Pages

புதன், 3 ஜனவரி, 2024

உக்கிரம் - சொல் ( "உக்கிரப் பெருவழுதி ")

 உக்கிரம் என்ற சொல் தமிழில் வழங்கி வருகிற சொல். ஆனால் உலக வழக்கில் இல்லை அல்லது குறைவே. சங்க இலக்கியத்தில் "உக்கிரப் பெருவழுதி"  என்பது போலும் பெயர்களைக் காண்கி றோம்.  நாம் உலக வழக்கு என்பது அன்றாடப் பயன்பாட்டினை.

எப்படி அமைந்தது இச்சொல் என்பதை அறிந்துகொண்டு பின்னர் சொல்லமைப்புப் பொருளைக் கண்டறிவோம்.

உக்கிரம் என்பது  பல்பொருள் ஒருசொல். பல பொருள் எனினும் , அவற்றுள் மிகுந்த சீற்றத்துடன் ஒன்றைச் செய்வது. அதாவது போரிடுவது போலும் செய்கையில் ஈடுபடும்போது தொய்வு சிறிதுமின்றிச் செயல்படுவது   என்பதும் ஒரு பொருளாகும். பாய்ச்சல், எதிரியை விரைந்து பணிவித்தல் முதலிய செய்கைகளும் இவற்றுள் அடங்கும்.

இஃது ஒரு சுட்டடிச் சொல்.  இதில் உகரம் இருக்கிறது.  உ  என்பது முன்னிருப்பது என்று பொருள்படும்.  அவன், இவன் மற்றும் உவன் என்பவற்றில் உவன் என்பது மொழியில் இன்னும் இருந்தாலும் பல புதிய வெளியீட்டு அகராதிகளில் இல்லை. உக்கிரத்துக்கு ஒப்பானது கனல் என்று கூறப்படும்.  "கனல் தெறிக்க" என்பார்கள்.  அதுபோன்ற நடப்புதான் உக்கிரம்.

உக்கிரம் என்ற சொல்லை இரு பகுதிகளாக்குவோம்.  உக்கு + இரம்.

உ+ கிரம் என்பது பிறழ்பிரிப்பு.

இரு+ அம் > இரம். (இரு - இருத்தல்).

உகரத்துக்கு அடுத்து நிற்பது  "கு"  என்ற சொல்தான்.  இது வேற்றுமை உருபாகவும் வரும்.   மதுரை +கு,  சென்னை+ கு  என்று காண்க.  உக்கிரம் என்ற சொல்லில் உருபாக வராமல்  சொல்லினுள் ஓர் அடைவாக வந்துள்ளது. சொல்லின் உள்ளுறைவாக வுள்ளது.  முன் இணைந்திருப்பது என்பதுதான் உக்கு என்பதன் பொருள்.

அடுத்துள்ளது இரம் என்பது. கிரம் என்பது இரம் என்பதிலிருந்து பிறழ்பிரிப்பால் வந்தது காண்க. இரு+அம் என்பதே இரம் என்றாம். ருகரத்தில் பின் நின்ற உகரம், கெட்டு ( மறைந்து)  ர் மெய்யானது அகரத்துடன் இணைந்து இம்மில் முடிந்தது.

இவற்றினின்று ஒரு மனிதற்குச் சீற்றத்துடன் கூடிய செயல் திறனும் விரைவும் முன்னணியில் வைத்தற்குரிய நடவடிக்கை  என்று பண்டை மக்கள் கருதியது தெளிவாகிறது.  அரசருக்கு இத்தகைய செயற்பாடு பெருமை அளித்தது. அதனால் உக்கிரம் கொண்ட அரசனைப் போற்றிப் பாடினர். இப்போது காவல்துறைஞனாய் இருந்தாலும் மக்களைப் பணிவன்புட.ன் கவனித்தல் வேண்டும் என்பதே போதிக்கப் படுகிறது. ஒருவேளை உக்கிரமாகச் செயல்படுவது படைஞர்கட்குப் பொருத்தமான செயல்பாடு ஆகலாம். சொல் உலக வழக்கிலிருந்து பின் சென்றமைக்கு வழக்குக்கான சூழ்நிலைகள் மாறியமைந்தமை ஒரு காரணமாகும். வெளிநாடு சென்று போரிடும் வீரர்கள் உள்ளடங்கிய காலை உக்கிரம் முதலிய குணங்களைக் காட்சிப் படுத்தும் வாய்ப்பை இழந்து அண்டையிலுள்ளோருடன் கலாய்க்கவே இயலுமன்றிப்  பிறவகை வாய்ப்புகள் இலராவர்.

 பிற பின்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.