Pages

சனி, 28 அக்டோபர், 2023

பாண்டு, பாண்டியர், மற்றும் தொடர்புடைய சொற்கள்.

 தலைப்பிற் கண்ட சொற்களுடன்  சிறிது நேரம் செலவிட்டு அவற்றை அறிந்துகொள்வோம்.

பாண்டியன் என்ற சொல்லைப்  "பண்டு " என்ற சொல்லுடன் சேர்த்துக் கவனித்த சில தமிழறிஞன்மார்  பாண்டிய அரசகுலம்  மிக்கப் பழமைவாய்ந்த  மரபாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.  இது மிகவும் சரியானதாகவே தோன்றுகின்றது.  எப்படி என்று வினவலாம்.   மூன்று முடியுடை வேந்தருள் ஒருவரே ஆதியில் இம்மரபினைத் தோற்றுவித்தவராக இருந்திருக்கவேண்டும். பாண்டியர்களே அவ்வாறு செய்து நிலைநாட்டினர். மேலும் முச்சங்கங்கள் நிலவின என்ற வரலாறும் பாண்டிய மன்னர்களை  முன்னிலைப்படுத்திய  வரலாறாகவே சொல்லப்படுகிறது. மேலும்  தென்னாடு என்பது நீண்ட கடற்கரையை உடையதாகவே இருந்துள்ளது.  இந்தியாவின் ஆதிக்குடிகள் என்போர்  பெரும்பாலும்  கடல்நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு,  மீனுணவு உட்கொண்டு வாழ்ந்தவர்களே. அவர்கள் தெய்வம் மீனவப் பெண்தகையான மீனாட்சியே.  அது உண்மையில் கடல்நாகரிகமே, அதாவது மீன்நாகரிகமே.  அவர்கள் நாட்டைப் பிடித்து ஆண்டாலும் மீனே அவர்களை ஆட்கொண்டு சிறந்தது.  நீரிலிருந்து துள்ளி எழுந்து விழும்போது,  இந்த மீன்கள் மின்னின,  மின்னுதல் >  மின் > மீன் என்பது முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.  தகைமையில் இம் மீன்கள் விண்மீன்களை ஒத்தன.  ஆறுகளிலும் மீன்கள் கிடைக்குமென்றாலும்  நிலம்சார்ந்து வாழ்ந்தோருக்கு  மற்ற உணவுகள் ஒத்த அளவிலோ மேலாகவோ கிட்டின.  இம் முன் மரபினரோவெனின் மீனைத் தம் கொடியிற் பொறித்தது இயல்பானதே ஆகும். இவர்களின்  முதல் ஆட்சித் தலைமை ஒரு பெண்ணாகவே இருந்தமையால்,  அவர்  மீனாட்சியம்மை யாகினார்.  வாழ்க மீனாட்சியம்மை மகிமை.

பாண் அடிச்சொல் வந்த மற்ற சொற்பயன்பாடுகள்: 

கேரளத்து மலைகளில் தமிழ்ப் பேசிய குறவர்கள்,  பாண்டிக்குறவர் எனப்பட்டனர்.  பாண்டி என்பது அவர்கள் பழங்குடிக் குறவர்கள் என்ற பொருட்டாகும்.  இதன்மூலம் பாண்டி என்ற சொல்லுக்குப் பழமைப் பொருள் உண்மை தெளிவாகிறது.  அதேபோல் பசு வகைகளிற் பழமையானவை பாண்டிப் பசு எனப்படுகிறது.  பாண்டிப்பசுவின் பால், மிக்க இனிமையுடையதாகும். 

பாண்டல்  ( பாண்டு+அல்)  என்பது பழையதாய் உதவாமற் போன பொருட்களைக் குறிக்க வழங்கும் சொல் .(  எடு:  பாண்டல்நெய்,  பாண்டல்கருவாடு, பாண்டல்மீன் எனக் காண்க.)  

