Pages

ஞாயிறு, 15 மே, 2022

மாளிகை மகளிர் தொடர்பு மற்றும் பாஞ்சாலி



நெடிலாயிருக்கும் ஒரு சொல்லின் முதலெழுத்து, பெயராய் அமைகையில் குறிலாய் மாறிவிடுதலைப் பல சொற்களில் கண்டு நாம் பல இடுகைகளில் விளக்கியிருக்கிறோம். இதை ஒரு பெருநிகழ்வாகக் காட்டிய வேறு நூல்களை யாம் காணவில்லை; இருப்பின் அவற்றின் பெயர்களைப் பின்னுட்டமிடுங்கள்.

நெடில் அடிச்சொல்லினெழுத்து குறிலானதை முன் இடுகைகளில், மேற்குறித்தபடி காண்க.  இவ்வாறே  குறிலும் நெடிலாகும்.


"மகன் மகள் உடையவனையே அல்லது உடையவளையே மன்பதை மதித்தது. மன்பதை எனில் சமுதாயம், குமுகாயம். மகன் உடையவன் பெரியவன். அவனால்தான் நாலைந்து மகன்களையும் வயலுக்கு அனுப்பிப் பாடுபடச் செய்ய முடியும். எண்ணிக்கை இருந்தால்தானே படைவலிமை. ஆளிருந்தால்தானே உழைக்கமுடியும். உழுதல் முடியும். இதனால் மக என்ற சொல் திரிந்து மா என்றாகும். அப்போது மா என்பது பெரிது என்றும் பொருள்தரும். மக என்பது மகா, மஹா என்றும் திரியும்."

மேற்கண்டபடி அவ்விடுகையில் வரைந்திருந்ததை அறிவீர்.

தமிழர் வாழ்ந்த நீண்ட நெடுங்காலத்தில் ஒரு பகுதியில்  ஆணாதிக்கமாகவும் இன்னொரு பகுதியில் பெண்ணாதிக்கமாகவும் இருந்துள்ளது சொல்லாய்விலிருந்து தெரிகிறது.  பாஞ்சாலி தமிழ்நாட்டில் வாழ்ந்தவளல்லள்,  பக்கத்திலுள்ள நாட்டில் வாழ்ந்தவள் என்று கதைகள் கூறினாலும்,  பாஞ்சாலி என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் பொருள் உரைக்கலாம். அதிலொன்று:

பால் - பகுதி.
பால்+ மை > பான்மை.   பான்மை + சால் +  இ  > பான்சாலி>  பாஞ்சாலி ஆகிறது.
பான்மையான  ( பகுதிகளான) வாழ்வுடையவன்.
பகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்தலும் , ஒரேகாலத்தியல்தலும் என இருவகையாக நிகழும்.

பாஞ்சாலிகாலம் பெண்ணாதிக்க காலமாகும்.

பாஞ்சாலி என்பது தமிழ்மூலங்களிலிருந்து விளைந்த சொல்லென்று இது காட்டும்.

அப்பனின் பெயரின்றி  அம்மாவின் பெயர் பிள்ளைக்கு முன்பெயராய் வருமுறையும் பெண்ணாதிக்க முறையே.  இது நாள்வரை இம்முறை மக்கள்  சிலரிடைத் தொடர்ந்துள்ளது.

மக என்ற சொல் மா என்று திரிந்தது என்று கூறுங்கால்,  மக என்ற சொல்லில் பால்தெரிவு  இல்லை.  மகள்,, மகன் என்ற சொல்லிலேதான் பால்தெரிகின்றது. இதுபோலவே,  மகான் என்பதில்  ஆன் விகுதி வருவதால்,  ஆண்பால் தெரிகின்றது.  மகான் என்பது உண்மையில் "பெருமகன்" என்பதே ஆகும். மகான் என்பது சிறப்பு பொருள் அடைந்த பின்பு,  பெருமகன் என்ற சொல் சற்றே வேறு பொருட்சாயலை உணர்த்தத் தேவைப்பட்டது. அதுவே மீண்டும் உயர்நிலைப் பொருள் பெற்றகாலை.  பெருமான் என்று திரிந்து உன்னதம் உணர்த்தியது.  எ-டு:  ஏசுபெருமான்,  நபிபெருமான்,  வள்ளுவப்பெருமான்.

