Pages

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தகு, தாக்கு , தகுதி முதலியவை.

தகுதி என்ற சொல்லை நாம் சிந்தனை என்னும் உலையிலிட்டு மசித்து நோக்குங்கால்,  அது எந்தச் சூழ்நிலையில் எழுந்தது என்பது சற்றும் புரிந்துகொள்ள இயலாத தொலைவிலே இருப்பதாகவே உணரமுடிகின்றது. இது எவ்வாறு எழுந்திருக்கக் கூடும் என்பது உடனே புரியவில்லை.

தகு என்பதில் ஈரெழுத்துக்களே உள்ளன.  இவற்றுள் கு என்ற எழுத்தைப் பார்ப்போம்.  கு என்பது வேற்றுமை உருபாக மொழியில் இயல்கின்றது.   மதுரைக்கு ( மதுரைக்குப் போனான் ),   சோற்றுக்கு (த்  திண்டாடினான்), பாட்டுக்கு  (ப்   பாட்டு),  வண்டிக்கு  ( மாடு வேண்டும் ) என்று  பல்வேறு பொருட்சாயல்களில் மக்கள்  "கு"  என்ற உருபினைப் பயன்படுத்துகின்றனர். இது செல்லிடம் அல்லது சேர்விடம் காட்டும் வேற்றுமை.  சேர்தல், அடைதல் முதலிய இயக்கங்களைக் காட்டும்  வேற்றுமையாக இருப்பதால், கு என்ற பழஞ்சொல் வரும் கு  என்பது மூலச்சொல்.   குடும்பம், கூடுதல் என்பனவெல்லாம் இச்சொல்லின் வளர்ச்சிகளே ஆகும். குட்டு என்ற சொல்லில் மடக்கிய கைவிரல்கள் ஒரு தலையின்மேல்  சென்றிடித்தல் ( சென்றடைவு)  பொருளாதல் காண்க. 

நான்காகுவதே,
கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப் பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே. 

மேலும்:

அதற்கு வினை உடைமையின் அதற்கு உடம்படுதலின்
அதற்குப் படு பொருளின் அது ஆகு கிளவியின்
அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று
அப் பொருட் கிளவியும் அதன் பால என்மனார்.

என்கின்றது தொல்காப்பியம்.  நான்கு ஆகுவதுவே  என்றது நான்காம் வேற்றுமையை.
சொல்லதிகாரத்துட் காண்க.


கு என்பது ஒரு தமிழ் மூலச்சொல். அது பேச்சிலும் எழுத்திலும் இருந்தது.  அது பொருளை வேற்றுமைப் படுத்துகிறது என்று கண்டுபிடித்து,  அதை உருபு என்று வகைப்படுத்தினான் பின் வந்த இலக்கணியன். எவனாக இருந்தாலும்  அவன் சொன்னது பின் வந்தது. அவன் சொல்லுமுன்பே அது மக்களின் பேச்சில் இருந்தது என்பதுதான் உண்மை. மயங்குதல் ஆகாது.

கு போன்ற துணைச்சொற்களைப் பின் இணைத்துப் பேசுதல் தமிழன் பேச்சு நெறியாகும்.


கண் என்ற உருபு.

நன்னூலார் கு என்ற உருபினைப் பற்றி நமக்கு அறிவிப்பது,  பெரும்பாலும் எப்போது வல்லெழுத்து மிக்கு வரும், எப்போது அவ்வாறு வராது என்பதைத் தெளிவிக்கவே ஆகும்.  கசடதபற  வல்லெழுத்துக்கள்.  புணர்ச்சியில் இவற்றின் மெய்களே தோன்றும்.  கனி + கண்  எனபதில்,  கனி என்னும் சொல்லும் கண் என்ற உருபும் இணைய,  கனிக்கண்  ( கனிக்கண் விதை)  என்று ககர மெய் தோன்றியது. இது உருபு சொல்லுடன் இணைந்த புணர்ச்சி யாதலின்,  வேற்றுமைப் புணர்ச்சி.  இதுவே "செங்கனி" என்ற பெயருடைய ஒரு பெண்ணைக் குறிப்பதானால்,  "செங்கனிகண் சீர் (தந்த நிகழ்வு)"  என, வலிமிகாமல் இயல்பாகும்.  வள்ளி + கண் என்பதும் வள்ளிக்கண் என்று வாராமல் வள்ளிகண் என்றே வருவதாம். செங்கனி என்பது ஒரு பெண்ணின் பெயராக இல்லாமல் சிவப்பான ஒரு கனியைக் குறித்தால் அப்போது செங்கனிக்கண் என்று வலிமிக்கு வரும். தமிழில் இவ்வாறிருக்க,  வேறு சில மொழிகளில் சொற்களின் இணைப்பினால் வலியேதும் மிகுவதில்லை.  இங்கு கண் என்பது உருபு. இது வரும் வேற்றுமை ஏழாம் வேற்றுமை. இதை இட வேற்றுமை என்று நினைவில்  வைத்துக்கொள்ளலாம். 

