Pages

புதன், 16 பிப்ரவரி, 2022

மரியாதைராமன்

" எனபடுவது யாதெனின்" என்ற இருசொற்களையும் புணர்த்தினால்,  "எனப்படுவ   தியாதெனின்" என்று,  து> தி என மாறிவிடும்.  இது தமிழினியல்பு.  ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஒரு மாணவி  "தியாதெனின்" என்ற சொல்லை அகரவரிசையில் தேடிக் காணாமல்  ஓர்  இணைய வலைத்தளத்திற்கு எழுதினார்.  தமிழ் எளிதான மொழியன்று என்பதுதான் நாம் இங்குக் கூறுவது. கொஞ்சக் காலம் தமிழுடன் நெருக்கம் கொண்டிருந்தாலன்றி இதுபோன்றவை எளிதில் புரிவதில்லை.

மேற்கண்ட புணர்ச்சியில் ஈற்று உகரம் இகரமாகிவிட்டது.  மிகவும் நுட்பமான ஒலிநூல் அறிவுடையோர் தமிழ்-  சமத்கிருத மொழிகளுடையோர்.

இப்போது மரியாதை என்ற சொல்லிலும் இத்தகு மாற்றம் உள்ளடங்கிக் கிடப்பதை அறியவேண்டும்.

மருவு, யாத்து, ஐ என்ற மூன்று துணிப்புகளா  னியன்றதே  மரியாதை என்னும் சொல். 

மருவுதல் என்பது வினைச்சொல்.   அதன் அடிச்சொல் மரு என்பது.

யாத்தல் என்பதாவது, கட்டுதல் என்பது.  யாத்து என்பது வினை எச்சம்.  இது இடைக்குறைந்து "யாது" என்று இச் சொல்லமைபில் வந்துள்ளது.  இது யாது என்ற வினாவன்று.

மரு + யாது + ஐ >  மரியாதை  ஆகிறது.

அதாவது, ஒரு விருந்தாளி வரும்போது,  கைகளால் அவரை மருவி  ( தழுவி ), யாத்து  ( கட்டிப்பிடித்து ), வருக என்பதே மரியாதை.  ஆணுக்கு ஆணும் பெண்ணுக்குப் பெண்ணுமாக இது நடைபெறும்.  

இத்தகைய வழக்கமும் தமிழரிடம் -  இந்தியரிடம் இருந்தது என்பதை இச்சொல் காட்டுகிறது.  இது பிறரிடமும் உள்ளது.

பிற்காலத்தில் இவ்வாறு அணைத்து வரவேற்றல் இன்றி வெறும் சொற்களால் "வாருங்கள்" என்று சொல்லிக் கைகூப்புதலையும் மரியாதை என்றனர்.  வணங்குதல் என்பது உடம்பையும் தலையையும் முன்பக்கலில் சாய்த்துத் தன் அன்பைத் தெரிவித்தல்.  இன்று சொல்லால் மட்டும் தெரிவித்தாலும் வணங்குதல் தான்.

பேச்சுவழக்கில் இதை "மருவாதை" என்போரும் உண்டு. இது திரிபு. இதை நீங்கள் விளக்கலாமே!

மரியாதை என்பதைப் சற்றுப் பேதமுறவும் விளக்கலாம். எல்லாம் சரிதான். சமத்கிருதம் பாலி முதலிய மொழிகளில் எச்சச் சொற்களினின்றும் சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளது அறிக.

மரியாதைராமன் என்பது, " மரியாதை அறா மன்" என்ற தொடரின் மரூஉ ஆகும். அதாவது மரியாதை அற்றுபோகாத மன்னவன் என்பது.  எப்போதும் மரியாதை வழுவாதவன் என்று கொண்டாடும் தொடர்.  அறாமன் என்பது ராமன் என்று திரிந்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.