[ ] இந்தக் குறியிட்ட பாகிகளை ( பத்தி அல்லது பராகிராப்)களை) தவிர்த்துவிடலாம். நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள.
[இப்போது சில சொற்களுடன் விளையாடுவோம். விளையாடினாலும் ஆய்வு செய்தாலும் எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்; அல்லது எல்லாம் ஒரு ஆய்வுதான். வேறுபாடுகள் யாவை, ஒற்றுமைகள் யாவை என்று பட்டியலிட்டுக்கொண்டு, இதுதான் சரி அதுதான் சரி என்று வாதடினாலும் எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்.]
[இல்லையில்லை, இவ்வாறெல்லாம் குழப்புதல் கூடாது. விளை என்றால் விழை என்பதுதான். விழை என்றால் விரும்புவது. அப்படியானால் ஆய்வு என்பது விருப்பமில்லாமல் செய்வதென்று ஆகிறது? இதெல்லாம் பொருந்தவில்லை. ஆய்வில் விரும்புவதும் இல்லை, வெறுப்பதும் இல்லை என்பீரோ?]
இதை உங்களிடம் விட்டுவிடுகிறோம். யாம் விலகிக்கொள்கிறோம். ஆனால் உங்களையும் சேர்த்துக்கொண்டபடி,
கண்டம் என்பது யாது, சாகரம் என்பது யாது ஆய்வுசெய்வோம்.
சாகரங்களில் இருப்பவை கண்டங்கள். கண்டங்களைச் சுற்றி இருப்பவை சாகரங்கள்.
சாகரம் என்பது கடல். கடந்து செல்ல முடியாவிட்டால் அது கடல்: கட+ அல்.
எதையும் கடந்து அப்பால் செல்வது என்பது மிகமிகப் பழங்காலத்து மனிதனுக்குக் கடினமாக இருந்தது. இந்தச் சொல்லை அவன் தமிழில் எப்போது அமைத்துக்கொண்டான் என்றால், கடப்பது எளிதன்று என்று நெஞ்சம் கலங்கிக் கொண்டிருந்த அந்தப் பழைய காலத்தில்தான்.. அப்போது மாட்டுவண்டியைக் கண்டுபிடித்து விட்டானோ என்னவோ? மாட்டுவண்டியைப் போல் கப்பலை எளிதாக நீரில் செலுத்தமுடியவில்லை. இது அவன் கவலையாக அப்போது இருந்திருக்கலாம்.
பழங்கால மனிதர்கள் கருவிகள் பலவற்றை அறியாத பிற்போக்கில் பெரியவர்கள். அவர்கள் நம் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் நம் தாத்தாவின் .......தாத்தாவின் தாத்தாக்கள். அவர்களை இங்கு வணங்கி மேலும் ஒன்றிரண்டு சொல்வோம். நம்மை நம் பிற்காலத்தோர் பழித்துவிடக்கூடாது, எல்லாவற்றையும் அவர்களே கண்டுபிடித்திருந்தால் நாம் எதைத்தான் கண்டுபிடித்துப் பெருமைப்படுவது. அவர்களுக்குத் அன்று தேவை இல்லாமையாலோ என்னவோ நம்மிடம் விட்டுப்போய் நமக்கும் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். பேரன் பேத்திகட்கு வாய்ப்புத் தருவது அவர்கள் கடமையும் பெருமையும் ஆகும்.
அவர்கள் கப்பலைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, பலர் கடல் அருகில் போகாதே, சாவு நிச்சயம் என்று எச்சரிப்பது வழக்கமாய் இருந்தது. சிலர் நீந்தினார்கள். அருகில் சென்றால் சாவுக்கு வாய்ப்பு மிகுதி என்பது தோன்ற, சா+ கு + அரு + அம் > சாகரம் என்று கடலைக் குறித்தனர். அருகில் சென்றால் ஒருவேளை சாக நேரிடலாம்!
கடலின் அருகில் போனால் அது ஆபத்து என்று பயந்தவர்கள், பின்னர் கப்பலை அமைதது அது கடந்துசெல்ல உதவியானதால் கடப்பல் என்று பெயரிட, அதை நாளடைவில் சுருக்கி க் கப்பல் என்று ஆக்கி இன்றுவரை நாம் அச்சொல்லை வழங்கிக்கொண்டிருக்கிறோம். கட> கடப்பு > கடப்பல் , இது இடைக்குறைந்து கப்பலானது. இந்தச் சொல் புலவர் அமைத்தன்று. கப்பல் என்பது அதைச் செய்து அதில் தைரியமாக மிதந்தவன் வனைந்தது.
இவைபோல்வன எல்லாம் ஒரு கண்டத்தில் நடந்துகொண்டிருப்பின் அது இயல்புதான். கண்டு என்ற வினை எச்சத்தை விடுங்கள். நூல்கண்டை எடுத்துக்கொள்ளுங்கள். நூலைச் சுற்றி அதைக் கட்டிபோல ஆக்கிவைத்தால் அது நூல்கண்டு. அது ஒரு துண்டுதான். கடித்தால் சிலபொருள்கள் துண்டாகவோ துண்டுகளாகவோ ஆகிவிடுகின்றன. பல்லே மனிதன் முதல் ஆயுதம் ஆனபடியினால், கடி என்ற சொல்லும் கண்டு என்பதும் உறவுடைய சொற்கள்.
கடு + இ > கடி. இ என்றால் இங்கு (இ) துண்டாக்குவது.. இங்கு என்றது வாயை அல்லது கடிப்பது போல் இயங்கும் ஒன்றை/ சப்பாத்து கூடக் கடிக்கும் என்பர்.
கடு+ ஐ > மிகவும் சிறிய துண்டுகளாக ஒட்டுமாறு ஆக்கிவைப்பது. எ-டு கடைந்த கீரை.
கடு > கண்டு - துண்டாக இருப்பது.
இது அடு > அண்டு என்ற சொல் போல அமைந்தது. அதுதான் அதன் அமைப்பு மற்றும் திரிபு விதி. இடையில் ஒரு மெய் தோன்றி ( ண் ) வினை அல்லது உரிச்சொற்கள் பெயர்களாகும் முறை.
இதை இன்னொரு நாள் விரிவாக அறிந்துகொள்வோம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.