ஒரு கொல்லன் இருப்பு ஆயுதங்களைச் செய்பொழுதில் எரியிட்டு அடித்துத் தட்டி நிமிர்த்தி வளைத்து இன்னும் பலவும் செய்து அவை உருப்பெற்ற பின்போ தாய் தன் பெற்ற குழந்தையைத் தடவுதல்போல் தடவி அவ்வாயுதங்கள் அடைந்த உருவினை காதலிப்பதுபோலும் மனநிலையை அடைந்த பின்புதான் அவற்றை மக்கட்குப் பயன்படுத்தத் தருகிறான். எவ்வாறு புழங்கினால் நெடுநாள் உழைக்கும் என்று நமக்குச் சொல்லியபடியேதான் அவற்றுள் ஒவ்வொன்றையும் விற்பான். ஓர் ஆயுதத்தை உருவாக்கியவனுக்குத்தான் அதனருமை தெரியும். அவனைப்போலவே சிந்திக்கும் அருந்திறலை நாம் அடைந்துவிட்டால் நமக்கும் அதன் அருமை ஒருவாறு புரியத்தக்கதாய் இருக்கும்.
இலாவகம் - விள்ளுதல்
நாம் எம்மொழியைப் பேசினாலும் அம்மொழியில் நாம் காணும் சொற்களை அவற்றை முயன்று ஆக்கியோரின் வருத்தம் எதையும் நாம் உணராமலே நாம் வெகு இலாவகமாகப் பயன்படுத்துகிறோம். இலாவகம் என்றால் அவ்வுணர்ச்சியாகிய வேதனை ஏதும் இலா - இல்லாத, அகம் - மனநிலையினராய், நாம் எடுத்துப் பேசிக் களைந்துவிடுகிறோம். அப்புறம் அடுத்த சொல்லைத் தேடாமலே அது தானே வந்துற உணராப் பிடிகொண்டு வாய்க்குள் இட்டு ஒலியூட்டி வெளியிடுகிறோம். இதை உணர்த்துவதற்காகவோ விள்ளுதல் என்ற சொல் புழக்கத்திற்கு வந்துற்றது.
வார்த்தை
சொல்லுக்கு வார்த்தை என்பது இன்னொரு பெயர். இதைத் தமிழின் மூலம் பொருளுரைத்தால், வாயினின்று புறப்படுதலின் வாய்த்தை > வார்த்தை என்றாகும். வாய் - அடிச்சொல். தை என்பது விகுதி. இரும்பு உற்பத்தித் தொழிலாளி ஆயுதங்கள் சிலவற்றை வார்த்து எடுப்பதுபோலும் வார்த்தை என்னும் சொல்லும் வார்த்து எடுக்கப்படுகிறது. இவ் வொப்புமையாக்கத்தின் வழி, வார்த்தல் : வார் + தை = வார்த்தை என்றும் வந்து சொல்லென்று பொருள் எழும். அடிச்சொல், விகுதி, ஏனை உறுப்புகள் அனைத்தையும் நோக்குவான் பொருளை உணர்ந்தகாலை, சொல்லினின்று பொருள் எழுகின்றது. ஒலி எழப் பொருள் எழுகின்றது. ஆதலின் " கிளம்புதல்" என்பதிலிருந்து அதற்குக் "கிளவி" என்பது இன்னொரு பெயராயிற்று. கிளம்பு - வினைச்சொல். கிள - எழுந்திடுதல். கிள+ இ = கிளவி. கிளம்பு என்பதில் கிள (>கிளத்தல் ) என்பதே அடிச்சொல்.. ஒலி, பொருள் என இவை எழுந்திடுதல் உடையவை. வார்த்தலின் வார்த்தை; நாவினின்று எழுந்திடுதலின் கிளவி இவ்வாறு இச்சொற்களைப் பொருள் உணர்க. வாய் , வார் என்று இருவகையிலும் வாய்த்தை > வார்த்தை என்று உணரவகை உண்டாதலின் இச்சொல் ஓர் இரு பிறப்பி ஆகும்.
போர்க்களம் என்ற சொல்லிலும் நெற்களம் என்ற சொல்லிலும் களம் என்பது காண்கின்றோம். களம் என்பது ஒரு வேலை அல்லது நிகழ்வுக்காகக் குறித்த இடன். அவ்விடம் அடையாளங்கள் பொருத்தி அமைக்கப்பட்டும் இருக்கலாம். அல்லது நினைப்பில் மட்டும் அறியப்பட்ட ( அடையாள) இடமாகவும் இருக்கலாம். இது " எல்லை" வகுக்கப்பட்ட இடம். எல்லையானது இடத்திலோ அல்லது அவ்விடத்தின் நினைப்பிலோ "கட்டப்பட்டது". அதனால் கள் என்ற சொல்லினின்று உருவானது களம் ஆகும்.
கள் > கள்+து > கட்டு > கட்டுதல்..
கள் > கள் + சி > கட்சி. ( சில கொள்கைகளால், வரையறையால். கட்டுப்பாட்டு விதிகளால் ஒன்றுபட்ட கூட்டம் ).
கள் > களம். ஒரு நிகழ்வு நடைபெற ஒதுக்கிய இடம்.
முற்காலப் போர்க்களங்கள், போருக்காக ஒதுக்கிய இடங்கள். எடுத்துக்காட்டு: தலையாலங்கானம்.
வீடு என்பதும் இல்லற வாழ்விற்கு ஒதுக்கப் பட்ட இடம். அல்லது களம். அங்கு தலைவியாய் இருப்பவள் களத்திரம். (களத்து இரு அம்).
சகக் களத்தி சக்களத்தி ஆனதால். களம் என்ற சொல்லின் பயன்பாட்டினைக் கண்டுகொள்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.