Pages

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

புவி தோன்றியது( என்னும் பொருள் )

இன்று "புவி" என்னும் சொல்லை மிக்கச் சுருக்கமாகவே பார்த்துவிடுவோம்.

இதற்கு முன்பே பூமி என்ற சொல்லை நாம் ஆய்ந்து ஓரளவு புரிந்துகொண்டிருக்கிறோம் அல்லோமோ? ( அல்லவா?)

இந்நில வுலகைக் குறிக்கும் சில சொற்களை முன்பு ஆய்ந்தது உங்களுக்காக இங்கு  உள்ளது.  சொடுக்கி அதையும் வாசித்துவிடுவது ஆய்வுக்கு கொஞ்சம் ஒளி தருவதாகுமே!

பூமி :   https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_6.html

பூமி சுற்றுவதைப் போல நாம் ஒரு சுற்று வருமுன்பு சில ஆண்டுகள் கழிந்தன. இருந்தாலும் வந்துவிட்டோம்.

முன் கூறியபடி,  இன்று நாம் எடுத்துக்கொண்டது புவி என்பதாகும்.

இச்சொல்லில் உள்ள தமிழை நாம் இவ்வாறு காணலாம்:

பூத்தல் என்றால் தோன்றுதல்.  பூமி தோன்றிய ஒன்று என்பது மனிதர்களின் பொதுவாக ஏற்புடையதாகத் தோன்றும் கருத்தாக உள்ளது.  மனிதன் எதை நடந்திருக்கும் என்று நம்புவானோ, அதன்படியே சொல்லையும் சொற்றொடரையும் அமைத்துக்கொள்வான். இது அன்றும் இன்றும் என்றுமே உண்மையாகும்.


சொல்லாக்கச் சிந்தனை அடிப்படை:

பாலால் ஆன கடல் இருக்கிறதென்று நினைத்தான். பாற்கடல் என்ற ஒரு சொற்றொடரைப் படைத்தான். பாற்கடலில் திருமால் பள்ளிகொண்டார் என்று எண்ணினான்:  " பாற்கடலில் பள்ளி கொண்ட பஞ்சவர்க்குத் தூதனே:" என்று ஒரு ( நாட்டுப்) பாடலைக் கட்டிக்கொண்டான்.   மரம் ஓர் உயிரற்ற பொருள்  அல்லது மரத்துப் போன பொருள் என்று எண்ணினான்.  அதன்படியே அதற்கு  "  மர் + அம் " மரம் என்று பெயரிட்டு அழைத்தான்.  மரத்தல் >  மர + அம்= மரம் என்று பெயர் வைத்தான்.   மரி + அம் = மரம் என்று விளக்குதலும் ஆகும். அவ்வாறானால் செத்த பொருள் என்பது பொருளாக ஏற்படும்.  ஒப்பு நோக்க,  Tree என்ற ஆங்கிலச் சொல்லோ "டெரு" என்ற கெட்டிப்பொருள் என்னும் பொருள்தரும் இந்தோ ஐரோப்பியச் சொல்லிலிருந்து வந்ததென்பர்.  

இயற்கையை மீறிய ஆற்றல் அல்லது அமைப்பு இருப்பதாக எண்ணிச் சொல் புனைவதோ, அல்லது பொருளின் தன்மை மட்டும் கருதிச் சொல் ஆக்குவதோ, மொழியிற் காணப்படும் ஓர் இயல்பே ஆகும். மொழிக்குமொழி, இவ்வெண்ணம் கூடியும் குறைந்தும் காணப்படும்.

மர் என்ற தமிழடிச் சொல்லும் கெட்டிப் பொருள் தரக்கூடும்.  இறந்த பொருள் இறுகிக் கெட்டியாகி, பின்னர் அழியுங்கால் மென்மை பெற்று உதிரும்.  (அல்லது மட்கிவிடும்). மரம் என்பது புனைவு என்று கருதத்தகும் எண்ணம் எதுவும் கலவாத ஒரு சொல் என்ற நிலையை நெருங்கி நிற்கும் ஒரு சொல்லாய் அமைந்துள்ளது.

நாம் அறியாத தோற்றம்:

கல் தோன்றி மண் தோன்றா.....  என்று தமிழிலக்கியம் கோட்பாடு வைப்பதால், பூமி தோன்றியது என்றே தமிழனும் நினைத்தான்.   ஆகவேதான் பூத்தல் என்ற தோன்றுதற் கருத்தின் அடிப்படையில் சொல்லை உருவாக்கினான்.

ஆனால் தோன்றியதை எந்த மனிதனும் பார்த்தவனல்லன். ஒருவகையில் இதுவும் ஒரு புனைவை அடிப்படையாகக் கொண்டுள்ளதாய்த் தோன்றுகிறது. பூத்தலென்பது பூமியின் தோற்றத்தை, மரஞ்செடி கொடி முதலியவற்றினோடு ஒப்புமையாக வைத்து இயற்றிய சொல் என்பதையும் முற்றிலும் மறுத்துவிடுதல் இயலாதது ஆகும்.  தோன்றுதல் என்பது புவிக்கும் பூவிற்கும் ஒப்ப இயலும் தன்மை என்பது மறைவதன் கால அளவில் மட்டும் வேறுபடுவ தொன்றாகி விடும்.

புவி என்பது அதுவே

புவி என்பதும் அத்தோன்றுதல் கருத்தையே உட்கொண்டு ஆக்கப்பட்ட சொல்.

பூத்தல் - வினைச்சொல்.

பூ + வி  ( இங்கு வி என்பது விகுதி ). >  புவி.  இங்கு பூவி எனற்பாலது புவி என்று குறுகி அமைந்தது.  இதுபோலும் அமைந்த பிறசொற்கள்:

காண் ( காணுதல் ) >  கண். 

சா > சா+ அம் >  சவம் ( இங்கு வகர உடம்படு மெய் வந்தது).  முதனிலை குறுகிற்று.  சாவு என்ற தொழிற்பெயர் பின்னும் அம் விகுதி பெற்று சவம் என்று குறுகிற்று என்பது இன்னொரு  விளக்கம்.

தொடுதல்:  ( பொருள் தோண்டுதல்).

தொடு = தோண்டு.

" தொட்டனைத்  தூறும் மணற்கேணி"  ( குறள் ).

தோண்டு> தோண்டு+ ஐ >  தொண்டை.

( தோண்டப்பட்டது போன்ற அல்லது தோடு உடையதுபோன்ற  உணவுக்குழல்).

இன்னும் பல உள்ளன.

ஆகவே புவி என்பது பூவி என்பதன் குறுக்கம்.  தோன்றியது என்று பொருள்படும் நல்ல தமிழாகும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

சில கருத்துகள் இணைக்கப்பட்டன: 01092021 0708





 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.