Pages

செவ்வாய், 8 டிசம்பர், 2020

கோ என்ற சொல்லில் அடங்கியுள்ள தத்துவம்.

 கோ - தத்துவம். இங்கு தத்துவமென்பது, பிறசார்பின்றி,   தானே நின்றியங்கும் கருதுகோள். தன் > த.  (கடைக்குறை). து - உடைமைக் குறிப்பு.  அம் - அமைதல் குறிக்கும் விகுதி. த + து + அம் = தத்துவம்.

தமிழ் நெடுங்கணக்கில் (அரிச்சுவடியில்)  உள்ள இரண்டு எழுத்துக்களுடன் அணுக்கமானது கோ என்ற எழுத்தாகும்.   அந்த இரண்டு எழுத்துக்கள் :  கு என்பதும் ஓ என்பதும்.

கு என்பதனை மேலும் பிரிக்காமல்,  அதை நாம் சேர்விடம் குறிக்கும் பண்டைச் சிறுசொல் என்றே அறிந்துகொள்வோம்.  அது சேர்விடம் மற்றும் சேர்ந்திருந்தலைக் குறிக்கும்.  இந்தியாவிற்கு என்னும்கால் அது சேர்விடம் குறிக்கும்,  வாக்கியம்: இந்தியாவுக்குச் சென்றான்.  குடி, குடும்பம், கூட்டம், கூம்புதல் முதலிய பல தொடர்புடைய சொற்கள் கூடியிருத்தலைக் குறிக்கும். 

ஓ என்பது ஓங்குதல், ஓம்புதல் என்று மிகுதி குறிப்பதும் காத்தல் குறிப்பதும் ஆகும்.

கோ என்ற சொல்லுக்குப் பல பொருள் உள.  அவற்றுள் சில:  

அரசன்:  குடிகளுடன் கூடியிருந்து அவர்களைக் காப்பவன்.

அம்பு :     எய்த இடத்துக்குச் சென்று சேர்வது.

ஆண்மகன்: பெண்ணுடன் கூடிவாழ்பவன்.

நிலா:  ஆகாயத்துடன் கூடியிருப்பது

சூரியன் ( சூடியன்):  ஆகாயத்துடன் கூடியிருப்பது.

திசைகள் : அடுத்தடுத்துக் கூடியிருப்பவை;

நீர் :  பிரிந்தாலும் கலக்கும்போது  வேறுபாடின்றிக் கூடியிருப்பது.

பசு:  மற்ற மாடுகளுடன் கூடிவாழ்வது. மனிதனுடனும் வாழ்ந்து வளம் உறுத்துவது.

பூமி :  ஆகாயத்துடன் கூடியிருப்பது.

மலை:  அடிவாரத்துடன் கூடியிருந்து வானையும் தொடவிழைவது.

தந்தை தாய் - கூடிவாழ்பவர்கள்

தலைமை:  அடியாருடன் சேர்ந்திருப்பது. அடியார் இலையேல் தலைமை இல்லை.

இவ்வாறு கூடியிருக்கும் பலவற்றையும்  கு+ஓ (கூடி ஓங்குதல்) எனக் கோவென்று மாறிப் பொருள்தருகிறது .

கு என்பது இடத்தில் சேர்வு ஆதலின், அங்கு ஓங்கி நிற்பது கோவாகும். நெடுங்கணக்கில் க் + ஓ என்று வருமேனும் அது கு+ ஓ எனக் கோ என்று ஒன்றாக நின்று அணுக்கமாகிறது.

க் உ என்பதில் உ என்பது முன்னிருப்பு.  க் என்பதே  இடம் குறிக்கும் மண்தோன்றிய காலத்துச் சொல். இங்கு சொல்லப்பட்ட அனைத்தும் இடத்தில் கூடியிருப்பவை.  க் + உ + ஓ எனபவற்றில் உகரம் என்ற இடம் விலக ஓங்குதல் மேலாயிற்று.  உகரமும் ஓகாரமாகத் திரியவும் வல்ல ஒலி.  ஒடு (ஓடு) என்ற உருபினையும் உடன் என்ற உருபினையும் பொருளொற்றுமையால் அறிந்து இங்கு அமைவீராக. எனவே  ஓ வர உ விலகியது ஒலியியலில் அமைதக்கதாம்.

கோ என்ற சொல் பசுவையும் அரசனையும் ஒருங்கு குறித்தது இக்கூடிவாழும் தன்மையினால். இது சொல்லமைப்புப் பொருள். பசுவென்பது பசுமையின் ஊற்றாவதனாலும்  அப்பெயர் பெற்றது. கோவென்னும் அரசனும் நாட்டுக்குச் செழிப்பூட்டுபவனாகையால் அவ்வாறு (கோ என்று ) குறிக்கப்பட்டான். இது வழக்கில் போந்த இவ்விருபொருள்களின் ஒருமையாகும்.

.அடிச்சொற்கள் ஒன்றே.  இடத்தில் கூடிவாழ்ந்து  ஓங்குவன அரசும் பசுவும்,  இத்தத்துவத்தை அறிக. மகிழ்க.

(மொழியும் வழக்கும் கடந்த தத்துவ விளக்கம்),

(ஓரு காலத்தில் மொழிகட்கும் பெயரில்லை. அறிக.)



குறிப்புகள்:

சீனமொழியில் "குவோ'  அல்லது கு-ஓ   guo  என்பது சிற்றரசர் குழுவையும் குறிக்கும். கூடிவாழ்தல் (ஒத்தியல்தல்) get along  என்ற பொருளும் இதற்குண்டு. இஃது இவண் கூறப்பட்ட பொருளுக்கு நெருக்கமானது. நீங்கள் இதை ஆராயலாம்.

கூடியிருத்தல் என்றது  ஒன்றாய் இருத்தல் என்று பொருள்தருவதுடன், அதிகமாவது என்றும் தமிழில் பொருள்படுதல் போல், இந்தச் சீனச்சொல்லும் excessively என்று பொருள்படுகிறது.\\

இது பல உச்சரிப்புகள் உள்ள சீனச்சொல்,


மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.