Pages

வெள்ளி, 30 ஜூலை, 2021

அவசியம் என்பது உணவுத்தேவைக் குறிப்பு.

 மனிதன் ஓரிடத்தில் இருந்து வாழாத நிலையில் (nomad),  எங்கு சென்றாலும் இடும்பை கூர் அவன் வயிறு அவனுடனே சென்று அவனை வெகுவாக வதைத்தது.  அவன் எல்லாச் செல்வங்களும் பெற்று இருந்து(settled) வாழத் தொடங்கிய போதும் அவன் வயிறு அவனை விடவில்லை.  அதற்கு வேண்டியதைக் கேட்டு வயிறு அவனை வாட்டத் தொடங்கியது. இதனின்று விளைந்த ஒரு மக்கள் சொல்தான்   " அவசியம்" என்பது.

அகத்திய இலக்கணம் தமிழுக்கு இன்றியமையாதது என்ற நிலையில்,  அகத்தியம் என்ற சொல்லே அவசியம் என்று திரிந்தது என்றார் சொல்லறிஞர் தேவநேயப் பாவாணர்.  இதுவும் நல்ல விளக்கமே யாயினும், உணவின் தேவை அடிப்படையில் இச்சொல் விளைந்தது என்று முடித்தலே பொருத்தமென்று யாம் கருதுகிறோம்.  அவசியம் என்பது தமிழன்று என்றனர் சிலர்.

இதுபற்றிய எம் ஆய்வு வருமாறு:

அவசியம் என்பதன் முந்துவடிவம் ஆவசியம் என்பதே.  

மனிதனின் தேவையெல்லாம் உணவின்பாற் பட்டதே  ஆகும்.  ஒருசாண் வயிறு இல்லாட்டா இந்த உலகினில் ஏது கலாட்டா என்பதே உண்மை.

செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று நாயனார் கூறியிருந்தாலும்,  உணவு வயிற்றைச் சென்றடைந்த அமைதிநிலையின் பின்னர்தான் மற்ற தேவைகளைத் தேடுகின்றனர் மக்கள்.  அடுத்த மண்டபத்தில் பந்தி என்பதைக் கேட்ட பற்றர்கள், கோயிலில் இடையிலிருந்த கதவைப் பேர்த்துக்கொண்டு அந்த மண்டபத்தில் நுழைந்ததை யாம் நேரடியாகவே கண்டுள்ளோம். அங்கிருந்த பூசாரி, இவர்கள் சாமி கும்பிட வந்தார்களா சாப்பிட வந்தார்களா என்று தம் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.   தத்துவங்கள் பேசி உண்மையை மறைப்பதில் எமக்கு உடன்பாடில்லை.

ஆவ   அசி அம் என்பதே ஆவசியம் என்றாகி அவசியம் என்று குறுகிற்று.

அசித்தல் : உண்ணுதல்.    அசியம் -  அசி+ அம் :  உணவு.   இவ்வாறு இன்றியமையாமை உணர்த்தப்பட்டது.  இங்கு ஆவன உணவே,  அதாவது உணவின்றி ஆகாது என்பது. இது பின் தன் உணவு பற்றிய பொருளை இழந்து வழங்குகிறது.

ஆவது:  இது ஒருமை.  ஆவ அல்லது ஆவன :  இரண்டும் பன்மை.  ஆ+ அ > ஆவ.  ஆ+ அன் + அ> ஆவன. இரண்டாம் வடிவத்தில் அன் இடைநிலை உள்ளது.

ஆவ அசி  அம் > ஆவசியம் என்பது குறுகி,  பின்னர் அவசியம் ஆயிற்று. 

அசியம் என்ற தனிச்சொல்  அமையவில்லை. அசித்தல் - வினைச்சொல்.  அசித்தல் என்பதன் மூலம் அயில்-தல்.   அயி -  அசி: இது யகர சகரத்  திரிபு.  இத்திரிபில் அயில் என்பதன் லகர ஒற்று வீழ்ச்சி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.