மீட்டுருவாக்கத்தின் தந்திரங்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன், வீட்டு வேலைக்கு ஆள் இல்லாமற் போனதால், ஒரு மியன்மார்ப் பெண்ணை முகவர் அனுப்பிவைத்தார். அந்தப் பெண்ணுடன் பேசியபோது அவளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியுமென்றாள். சரி, பேசிக்காட்டு என்றபோது, அவள் " இராகத்துடன்" ஒரு பாடலைப் பாடினாள்.
அந்தப் பாடல் வருமாறு:
ஏனா பூனா தாம் பாரூ
ஏனா பூனா தாம் பாரூ
ஏவா லாவூ சோக்கூ வாரூ
ஏவா லாவூ சோக்கூ வாரூ
------ என்று பாடினாள். சற்று உறக்கத்தில் வீழ இருந்த எனக்கு, வந்த தூக்கம் போய்விட்டது. கண்மூட முடியாமல் விழித்துக்கொண்டேன்.
அவள் பாட்டில் பூனை வருவதுபோல் எனக்குத் தோன்றியது. "பூனைப் பாட்டா?" என்றேன். ( Cat song? )
இல்லை. It means, how beautiful, how beautiful. என்று பொருள் சொன்னாள். எனக்குத்தான் விளங்கவில்லை என்ற எண்ணம் மேலிட்டது. ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த ஊதாண்ட் போன்ற அறிவாளிகள் இருந்த நாடாயிற்றே அவள் நாடு ---- என்பதால், அவளை மிகவும் மதித்திருந்தேன்.
மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டபோது, இந்த வரிகள் தோன்றின.
" என்ன உன்னதம் பார்.
என்ன உன்னதம் பார்,
எவ்வளவு ஷோக்குப் பார்.
எவ்வளவு ஷோக்குப் பார்."
இதுதான் அவள் பாடிய பாட்டு.
அவளுக்குத் தமிழ் தெரியும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.