அரசியரில், மகவை உடைய அரசியே உயர்வாக உணரப்பட்டாள்.  அவள் மகவரசி என்று போற்றப்பட்டாள்.  இது திரிந்து " மகராசி" ஆனது.  மகவு உடைய அரசன்: " மகராசன்" ( மகவரசன்).  இதில் வரும் மகவென்ற சொல், ஆண்மகவு என்று எடுத்துக்கொள்ளலாம்.  ஆணுக்குப் பட்டம் கட்டும் முறை வழக்கிலிருந்த காலங்களில்.  மக என்பதே மகா, மஹா ஆயிற்று.

சமுதாயம் ( குமுகாயம்) குறிக்கும்  மன்பதை என்ற சொல் ம(க)ன் பதி ஐ >  மன்பதை என்று அமைந்திருத்தலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே  ஆகும்.  மகன் பதிவாய் உள்ள கூட்டமே மன்பதை அல்லது சமுதாயம் ( குமுகம் )  ஆகும்.

மகளிர் இருந்த பெருமனையே  மகள் > மகளிகை >  மாளிகை என்று அமைந்தது என்பதும் ஏற்புடைய விளக்கமே.  அவர்கள் பயன்படுத்திய மணமுடைய சாந்து  "  மாளிகைச்சாந்து"  என்று கூறப்பட்டது.  கன்னிமாடம் என்பது இன்னொரு பெயர்.   இவற்றை இனி ஆய்வு செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


குறிப்புகள்:

பதி பதிதல் -  வாழ்தல். பதி > வதி > வாழ்தல். வாழ்தற்பொருள் மன்பதை என்ற சொல்லில் கிடைப்பது.  ப-வ போலி.

பல் - வல் - மல்.  இவை வலிமை குறிப்பன.  வலிமையாகக் கட்டப்பட்டது என்ற பொருளில்,  மல்> மள் > மாள் > மாளிகை என்றும் காட்டலாம்.  சுற்றாக உள்ளது என்பதுதவிர,  வழுவில்லை.

இகுதல் -  இறங்குதற் கருத்து.  இறங்குமிடம்  இகை எனப்பட்டது.  இகு+ ஐ.  சுட்டுச்சொல் விளக்கம்:  இ - இங்கு.  கு-  சேர்விடம் குறிக்கும் சொல்.  "மகளிர் இங்கு வந்து சேர்வர்"  என்பது.  ஆகவே மகளிர் கூடுமிடமாகத் தொடங்கி, பின் பொதுவாக யாரும் தங்குமிடம் என்று பொருள் விரிந்தது என்று உணர்க, அரசிளங்குமரிகள் அவர்களின் தோழிகள் வேறு பெருமாட்டிகள்  முதலானோர் வந்து தங்கி உடைமாற்று ஒப்பனை முதலியன செய்துகொண்ட இடமென்று தெரிகிறது.  ஏனைப் பயன்பாடுகளும் சேர்ந்துகொண்டிருக்கும். இப்பொருள் பின் மாறிவிட்டது.  தேவரடியாள் என்பது போல. அரண்மனை தவிர அவர்கட்கு பிற வசதி இடங்கள் தேவைப்பட்டிருக்கும். வேறு உயர்ந்த பெண்களுக்கும் இத்தகைய இடம் வேண்டுமென்பது கூறவேண்டியதில்லை.

வண்டி வாகனங்களில் வந்து இறங்கிச் செல்வதால்  இறங்குதற் கருத்துடைய விகுதி மிக்கப் பொருத்தமானது.

இன்னும் வாசிக்க:


மக என்பதை விரித்து ஆய்கிறது,  இவ்விடுகை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.