242.நன்னூல்:  

ஒற்றுயிர் முதலீற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே .

இந்தக் " கண்"  என்ற உருபு,   கண் என்ற விழியைக் குறிக்காது .   இது கு+அண் என்ற இரு சிறுவடிவங்களின் கூட்டே ஆகும்.  அண் என்பது அருகில் என்று பொருள்படுவது. ( அண்> அண்மை). ஆனால் கண் என்பதற்கு இடம் என்ற பொருளும் உள்ளது.   கு+ அண் என்பன கூடி நின்று சொல்லானதே இதன் காரணம் ஆகும். குஅண் > கண். இதை புரிந்துகொள்ள,  அண்டிச் சேர்தல் என்று உரைத்தல் எளிதாக்கமாகும்.  கு என்பது கூடுதல் என்பதன் மூலச்சொல்.

தகுதி என்பதனோடு தொடர்புடைய வினைச்சொல்லே தகு என்பது. இவற்றுக்கும்  தாக்கு என்ற வினைக்கும் பொருள் தொடர்பு உள்ளது.

பழங்கால மனிதன்   மேலாண்மையின் பொருட்டு, விலங்குகளினோடும் மனிதர் பிறரோடும் போராடியே வாழ்வைக் கழித்தான்.  இப்போராட்டங்களின்போது, அவன் ஈட்டிய வெற்றியின் வாயிலாகவே அவனுக்கு மதிப்பும் மேன்மையும்  உண்டாயிற்று.  ஆகவே தகு, தாக்கு என்பன உறவுள்ளவை என்பதை உணரலாம்.

தகு என்பதில் அடிச்சொல் அல்லது வினைப்பகுதி  த என்பதே.  மிகு என்பதில் மி என்பது போலுமே இது. மி எனற்பாலது மே என்பதனோடு தொடர்புகொண்டதாகும். த என்பதும் தா என்பதும் ஒன்றே.  தா என்றது - நீண்ட போரின்பின்  த என்ற தகுதி வாய்த்தது. தாக்குதலின்பின்  தன் என்ற நிலைக்கு,  கௌரவம் வந்தது.  கா+ உர(ம்)+ அம் =  காவுர +அம் - காவுரவம் > கவுரவம் ஆகும். காத்துக்கொள்வதற்கு அவன் தாக்குதல் மேற்கொண்டான்.  தாக்குதலினால்,  அவன் தன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டான்.  "தகு<  தக்க< தாக்க"

தகு > தாக்கு

தாக்கு > தக்க > தக. 

தடு > தடி.

தடு > தட்டு.  தடு- தடை.

தன்பால் வரும் துன்பத்தைத் தடுத்துக்கொள்ள முடியாதவன், தன் பொருளையும் இழத்தல் கூடும்.

சுருக்கி எழுதியுள்ளபடியால், விளக்கம் வேண்டின் பின்னூட்டம் செய்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



புதன், 19 ஏப்ரல், 2023

சுவாஹா என்பதன் பொருள்.

 சுவாகா  (  சுவாஹா)  என்று மந்திரத்தின் இறுதியில் சொல்லப்படுவது, "உண்மை நலமே  ஆகுக" என்பதுபோலும்   ஓர் ஆக்கம் தரும் சொல்லாகும். இதுவே ஒரு தெய்வம் என்று சொல்வோருமுண்டு.  இச்  சொல் அல்லது சொற்றொடர்  ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில்  பொருள்காண்போரால்  உணர்த்தப் பெறுகிறது.

இது தமிழில் இவ்வாறு உருவாகுதல் காண்க.

சு   <   சுவ (  ஸ்வா )   <  சொ.   (  சொந்தம் )

வாகா <   ஆக    (   ஆகட்டும் )     ஆதல் வேண்டுகிறேன், வேண்டுகிறோம்..

