ஜெய்ன் என்பது ஒரு பழைய சொல்லென்று தெரிகிறது. இது ஜி என்ற சமஸ்கிருதச் சொல்லினின்று வருவதாகச் சொல்வதுண்டு. ஜி என்பதும் ஜெய் என்பதன் திரிபு என்பர். உடலிலும் இவ்வுலகிலும் எழும் விலக்கத்தக்க உணர்வுகள் செயல்கள் பலவற்றை வெற்றிகொள்ளுதலை இது குறிக்கிறதென்பர். எனவே ஜெய்ன் என்றால் வெற்றி என்பது. இதை இங்கு ஆய்வு செய்ய முற்படவில்லை.
அமணரை அருகர் என்பதும் உண்டு.
இது மகாவீரர் என்ற முனிவரால் தோற்றம்பெற்ற கொள்கைநெறி அமைப்பாகும்.இது நீங்கள் அறிந்ததே. புத்தருக்கு முன் வந்தவர் மகாவீரர்.
இதை ஆழ்ந்து பின்பற்றிய சிலர் உடைகள் அணிதலின்றி இருந்தனர். எவ்வுயிர்க்கும் தீமை செய்தல் ஆகாது என்பது இக்கொள்கையின் ஒரு பாகமாகும். இத்தகைய கொள்கையை ( மதமாக )க் கொண்டு இந்நெறியில் செல்லாத பலரும் இதைப் புகழ்ந்து கடைப்பிடித்துள்ள படியால், இதை விதந்து ஓதிய அனைத்துப் பெரியோரும் இந்நெறியினர் என்று கூறிவிடமுடியாது. அப்படிக் கொள்வது யாவரும் ஒப்ப முடிந்த முடிபு அன்று.
இது எவ்வாறாயினும், ஜெய்ன் என்ற சொல், அமணர் என்ற சொல்லுடன் தொடர்புடைய தாகத் தெரியவில்லை. அம்மணம் என்றால் உடையின்றி இருத்தல். இது ம் என்ற ஒற்று இடைக்குறைந்து அமணம், அமணர் என்று வரும். இந்நெறியினர் பலர் உடையணியாமை கொண்டு அவ்வாறு அழைக்கப்பட்டனர்.
அகர வருக்கம் சகர வருக்கமாய்த் திரிதலென்னும் சொல்லியல் விதிப்படி, அமணர் என்பது சமணர் என்று திரிந்தது. அமணம் என்பதும் சமணம் ஆயிற்று.
குளித்தல் என்பதற்குத் தமிழில் இன்னொரு சொல்: மண்ணுதல். நல்லபடியாக மண்ணிய பின் ( குளித்த பின் ) ஆடை களைந்து குளித்தபடியே ( உடை ஏதும் இன்றியே ) கால்களை மடித்து அமர்வர். இதை உலக வழக்கில் சம்மணம் போட்டு அமர்தல் என்பர். இக்காலத்தில் உடையுடன் அவ்வாறு அமர்ந்தாலும் சம்மணம் என்றே சொல்வர். சம்மணம் கூட்டுதல் என்பதும் வழக்கு. கால்கள் கூட்டி இருப்பதால் கூட்டுதல் என்று வந்தது. சம்மாணம் என்றும் இச்சொல் திரியும்.
மண்ணுதல் - வினைச்சொல். [ குளித்தல்] மண்ணுதலில் (குளித்தலில்) ஆடை களைதல் உண்மையால், அம்+மணம் ஆயிற்று. "அம்" எனின் அழகு, உயர்வு என்றும் பொருள்.)
மண்ணு+ அம் > ( மண்ணம்) > மணம். [ இடைக்குறை]
தம் > சம். திரிபு. சேர்ந்திருத்தல்.
சம் + மணம் > சம்மணம் எனினும் அது.
ஆடையணிதல் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் பலர் அம்மணத்தை விரும்பவில்லை. இக்காலத்தில் அம்மணம் கடைப்பிடித்தோர் தனிக்கொள்கை உடையோராய்ப் பார்க்கப்படுதலில் வியப்பொன்றுமில்லை. காட்டில் மரப்பட்டை, இலைகள் அணிந்திருந்த அதற்கு மிக முந்திய காலத்தில் மனிதன் அம்மணமாகத் திரிந்திருப்பான். வெயிலிலும் குளிரிலும் வாடியிருப்பான். அந்தப் பழைய காலத்துக்குத் திரும்பப் பலர் ஒருப்படாமை வியப்பன்று.
தம் திறமான சிந்தனையால் - கற்பித்தலால் மகாவீரர் பலரை அந்நிலைக்குத் திருப்பினார் எனலாம்.
இந்திரா காந்தி அம்மையார் தலைமை அமைச்சராய் இருந்த காலத்தில் ஒரு சமண முனிவர், அம்மணமாகவே சென்று அவரைக் கண்டார் என்பது ஒரு தாளிகைச் செய்தி. அவருக்கு அந்த விடலாணையை ( permitting order ) அரசு வழங்கியதாம். உடையணியாமையை ஒரு நோன்பாகக் கடைப்பிடித்தல் அது. மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது என்பது அரசியலமைப்புச் சட்டமாதலின் அது கடைப்பிடிக்கப் பட்டது.
இதை இத்துடன் முடிப்போம். பிற பின்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.