Pages

வெள்ளி, 24 டிசம்பர், 2021

காடு கடக்கும் தாய் துர்க்கையம்மன்

 தனித்தமிழில் துர்க்கையம்மனுக்குக் காடுகிழாள் என்பர்.  காடு என்ற சொல் பன்முகத் தன்மை வாய்ந்தது.   காடு என்பது ஒரு வனத்தைக் குறிக்கும் என்பது நீங்கள் அறிந்தது.  

கடு  -  இது ஒரு வினைச்சொல்லாகவும் இயலும்.  கடுத்தல் - கடுமையாதல். மென்மை இழத்தல் என்று வேறுவகையாகவும் சொல்வோம்.  கடு என்ற வினை, முதனிலை நீண்டு  ( முதனிலை என்பது முதலெழுத்தை ), கடு> காடு என்று வந்து, கடுமையானது என்று பொருள்படும். எல்லாக் காடுகளும் ( அதாவது மரஞ்செடி கொடிகள் அடர்ந்திருப்பதாலும், எளிதில் துருவிச் செல்ல இயலாமையாலும் )  கடுமை உடையவை என்னலாம். கடுமை இல்லாத இனிமை தருமிடம் பூந்தோட்டமாக இருக்கலாம்.

கடமென்ற சொல்லும் கடுமையான இடம் குறிக்கும்.  எடுத்துக்காட்டு: வேங்கடம். வேகுங்கடம். வெம்மை மிக்கதும் கடந்து செல்லக் கடினமானதுமாகும்.  கடமென்பது ஒரு நிலைமை குறிக்கவும் வரும். எடுத்துக்காடு:  சங்கடம்.   இது தங்கடம் > சங்கடமென்று திரிந்தது.  தகரம் சகரமாகத் திரியுமென்பதை முன்னரே  நம் இடுகைகளில் கண்டு தெளிந்துள்ளீர்.

கடு + அம் = கட்டமென்பதும் கடினமான நிலையே ஆகும்.  அது பின் கஷ்டம் என்று மெருகுபெற்றமைந்தது பேச்சில் வழங்கி வருகிறது.  அயலொலி விலக்க,  கட்டம் ஆகிவிடும்.  கட்டமென்ற நிலையில்  அது கோடுகளால் இட்ட கட்டங்களைக் குறிக்கவும் வருமாதலால் கவனமாய் இருக்கவேண்டும்.

காடு என்பது எளிதில் துருவிச் செல்ல இயலாதது என்று கூறினோம். அதனாலேதான் அதற்கு அப்பெயர். காட்டில் வாழ்பவள் துர்க்கை என்று எண்ணியதால், அவள் காடுகிழாள் எனப்பட்டாள்.  பெண்தெய்வங்கள் காடுகளிலும் மலைகளிலும் இயங்கு ஆற்றலுடன் திகழ்வதாக மனிதன் உணர்ந்த உணர்வே, இவற்றைக் கூறிப் பலவாறும் அத்தெய்வங்களைய் புகழ் வைத்தது மனிதனை.  எங்குமுள்ள ஆற்றலள் கடவுள் ஆதலால், காட்டிலும் இருப்பவள்; வீட்டிலும் இருப்பவள்  அவளில்லாத இடமில்லை என்று முடிக்க. ஆகவே காடுகிழாள் என்ற பெயரின் தத்துவத்தை நாம் உணர்ந்து மகிழலாம்.

துர்க்கை என்ற சொல் தமிழிலும் சமத்கிருதத்திலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  மூவேறு முறைகளில் சமத்கிருத்தத்தில் விளக்கி உள்ளனர். இவற்றை அவை கூறும் நூல்களில் காண்க.

எங்கும் எதிலும் துருவிச் செல்லும் ஆற்றல் துர்க்கை அம்மனுடையது.   ஆகவே துருவிச் செல்லுதல் என்ற பொருளில்,  துரு > துருவு; துரு >  துருக்கை > துர்க்கை என்ற சொல் தமிழில் .அமைந்தது .

வருதல் வினைச்சொல்:

வரு >  வருக்கம்,

துறத்தல் வினைச்சொல்:

துற > துறக்கம்

என்ற சொற்களில்போலவே,   துருக்கை என்பது அமைந்து பின் துர்க்கை ஆயிற்று.  பொருள்களை வருவித்துப் பகிரும் வணிகமுறை   வரு > வருத்தகம்> வர்த்தகம் என்று திரிந்ததுபோலுமே இது.

தெய்வங்கள் பற்றித் தொன்மக் கதைகளும் உள. இவற்றைத் தொன்ம வரலாறு என்னலாம்  ( புராணங்கள்  கூறுவது ).  அவற்றின்படி துர்க்கையம்மன் பைரவர் பெருமானின் தாய் என்ப.

காடுகளை துருவி நிற்கும் ஆற்றல் கடுமையான ஆற்றலே.  இத்தெய்வத்தை காடுகிழாள் என்றதும் துர்க்கை என்றதும் கடினம் கடந்துசெல்லும் ஆற்றலால் என்பதை உணர்க.   கடு என்ற வினையடியாகவும் உரியடியாகவும் பிறந்த இச்சொல்,  மரஞ்செடிகொடி உடைய காட்டை மட்டுமன்றிம் கடந்து செல்ல நாம் தாளம்போடும் தொற்றுநோய்க் காட்டையும்கூடக் குறிக்கும்.  இதுவும் ஒரு காடுதான்; நம் கண் காணாத காடு. 

கடினமெல்லாம் கடக்கும் தெய்வம் துர்க்கை.

இதைக் கடக்கத் தெய்வமாகிய துர்க்கையின் துணை மேவுக.

அறிக மகிழ்க 

மெய்ப்பு:  பின்னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.