ஆகவே, நாம் வேண்டும் கடவுளுக்கு இவை யாவும் ( படையல் )  சொந்தமானவையாய்   ஆகட்டும்.

அதாவது,  சென்றுசேர்க என்பது.

இவையாவும் உமவாக.

தமிழில் உமது என்பது ஒருமை,  உம  என்பதுதான் பன்மை.  ஆனால் உம என்பது வழக்கில் இல்லை.  இக்காலத் தமிழில் உம்மவை என்றால் ஒத்துவரக்கூடியதாய் இருக்கும்,.  இப்படி அறிவதன் மூலம்,  ஒரு காலத்தில் இருந்து பின் ஒழிந்தவையையும் உணர முடியும்.  ஒழிந்த மட்டைகளில் சுவடுகள் மரத்தில் காணப்படுதல் போன்றதே இது.

சொந்தம் -   சொ  

சொ + அம் >  சொயம்  ( இங்கு யகர உடம்படுமெய் தோன்றியது ). > சுயம் உடம்படுமெய்  இல்லாவிடின்  சொ+ அம் >  சொ + ம் >  சொம்  ஆகும்.

சொம்  என்றால் சொத்து. சொம் என்பது பழந்தமிழ்.  அகரவரிசைகளில் இல்லாமலும் இருக்கலாம். பலவற்றில் இல்லை.

பூசாரி மொழியில் சோகா அல்லது ஸ்வாகா.

வீட்டு மொழியில் சொ(ந்தமா)க>  சோ ஹா.  அதுவே  ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.


ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

தெய்வப் பற்று செழிக்கப் பாடுபட்டவர்,

தெய்வப்பற்று மிகப் பாடுபட்டவருக்கு ஆலயச் சார்பில் பிரார்த்தனை.


 இன்றுநடை  பெற்ற  இரங்கு  பதினாறில்

நன்றுபலர்  சேர்ந்து  நலம்தந்தார் ---- ஒன்றிணைந்து

நாடிவன  சாபுகழில்  நாடுதெய்வப்   பற்றுயர

ஓடுபுனல் பாடுமுயர்  வாம்.

பொருள்:
திருமதி  வனஜா அம்மையாருக்கு 18.4. 2023ல்  ஆத்ம சாந்திப் பூசை
நடந்தேறியது.   கலந்து கொண்ட  அவர்  தொண்டு  அறிந்தோர்  அவர்தம்
கடின உழைப்பினை நினைவுகூர்ந்தனர்.  தெய்வப்பற்று மேம்பட அவர் பாடுபட்டார்.  ஓடையில் சலசலவென்று ஓடும் நீரும்  அவர்தம் உயர் பண்பினை பாடிக்கொண்டு ஓடுகின்றது என்கிறது இப்பாடல்.

பதினாறு -  ஆத்மசாந்தி

இரங்கு-   பிரிவுத் துன்பம் அல்லது கையறுநிலை.

பலர் சேர்ந்து -   திரளான வருகை.  ஒன்றிணைந்து -  கூடினர் என்பதும் அது.

வனசா -  வனஜா  (  பெயர்)

தெய்வப் பற்றுயர -   இது பத்தி மார்க்கம் செழித்ததை உணர்த்துகிறது,

ஓடுபுனல்    ஓடும் ஓடையின்  நீர்.

புதன், 12 ஏப்ரல், 2023

செயலால் மேம்படும் துன்பம்

 பிறமதத்தான் பின்சென்ற பெண்திசை  மாற்றி


உறுமதத்தின் உள்ளிருத்தி   னாலும்  -----பெறுமதியும்

மேம்படுமோ  தொல்லைதான்  மேம்படுத்தி விட்டபழி 

தாம்படவே  நோய்மிகவே    ஆம்.


ஒருவன்பின் சென்ற பெண்ணை மீட்டுக் கொணர்ந்தாலும்  அவள் பிறந்த வீட்டுக்கு நலம் சேர்க்கமாட்டாதவள் என்பது கருத்து.  (இது பெரும்பான்மை பற்றிய கருத்து.)


பிறமதம் -  நீங்கள் சாராத வேறுமதம்.
உறுமதம் -  உங்கள் மதம்
பெறுமதி  -  அடையும்  அறிவு
(மேம்படுமோ  தொல்லை  மேம்படுத்தி விட்டபழி 
தாம்படவே  --   வழிமாற்றியவன் துன்புறுமாறு)
நோய்மிகவே    ஆம்.  -  நோய் கூடுதல்  ஆகும்.

