுதான்  படு> பாடு, சுடு> சூடு என்பன காண்க.   

ஓதம் என்ற தனிச்சொல்லும் உண்டு. இந்தச் சொல்லை சொல்லாய்வில் ஈடும்படும் அன்பர்கள் ஆய்ந்துவெளியிடுவார்கள் என்று எதிர்நோக்குவோம், பிறகு பொருள்கூறி நம் ஆய்வினை வெளியிடுவோம்.  அவர்கள் குரோதம் என்ற சொல்லை ஆராயவேண்டியதில்லை. நாம் இங்கு அதனைச் செய்திருக்கிறோம். நூறாயிரக் கணக்கில் சொற்கள் இருப்பதால் ஒருவர் வெளியிட்ட கருத்தை மீண்டும் வேறுவடிவில் வெளியிடாமல் எல்லாச் சொற்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதுவே சரி.

குரோதம் என்ற சொல்லில் உள்ள றகரம் ரகரமாகும்.  காரணம் குறு என்ற அடி இப்போது இன்னொரு சொல்லின் பகுதியாகிவிட்டது. இவ்வாறு சொல்லமைப்பில் எழுத்து மாறிய சொற்களை முன் இடுகைகளில் காட்டியுள்ளோம்,  பட்டியலிட்டுக் கொள்ளவும்.

குரோதம் என்ற சொல்லினின்று குரோதித்தல் என்பது வினையாக்கமாகும்.

பெரும்பாலும் மனத்துள் வளர்த்துவைத்த பகையையே குரோதம் என்ற சொல் காட்டுகிறது,

குறுகிய வழியில் பிறரைப் பழித்துரை செய்தல் என்ற பொருளில் ஒது என்பதற்குப் பதிலாக ஓது என்ற சொல்லைப் பயன்படுத்தியும் ஆய்வுசெய்யக் கூடும்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

மெய்ப்பு: 05122024 1201


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.