Pages

திங்கள், 6 செப்டம்பர், 2021

அர்ப்பணிப்பு - அற்பணிப்பு விளக்கம்.

 இன்று அர்ப்பணிப்பு என்பதன் பொருளை உணர்வதுடன்,  இதை அற்பணிப்பு என்று எழுதின் பொருள் என்னவாகும் என்பதையும் இன்னொரு திரிபையும் அலசுவோம்.

அர் என்ற அடிச்சொல் ஒலித்தொடர்பைக் காட்டுவதாகும்.  அர் -  அரட்டு என்பதில் ஒலி மேலிடுவதையும் அதனால் அச்சம் உறுத்துவதையும் தொடர்பு காட்டும்.   இந்தச் சொல் அதட்டு என்று திரியும்.  இங்கு ரகர தகரத்  திரிபு நம்முன்  வருகிறது .  சொற்களெல்லாம் ஒலியினால் ஆனவை என்பதால்,  ஒலிக்குப் பொருளை உணர்ந்துகொள்கிறோம் என்பதே உண்மை.  அதனால்தான் " அர்த்தம்" என்ற சொல் உலவுகின்றது.  அர்ச்சனை என்றும் அருச்சனை என்றும் சொல்வது.  ஒலியுடன் கூடிய ஒரு தொழுகைமுறையைக் காட்டுகிறது.  அர் > அராகம் என்ற செய்யுள் உறுப்பும் ஒலியைச் சுட்டுவதே ஆகும்.  அது பின் இராகம் என்று திரிந்து பாடும் முறையையும் குறிக்கும்.  இகரம் இழந்து ராகம் என்றும் அது உலவும்.

அர் - அரவம் என்பது ஒலியைக் குறிக்கும்.

சில ஒலிகளை எழுப்பியவாறு ஒரு பொருளை ஒரு தொழுகையில் முன் வைத்தல் அர்ப்பணிப்பு என்று உணரலாம். பிற்காலத்தில் ஒலியுறவு ஏதுமின்றி அவ்வாறு முன் வைத்தலையும் குறிக்கப் பொருள் விரிந்தது. இச்சொல் பின் பொருள்விரிந்து ஒலியின்றி முன்வைத்தலையும் குறித்தது இயல்பே ஆகும்.

இதனை இவ்வாறு செய்க என்று ஏவப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ளும் செயலைக் குறிக்கவும் "பணிப்பு" என்பது வழங்கும்.  " இதைஎழுதப் பணித்தனர்" என்ற வாக்கியத்தில் இப்பொருள் காணலாம்.  அவ்வாறானால் அற்பணிப்பு என்பது பணிப்பு அற்றநிலையில் ஒன்றைச் செய்தலைக் குறிப்பது தெளிவாகும்.  ஆகவே  அர்ப்பணிப்பை   அற்பணிப்பு என்று எழுதினால் பொருள் மாறிவிடும்.  அல்+ பணிப்பு > அற்பணிப்பு, அதாவது பணிப்பு இன்மை நிலை.

இன்மை அன்மை இவற்றிடை ஒரு நுட்ப வேறுபாடு உள்ளது.

ஓர் அரிய பணிப்பு என்று பொருள்படுவதே  அருப்பணிப்பு  ஆகும்.   அருமை+ பணிப்பு  >  அரும்பணிப்பு,  இது வலித்துவரின் அருப்பணிப்பு என்னலாம்.  இப்புனைவு எங்கும் கையாளப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே  அர்ப்பணிப்பு,  அருப்பணிப்பு,  அற்பணிப்பு,  அரும்பணிப்பு  என்ற ஆக்கங்களைக் கண்டு இன்புறுக.

இவற்றுள் அர்ப்பணிப்பு என்பதே பயன்பாடு கண்டுள்ளது.ஏனைத் தொடர்புடைய சொற்கள் ஈண்டு உட்பாடு காணவில்லை: அவை அர்ப்பணம் எனற் றொடக்கத்துச் சில..



அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.