இப்பாடலின் நோக்கம் பிறமதம் சார்ந்தோரை குறைத்து மதிப்பிடுவ தன்று. பல்வேறு பழிகள் தோன்றி அவர்களைப் பாதிக்கக் ]காண்கிறோம் என்பதுதான். தொல்லைகள் ஏற்படுகின்றன என்பது தான் நம் முன் ஏற்படும் காட்சி. இதையே இப்பாடல் பதிவு செய்கின்றது.

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

புண்டரீகம் புண்டரிகம் என்பவை

இன்று புண்டரீகம் என்ற சொல்லை அறிந்து கொள்வோம்.  இந்தச் சொல்,  புண்டரிகம் என்று எழுதப்படும்.

தமிழர் கலைநெறியிலும் ( culture  )  இந்திய துணைக்கண்டத்தின் ஏனை வாழ்நெறிகளிலும் தாமரை, அல்லி  முதலிய நீர்நிலை மலர்களுக்கு விழவுகொள் உயர்நிலை தெளிவாகக் காணப்படுகின்றது.

தாமரையால் வரும் கவர்ச்சியில் அது புட்களை ஈர்த்துக்கொள்வது அறிந்துணரற் பாலது, இம்மலர் சிறிய வகைப் பறவைகளால் பெரிதும் விரும்பப்படுவதாம். அதனால் இது புண்டரிகம் என்னும் பெயர் பெற்றது.   எவ்வாறு என்று பார்ப்போம். 

புள் என்பது பறவைக்கு இன்னொரு பெயர்.

"புள்-  அது   அருகில் ஈர்க்கும் மலர்.  "   இது சொல்லாக்கக் கருத்து.

புள் அ(து) அரு  ஈர்க்கு  அம்,

புள் து அரு ஈர்க்கு  அம்

புண்டரீ (ர்) கு  அம்

புண்டரீகம் என்று ஒருசொல்லாய் அமைந்தவாறு காண்க.  அம் என்பது விகுதி.  இங்கு >  இகு ( இடைக்குறை) >  இகு அம் >  இகம்.   பொருள்:  இங்கு அமைவது.   ஈ = இ,  இரண்டும் ஒன்றுதான்.  சுட்டடிகள்.   ஈ என்பதே குறுகி இ என்றானது.

இன்னொரு பொருளும்  இச்சொல்  தரவல்லது.  அப்பொருள்  தொழுநோய் என்பது.

புண் து  அரு ஈ  கு  அம்,  

ஈ என்பது இ என்ற சுட்டெனினும்,  ஈ > ஈவது அல்லது தருவது எனற் பொருட்டு எனினும் ஒக்கும், 

பல புண்கள் உடலிடத்துத் தோன்றுமாறு ஏற்படும் நோய்  தொழுநோய்  ஆகும்,

இங்கு அரு(கில்)  என்பதற்கு  அடுத்து உடலில்  அல்லது அடுத்தடுத்து உடலில் என்று பொருள்கொள்ளவேண்டும்.

புண் தரு ஈ  கு அம் என்றும் கோடல் ஒக்கும். தரு என்பதும் ஈ என்பதும்  ஒருபொருளனவாய் இங்குக் கொள்ளுதல் ஏலாமையின்,  ஈ  என்பது இ  ( இங்கு)  என்க.


அறிக மகிழ்க.

 மெய்ப்பு  பின்னர்






சனி, 8 ஏப்ரல், 2023

நினைவெலாம் துர்க்கை அம்மன்

 

படத்தில்: திருமதி வனஜா  இளந்தலைமுறை மகளிருடன்.


துர்க்கை அம்மனே தூய நினைவெலாம்
துர்க்கை அம்மனே தூங்கும் பொழுதிலும்
துர்க்கை அம்மனைத் தூக்கி வினைசெயும்
துர்க்கை மாமகள் மறைந்த தெங்ஙனே?

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

பாட்டி பிள்ளை பேரப்பிள்ளைகளுடன்

 





யாருடன்  பேசுவ  தெனினும் மகிழ்வுதான்
சீருடன் சொல்வார் தெய்வக் கதைகளை!
ஏரியின் நீருடன்  இசைந்திடும்  குளிர்போல
வாரியே  வழங்குவார்  வண்மை நாவினார்.


(இவர் தெய்வக் கதைகளைப்   பேசி ம்கிழ்வார்.
இக்கதைகள் குளிர்ச்சி தரும் கேட்பார் மனத்துக்குள். என்பது பொருள்)