Pages

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

எங்கும் நோய்ப்பரவல்.

 எங்கெங்கு நோக்கினும் நோயுட் பட்டோர் 13-2.5

இருமினால் தும்மினால் அச்ச மச்சம் 13-2.5

செங்கண்ணார் செல்வர்கள் உற்ற   தென்னே 12-3.5

சீர்கெட்ட நோய்நுண்மி பட்ட   தாலோ 14-2.5

பங்குற்றார்  கொல்லியுறு  பலிவட்   டுக்குள்   13-4.

பள்ளத்தை விட்டேற வேண்டிக்    கொள்க   13 -3

தங்குற்றுப்  போர்க்குள்ளே செல்லா    நின்று  13-4

தானுய்க  இஞ்ஞாலம் தேர்ந்து    தானே  14-2.5


மாத்திரை எண்ணிக்கையும் குறிக்கப்பட்டுள்ளது.  எ-டு:  14-2.5 14 என்பது உயிர்,உயிர் மெய்களின் மாத்திரை.   மற்றவை குற்றெழுத்துக்களின் மாத்திரை. கவிதை எழுதுவோரின் கணிப்புக்கு இது.

உரை:-

எங்கெங்கு நோக்கினும் நோயுட் பட்டோர் ---  பல இடங்களிலும் நோய்வாய்ப்பட்டோர் மிகுந்துவிட்டனர்;

இருமினால் தும்மினால் அச்ச மச்சம்  -  - யாரும் எங்கு இருமினாலும் தும்மினாலும்  அடுத்து உள்ளோர்   நோய்த்தொற்று அச்சத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்;  

செங்கண்ணார் செல்வர்கள் உற்றதென்னே ---- ஒளியுடைய  கண்களை உடைய சிறந்தோருக்கு இப்போது இந்தத் தொற்று இன்னல்  வந்தது எப்படி? 

சீர்கெட்ட நோய்நுண்மி பட்டதாலோ ---   தள்ளிப்போன கொரனா என்னும் கிருமியினால் தானோ

 கொல்லியுறு  பலிவட்டுக்குள் பங்கு உற்றார் -  உயிர்க்கொல்லிகள் மிகுந்து பலி வாங்கும் வட்டத்துக்குள் மக்கள் சென்று தொடர்பு மிகக் கொண்டுவிட்டனர்.

பள்ளத்தை விட்டேற வேண்டிக்கொள்க   ---  அவர்கள் வீழ்ந்துவிட்ட படுகுழிகளிலிருந்து அவர்கள் வெளியேறப்பிரார்த்தனை செய்க;

தங்குற்றுப்  போர்க்குள்ளே செல்லா    நின்று ---   நல்ல நிலையைத் தக்கவைத்துக்கொண்டு,  இந்த உயிரியல் போர்க்குள் செல்லாமல் நிலைபெற்று;

  இஞ்ஞாலம் தேர்ந்துதானே  தானுய்க   --- இவ்வுலகம் தேர்ச்சி பெற்று முன்னேற வேண்டும் என்றவாறு.




நோயாளிகளை மருத்துவமனைக்குக்  கொண்டுசெல்லும் இதுபோலும்
வண்டிகள் செய்யும் சேவைகள் மிகப் பாராட்டத்தக்கது ஆகும்.


மீள்பார்வை - பின்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.