Pages

திங்கள், 31 ஜனவரி, 2022

பிரேதம் சொல்

 மனிதன் பலவகையான வாழ்முறைகளிலும் பல துன்பங்களும் பட்டு வாடித்தான் இன்றைய உன்னத நிலையை அடைந்தான். தொடக்கத்தில் அவன் மரங்களில் கிளைகளில் வீடமைத்துத் தங்கிக்  காட்டில் கொடிய விலங்குகளிடமிருந்து தப்பித்து, இற்றை நிலையை அடைந்தான். இன்று பிற கோள்களுக்குக் குடிமாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.  ஆனால் அவன் கடந்துவந்த காட்டாறுகள் எத்தனை எத்தனை.

இறந்த மனிதனின் உடல், மண்ணில் புதையுண்டுவிட்டால் அது அழுகி வெளியிடும் கூரிய வீச்சம் குறைந்து, சுற்றுப்புறம் தூய்மைப்படும் என்பதை மனிதன் கண்டபின் புதைகுழிகள் அமைக்கத் தெரிந்துகொண்டான்.  புதைகுழிகட்கு  அதிக நிலம் ஒதுக்கினால் விளைச்சல் வேளாண்மைக்கு  வேண்டிய நிலம் குறைவடையும் என்பதால் அவன் பிணங்களை எரித்துப் பலவாறு நிலப்பயன்பாட்டினைத்  திறமையாக்கிக் கொண்டான். பல்வேறு இனத்தாரும் இதில் முன்னேற்றம் கண்டனர்.

சில குழுக்களிடை மதக்கருத்துகள் நிலைகொண்ட படியினால், எரித்தவர் எரித்துக்கொண்டே இருக்கவும் புதைத்தவர் புதைத்துக்கொண்டே இருக்கவுமான  மாறுதல் இல்லா ஏற்பாடுகள் ஆங்காங்கு உறுதிகொண்டன.

இவற்றை நாம் மாந்த வளர்ச்சி நூல்களிலிருந்து அறிந்துகொள்கிறோம்.

இவை எல்லாம் எவ்வாறாயினும், பிற்காலத்தில் இறந்த உடலைப் புதைக்கும் தொழில்திறமை உடையவர்கள் தோன்றினர்.  எரிக்கும் திறமை உடையாரும் தோன்றினர்.  ஒரு இறந்தவனின் உடலை இத்தகையோரிடம் ஒப்புவித்துவிடும் வழமை உண்டாயிற்று.

அப்போதுதான் இறந்தவனின் உடலை, தம்வீட்டார் முறைப்படி செய்யும் சடங்குகள் முடிந்தவுடன் பிற திறனுடையாரிடத்து ஒப்புவிக்கும் வழக்கம் உண்டாயிற்று.  இத்தகு திறனுடையவர்கள், தமிழர் எண்ணிய குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற நால்வகை   நிலங்களில் மட்டுமின்றி பரந்துபட்ட  பாலை உள்ளிட்ட பல இடங்களிலும் வாழ்ந்தனராதலின்,  அவ்விறந்த உடல் ஆங்கு ஒப்படைக்கப்பட்டது.  பண்டமாற்று முறை மாறி  நிதியமைப்புகள் வழக்குக்கு வந்தபின்னர், அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு அத்தொழிலை மேற்கொண்டனர்.

நால்வகை நிலத்தில் ஒன்றில்   வாழ்ந்து இறுதியை அடைந்தவன் உடல், பரந்துபட்ட இடங்களில் ஒன்றில் வாழ்ந்தவனிடம் சென்றதனால்:

பர + ஏய் + து + அம்  >  பரேய்தம் என்று அவ்வுடல் அறியப்பட்டது.

பரேய்தம் > பரேதம் > பிரேதம் ஆனது.

பர -  பரந்துபட்ட நிலங்கள்.

ஏய்தல் -  (ஆங்கு)  அமைதல்

து - ஒன்றன்பால்  விகுதி, இங்கு இடைநிலை ஆனது.

அம் - விகுதி.

அகரத் தொடக்கம் இகரமாகும். இதைப் பலவிடத்து   விளக்கியுள்ளோம்.

எடுத்துக்காட்டு:  அதழ் - இதழ்.

அடித்தல்  இடித்தல்  இரண்டும் வேறுபாட்டு நுண்மை உடைய சொற்கள்.  ஆனாலும் இரண்டிலும்  இருபொருள் தொடுதல் என்னும் அடிப்படைக் கருத்து உண்மை காண்க.

இறந்தபின் சென்றோனின் உடல், தம் உறவினரிடமிருந்து நீங்கி, அயலானிடத்துச் சென்று அழிக்கப்படுவதாகிறது.  அதனால் அது பரேதம் > பிரேதம் ஆனது. பிற ஏய்தம்> பிரேதம் எனினும் ஓரளவு அமைவதேயாகும்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.