இவற்றில் அடிச்சொல்:  பாண்டு. பாண்டு என்பது பண்டு என்பதன் நீட்சியே ஆகும்.  

பாண்டிகன் என்ற சொல்லோ கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி பாடுவோனைக் குறிக்கிறது.  இச்சொல்லில் வரும் பாண் என்ற அடிச்சொல் பண் > பாண் என்ற என்று பாட்டினைக் குறிக்கும் சொல்லுடன் பொருளியைபு உடையதாகின்றது.  இவ்வகைப் பாட்டுக்காரர்கள் நம் எண்ணத்திற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே இவ்வேலையைச் செய்துவந்தவர்களாய் இருக்கவேண்டும் என்று கூறுவதன்மூலம்  "பண்டு"   (பழங்காலம்) என்பதனோடு இணைக்கலாம். இம்முயற்சிக்கு  வேறு அடைவுகள் ஒன்றுமில்லை.  படித்தவர் சொல்கிறார் என்பதே தவிர, இதுவா அதுவா என்று முற்றுறக் கூற முடியாத நிலைமையே மிஞ்சும்.  இருபிறப்பி  இது என்றும் கூறி முடிக்கலாம்.  கொண்டுவந்த பண்களை கோயிலில் வீழ்த்திச்செல்பவர்கள் என்பது இச்சொல்லின் பொருளாதல் கூடும். இகுத்தல்  வீழ்த்துதல்,  இ - இங்கு, கு-  சேர்(ப்போன்).

பண்கள் அல்லது பாட்டுகள் முன்னரே எழுதப்பெற்று அல்லது புனையப்பட்டு மெட்டு அல்லது இராகம் அமைத்துப் பின்னரே பாடப்படும்.  புதிய பாடல்கள் புனைந்து பாடுவோர் பெரும்பொருள் வரவை எதிர்பார்ப்பதே இயல்பு.   ஆதலின் இயல்பான நிலையில் பண்கள் பழையவை.  இந்தப் பழமையிலிருந்து பண் -  பண்டு என்பதற்கு பழையது என்ற பொருள் வந்திருகிறது  என்பது தெளிவு.  பண் என்பது பண்ணுதல் அல்லது செய்தல் என்னும் வினையிலிருந்து வருவதால், பண்ணும் நேரம் வேறு,  அது உணவாயின் தின்னும் நேரம் வேறு.  பண்ணப்பட்ட நேரம்  முன் செல்கிறது. பயன்பட்ட நேரம் பின்வருகிறது.  இதுவே பெரும்பான்மையும் இயல்புமாம்.  ஆதலின் பண்+ து >  பண்டு என்று அமைக்க ப்பட்டது  முன் பண்ணினதையே பெரிதும் குறிக்கும்.  ஆதலின் பண். பண்டு என்பதன் பழமைத் தொடர்பை உணர்ந்துகொள்க.  ஆகவே பாண்டு என்பதும் அது.  பல பண்கள் நல்லனவாய் அமைந்தவை.  ஆதலின் பண்ணாகும்  என்று சொன்னால் நன்றாகும் என்பதும் பொருளாம்.

பண் பாண் பாண்டு என்பன தொடர்பில் பல உள்ளன.  எல்லாவற்றையும் இங்குக் கூற இயலவில்லை.  சிலவே கூறினோம்.'

வாக்கியம்:   பண் அது பழைமை:   இப்போது அது என்பதற்குத் து என்ற இறுதியை மட்டும் விகுதியாக்கினால்:-  பண் + து >  பண்டு, (பழமை). பண்டு > பாண்டு.  பண் பாடுவோர் பாணர்.  ( பண்- பாண் கண்டுகொள்க.)  பாண்டு+ இ+ அர் >  பாண்டியர் ஆகும்.  ( பழங்காலத்திலிருந்து , இ - இங்கு,  அர் - இருப்பவர்(கள்).  )   பண்ணுதல் -  வினைச்சொல்.

அறிக மகிழ

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.