Pages

புதன், 6 ஜனவரி, 2021

ஐஸ்வரிய அல்லது செல்வங்களின் தொகுப்பு

 செல்வங்கள் பதினாறு என்பது நம் சொற்றொகை அகரவரிசை சொல்வது. இந்தச் செல்வங்களின் தொகுதிக்கு இன்னொரு பெயர் ஐஸ்வரியம்  ஆகும் இச்சொல்லின் அமைப்பை எளிதினுணர்தற் பொருட்டு  பிற்பாகமான  "~வரியம்" என்பதை  முதலில் அறிந்துகோடல் நலம்.

மனிதன் பிறக்கும்போது கோவணமும் இன்றித்தான் பிறக்கிறான்.  " நீ என்னதான் அப்படிக் கொண்டுவந்துவிட்டாய்,  அதை நீ இழப்பதற்கு?" என்ற பகவத் கீதையின் கேள்வி பொருண்மை மிளிர்வதாகும். பிறனொருவன் நூல் துணி உடுத்திருக்க, தான் பட்டாடையில் பவனிகொள்வதானால்,  அவன்றனக்கு செல்வவரவுண்மையையே அந்நிலை குறிக்குமென்பதில் ஐயமொன்றில்லை. பிறன் சிறுதொகைத்  தாட்பணமே பயன்படுத்த,  தான் காசோலையும் கடனட்டையும் அரண்மனை போல் வீடும் உந்துவண்டியும் உடையவ னாயின் செல்வமுடையவன் என்று மதிக்கப்படலாம்.  இதுவே ஐசுவரியம் என்று மக்கள் கருதவும் தடையில்லை..இத்தகு மதிப்பீடுகளில் வேறுபடுவோரும் உண்டு.

பண்டைத் தமிழர் பெரும்பாலும்  ஆகுதல் என்ற வினையால் அமைந்த ஆக்கம் என்ற சொல்லையே வழங்கினர்.  அதனடிப் பிறந்த "ஆகூழ்"  என்ற சொல்லையே குறள் முதலிய இலக்கியங்கள் பதிவுசெய்தன. செல்வமாவது ஆக்கம். நற்பலனெனில்  அது நிலம் உடைமை,  ஆடுமாடு கன்றுகள் உடைமை என்று செல்வமுடையோர் மற்றுப் பிறரும்  எண்ணினர்.  இவர்களே  திருவுடையர்,  உரிமை பலவும் உடையார் என்ற கருத்தில்  கிழார் எனவும் குறிக்கப்பட்டனர்.  (கிழமை உடையர்,  கிழ + ஆர் >  கிழார், ).  மாடு என்ற சொல்லே செல்வம் என்ற பொருண்மையும் உடைத்தாயிற்று. கிழமை = உரிமை.

திரு வேறு,  தெள்ளியர் ஆதலும் வேறு என்று, அறிஞர்களைக் குறள் போற்றினாலும்   செல்வமுடையார் மன்பதையுள் வல்லோராகவே  நின்றனர்.

இந்தப் பாடல்வரிகள் கவனத்துக்குரியன:

செல்வமே சுக [ ......தாரம்]*

திருமகள் அவதாரம்;

உள்ளபடி செல்வம் இல்லாதவரே

உலகினிலே வாழ்வதும் தவறே

கல்லார் எனினும் காசுள்ளவரைக்

காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?  [ கம்பதாசன்]


இன்னொரு கவி செல்வங்களை இவ்வாறு நிரல்படுத்துகிறார்:

பெண்டு பிள்ளை வீடு

கன்று மாடு தனம்

பெருமையான பெரும் பள்ளம்.

