தென்றலதும் உலவிவரும் தேகநலம் தருமே
அன்றலரும் பன்மலர்கள் ஊரெங்கும் மணமே
என்றெனினும் மாலையிலே இனிதாக உலவிச்
சென்றுவரும் அரசர்களும் அரசிகளும் பலரே!
மன்றினிலும் வந்துலவும் மாருதமோ இலதே
நின்றுலவும் நோய்நுண்மி நெருங்கியத னாலே
வென்றிடினும் ஓய்வடைந்தோம் சின்னாட்கள் கேளீர்
உலவுதலில் ஒற்றுமையே பிறவற்றில் இலையே.
சிலநாட்களாய் சளிபிடித்தலினால் தொல்லையாகி, எதையும் எழுத இயல்வில்லை..
அதைக் கூறும் கவிதை இது.
தென்றலென்பது, சுற்றிவந்து இனிதாக வீசி அதனால் தேகநலம் தருகிறது. அரசு அதிகாரம் உடையவர்கள், அஃது இல்லாதோர் எல்லோரும் அந்நலம் நுகர்வர். ஆனால் என்னைப் பீடித்ததோ, உலவும் தென்றலன்று. அது நோய்நுண்மிகளை அள்ளிவந்த காற்றுப்போல் தெரிகிறது. அதை இறுதியில் வென்றிட்ட போதும் என்னுடைய அன்றாட நடவடிக்கைகள் ஓய்வு அடைந்துவிட்டன. சில நாட்கள் அங்கனம் கடந்தன. உலவுதலைச் செய்வன, 1. தென்றல். அதுமட்டுமோ ? 2 நோய் நுண்மிகளும்தாம்.
இறுதியடி தவிர. ஏனை அடிகளிலெல்லாம் எதுகை வரும்படி அமைந்துள்ளது இக்கவிதை.
தென்றலதும் , அன்றலரும், என்றெனினும், சென்றுவரும், மன்றினிலும். நின்றுலவும், வென்றிடினும் என்று எதுகைகளே அடுக்கப்பட்டுள்ளன. நுகர்ந்து இன்புறுவீர்.
உடலானது, தேய்ந்தழியும் தன்மை உடையது. அதனாலே அது தேகமெனப்பட்டது. தேய்> தே+கு+அம், தேகம். தேய்தல் தன்மையது. "அவுணர்த் தேய்த்த" என்ற குறுந்தொகைத் தொடரில், அரக்கரை அழித்த என்ற பொருள் பெறப்பட்டது போல், தேய்தல், தேய்த்தல் என்ற இருசொற்களிலும் அழிதற்பொருள் பெறப்படும்.
அவுணர் என்பது ஆ+ உண்+ அர் > மாட்டிறைச்சி உண்டோர் (படை). பெரும்பாலும் ஆ உண்டோர். ஆ என்பது பின்னாளில் அ என்று குறிலானது. இவ்வாறு அகர ஆகாரக் குறுக்கம் நீட்டல் வந்த சொற்களைப் பழைய இடுகைகளைப் படித்து பட்டியலிட்டுக் கொள்ளவும். எப்போதும் அவித்த அல்லது ஆவிபரியும் உணவினையே உண்டவர்கள் என்பதும் கொள்ளலாம்.
அவி > ஆவி. இங்கு ஆவி என்பது அவி என்ற வினையிற் பிறந்து நீண்டு திரிந்த தொழிற்பெயர் என்பதும் அறிக. காய் பழங்களையே உண்ட இயற்கை உணவினர் ஞானிகள் என்னும் அறிவாளிகள். அவுணர் என்பது பல்பிறப்பிச் சொல்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.