கேலி என்ற சொல்லைப் புரிந்துகொள்ளுமுன், முதனிலை திரிந்த தொழிற் பெயர் என்ற பெயர்சொற்களைத் தெரிந்துகொள்வோம்.
இதற்கு நாம் "பாடு" என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம்.: "ஏழை படும் பாடு" என்ற சொற்றொடரைப் பார்த்து, இச்சொல் அமைந்த விதத்தை அறிந்துகொள்ளலாம். படுவதுதான் பாடு. ஆனால் பாடுதல் என்ற வினையில் உள்ளுறையும் "பாடு" வேறு. இந்தப் நாம் எடுத்துக்கொண்ட "பாடு" பெரும்பாலும் பாட்டைக் குறிக்கும் பெயராக வருதல் காண்பதரிது. ஒரு பாடு பாடினான் என்று பெரும்பாலும் பேச்சில்கூட வருவதில்லை. ஆனால் சுடு> சூடு என்பவற்றில், ஒரு சூடு சுட்டான் என்று வருவதுண்டு. இலக்கணியர் "முதனிலை" என்றனர் எனின், அது முதலெழுத்து என்று பொருள்படும். சூடு என்ற சொல்லில்," சூ " என்பது சு என்ற முன் எழுத்து நீண்டு திரிந்ததனால் ஆனது. அதாவது. சுடு > சூடு ஆனது. திரிபு என்பது எழுத்தில் ஏற்பட்ட மாற்றம் என்பதாகும்.
இப்போது கேலி என்ற சொல்லுக்கு வருவோம். கெல்லுதல் என்பது ஒரு தமிழ் வினைச்சொல். இதற்குப் பொருள் அல்லது அர்த்தம்:1. கிண்டுதல் 2. தோண்டுதல் 3.கல்லுதல் என்பன. இதை வைத்துக்கொண்டு, பழைய தமிழ் நூல்களை நீங்கள் வாசிக்கும் போது எந்தெந்த இடங்களில் இந்தக் கெல்லுதற் சொல் வந்துள்ளது என்று குறித்துக்கொண்டு, செய்யுளில்வந்த இடங்களை மேற்கோளாகக் காட்டலாம். இப்படிக் காட்டினால் உங்கள் எழுத்தை வாசிப்பவர், இவ்வளவையும் அறிந்து வைத்துள்ளீர் என்று பாராட்டுவர். நான் பெரும்பாலும் இதை மேற்கொள்வதில்லை. எழுதுவதைப் பகர்ப்புச் செய்து (காப்பி) வெளியிடுவோர் அதிகம் உலவுவதால். வேண்டிய வேண்டியாங்கு நீங்கள் இதை மேற்கொள்ளுங்கள். இதைவிடக் கெல்லுதல் என்ற சொல்லின் பொருளை நீங்கள் அறிந்து இன்புறுதல் தமிழினிமையை உணர வழிகோலும் என்பதே விரும்பத் தக்கதாம்.
கெல்லுதல் அல்லது கெல்லு என்ற வினையில், இறுதி உகரம் (லு < ல் + உ) ஒரு சாரியை ஆகும். வினையாவது கெல் என்பது. பல் என்பதைப் பல்லு என்றால் லு என்பது (வினையின்/ பெயரின்) பகுதியன்று. அது நாம் சொல்லை உச்சரிக்க உதவும் ஒரு சாரியைதான். அதை விடுக்க. கெல் வினைப்பகுதி. இது ஏவல் வினையும் ஆகும். இதில் இ என்னும் விகுதி சேர்த்தால், கெல் + இ = கேலி ஆகிறது. கெ என்பது கே என்று முதனிலை திரிந்தது.
கேலி என்ற சொல்லை "gEli" என்று எடுத்தொலிப்பதும் தவறு. அந்தத் தவற்றைச் செய்துகொண்டு, அது தமிழ்ச்சொல் அன்று என்று சொல்லுவது ஒரு தமிழறியாமையே ஆகும்.
கெல்லுதல் என்பதற்குக் கிண்டுதல் என்று பொருளிருப்பதால், கேலி என்பது கிண்டல் என்பதே எனற்பாலது ஐயமற மெய்ப்பிக்கப் படுகிறது.
இனிக் களித்தல் என்பதிலிருந்து தோன்றும் களிக்கை என்ற கை தொழிற்பெயர் விகுதி பெற்ற சொல், கேளிக்கை என்று திரியும். களிக்கை எனல் இயற்சொல். கேளிக்கை என்பது திரிசொல். செய்யுளில் இரண்டும் ஏற்கப்படுவன.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
குறிப்புகள்:
கைப்பேசி ஆங்கில மொழிபெயர்ப்பில், இறுதிப் பாகியில் உள்ள
"இயற்சொல்" என்ற சொல் " இயற்றொல்" என்று தெரிகிறது.
அதைத் திருத்த இயலவில்லை. அது கூகிள் மொழிபெயர்ப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.