கண்டு மோகம் கொண்டு.......

~~~மீளாக் கடலில் வீழ்ந்துவிடாதே...... என்று எச்சரித்தவாறே.


இங்கு  வீடு மாடு கன்று என்பவற்றைக் கவனத்தில் கொள்க.

இனிச் சொல்லியலின் படி,  ஐஸ்வர்யம் என்பதை இவ்வாறு விளக்குவோம்:

மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்றொரு பொருள் உளது.

மறத்தல் ஆகாது:

ஆக்கம் என்பதில் அகரமே முதலெழுத்து.

ஆ -  மாடு  ( செல்வம்,  கோமாதா).

இல் -  இடம்.  [  தமிழில் இல் என்பது இடப்பொருள் காட்டும் உருபு, வீடு என்றும் பொருள் உளது ]

வரு  -  வருதல் என்பதன் வினைமுதல்.  தனக்கே அன்றித் தான் பிறந்த குடிக்கு இருந்ததாயினும் அது தனக்கு வருவதாகவே கொள்ளப்படும். இது வீடும் மாடும் வருதல். அதாவது செல்வம் வருதல்.

இ -   இருந்து ( செலவாகிவிடாமல் இருப்பது ).

அம் -  அமைதல் குறித்த விகுதி. [ சொற்கள் பலவினிலும் சில விகுதிகள் பொருளிணைந்தும் சில பொருளின்றி வெற்று இறுதியாகவும் உள்ளன ].

ஆ + இல் + வரு + இ + அம்.

இது:

ஆ + இஸ் + வரி + அம்

. ஐஸ்வர்யம்  ஆகும்.

இங்கு:

ஆ -  ஐ எனத் திரிய,

இல் > இஸ்  ஆனது.

வரு + இ > வரி  ஆனது.

ஆகாரத்தில் ( ஆ என்று) தொடங்கும் சொற்கள் அகரமாகவும் திரியும்.  எளிதான எடுத்துக்காட்டு:

ஆங்கு > அங்கு.

ஆன் (ஆண்பால் விகுதி )  >  அன்  ( ஆண்பால் விகுதி ).

ஆவல் >  அவா.

ஆப்பம் <> அப்பம்

ஆடு மாடுகள் வைத்திருந்தோர் ஒரு காலத்தில் தம் சொத்தால் உயர்ந்து நின்றனர். அன்ன புகழ் அவ்வழி வந்தோர்க்கும் உரித்தாயிற்று.

ஆயர் > ஐயர்.   ஆ> ஐ.

ஆரியர் என்ற சொல்லும் ரி (ரிகரம்) குன்றி ஆயர் என்றாகும்.

செல்வம் வெவ்வேறு குடிகளை வெவ்வேறு சமையத்தில் மேலேற்றிக் காட்டியது.  அரசன் போர்நடவடிக்கைகட்கு அவர்கள் உதவிநின்றும் பங்குகொண்டும் வெற்றியில் களித்தும் தாமடைந்த நிலைகளைத் தமவாக்கிக் கொண்டனர். 

பூசை முதலியவற்றில் செல்வமுடையார் இன்றளவும் முன்னிலை வகிக்கின்றனர். "மரியாதை" பெறுகின்றனர். பொறாமைப் படுவதற்கு ஒன்றுமில்லை. அன்னதானத்துக்கு இரண்டாயிரமோ மூன்றாயிரம் சிங்கப்பூர் வெள்ளி செலவானால்,  அதை அவர்கள் கொடைசெய்கின்றனர். இவ்வுலக வாழ்வில் ஏதேனும் தீங்கு இழைத்திருந்தால்,   இதன்மூலம் தீயகருமவினை விலகும் என்பது உண்மை.  வந்து உண்போருக்கும் கருமவினை தீரும் என்பதும் பொய்யில்லை. ( முன்செய் தீவினை மிக்கிருப்பின் முழுமையும் நீங்காமல் சிறுபாகமே நீங்கினாலும் ஒரு பேறுதான், அடிபட்டுச் சாகவேண்டியவன் இயற்கை மரணம் எய்தல் உதாரணம் ).

ஐயப்ப சாமிகள் செய்யும் தானங்களும் இதன் பொருட்டே. சங்க காலத்தில் வானொலி அலைகளை மக்கள் அறிந்திருக்கவில்லை,  கண்ணுக்குத் தெரியாததெல்லாம் இல்லை என்பது மடமை. எமது சிவஞான போத உரையை இங்கு வாசித்தறிக.

ஐஸ்வரியம் யாதென அறிக. மகிழ்க

 தட்டச்சு மெய்ப்பு - பின்னர்.




.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.