Pages

சனி, 4 ஜூலை, 2020

சமீபமும் ஈதலும்

ஈதல், தருதல், கொடுத்தல் என்பவற்றின் பருப்பொருள் 
ஒன்றே ஆயினும் அவை நுண்பொருள் வேறுபாடுடையவை.
தன்னினும் குறைவான தகுதி உடையா னொருவனிடத்து
ஒரு பொருளைச் சேர்ப்பிப்பது ஈதலாம். இவ்வாறு தகுதி 
குறைந்தோனுக்குப் பொருளைத் தருவதனால் ஏற்படும் 
புகழை " இசை" என்று சொல்கின்றன தமிழ் நூல்கள். 
இதனை ஈதலற மென்றும் ஈத லிசைபட வாழ்தல் என்றும்
தமிழனின் பண்பாடு கோடிட்டுக் காட்டுகின்றது. \
(மற்ற சொற்களை ஈண்டு விளக்கவில்லை.)


இன்று நாம் சமீபம் என்ற சொல்லை அணுகி ஆய்வோம்.


சமீபம் என்பது அயற்சொல் என்று முன்னர் கூறப்பட்ட
தெனினும் அது தமிழில் வழங்குவதாகும். அஃது எத்திறத்த
தாயினும் ஆய்வதே இவண் நோக்கமாகும்.


தாம் எங்கு இருக்கின்றோமோ, அங்கு தமக்கு ஒன்று 
கைக்கு எட்டும் தொலைவிலோ அல்லது வந்து சேரும் 
தொலைவிலோ இருந்தால் அதுவே சமீபம் ஆகும். நெடுந் 
தொலைவில் இருந்து தம்மை வந்து சேர்வதில் தடையோ 
தாமதமோ ஏற்படக்கூடுமாயின் அது சமீபத்தில் இருப்பதாக
யாரும் கூறார். ஒரு வாழைமரம் தமக்குப் பழந்தரும் 
படியாகப் பக்கமிருப்பதே சமீபத்திலிருக்கிறது என்று 
சொல்லற்குரியது ஆகும். இங்கு ஏன் சேர்தல், வருதல், 
தருதல் என்ற கருத்துகளையெல்லாம் புகுத்தி இந்த 
இயல்பான விடயங்களைச் சொல்கிறோமென்பது சிறிது
நேரத்திற் புரிந்துவிடும்.


சமீபம் என்பதில் சம், ஈ (ஈதல் ), பு (இடைநிலைவிகுதி).
அம் (இறுதிநிலை அல்லது விகுதி ) என்ற உள்ளுறுப்புகள்
உள்ளன.


சம் என்பது தம் என்பதிலிருந்து பிறந்த சொல். இரண்டு
 “தன்”கள் சேர்ந்தால் தம் ஆகிறது. ஆகவே சம் என்பது 
கூட்டு அல்லது சேர்க்கை.


தம் என்பதே சம் ஆனது. தகரத் தொடக்கம் சகரத் தொடக்க
மாகும். எடுத்துக்காட்டு இன்னொன்று: தனி > சனி. ( சில 
தனி இயல்புகள் உடைய ஒரு கோள். ) இது சொல்லிடையிலும் 
வருந்திரிபாம். எ-டு: அப்பன் <> அச்சன்> <அத்தன். 
இத்திரிபில் எது அடி, எது முடி என்று ஆயாமல், ஒன்று
 இன்னொன்றாய்த் திரியுமென்பதையே நோக்குக.


ஈதல் : ஈ என்பது சேர்ப்பிப்பது உணர்த்தும். வெகு
தொலைவில் ஒன்றிருப்பதும் சரிதான், அது இல்லாமல்
போவதும் சரிதான்.  அதன் பயன் நம்மை எட்டுவதில்லை.
ஆகவே பயன் கருதி வாழ் மனிதன் தொலைவு கருதியது -
எதுவும் கிட்டுமா இல்லையா என்பதை மனத்துக்கண்
கொண்டுதான் என்பதறிக. ஆகவே ஈதல் அல்லது ஈ 
என்ற சொல் இவண் பொருண்மை உடையதாகிறது.


தம் + ஈ + பு + அம் > சம் ஈ பு அம் > சமீபம் ஆகும்.


பு என்ற இடைநிலை மிக்க அருமை. புடை = பக்கம் இருப்பது. 
புடைசூழ என்ற தொடரின் பொருள் தெரியுமானால் இதை 
உணர்ந்து போற்றுதல் எளிதே. ஆகவே பொருத்தமாகப் 
புனைந்துள்ளனர் இச்சொல்லை. முதலெழுத்து மட்டும் 
இடைநிலையாய் நிற்கிறது.


இதை வாக்கியமாக்கிப் பார்க்கவேண்டுமானால் இப்படிக்
கருத்துகளை கோவை செய்யுங்கள்:


தமக்கு ஈயும் புடைமையில் இருப்பது. அதுவே சமீபம்.
 இப்போது வாழைப்பழம் பற்றி மேற்கூறியதையும்
மீண்டும் வாசிக்கவும்.

அறிக மகிழ்க.


குறிப்புகள்

சமீப்யம் - ஒரு குருவானவர் தமக்கு அருகிலே இருந்து வழிகாட்டுவது. இது ஒரு பேறு என்று இறைப்பற்று மார்க்கத்தில் சொல்லப்படுகிறது.



பருப்பொருள் -  பரும்பொருள் என்று மாறிக்கொள்கிறது.  இது திருத்தம் பெற்றுள்ளது. 5.05  05072020





மெய்ப்பு - பின்னர்.








2 கருத்துகள்:

  1. தோழரே,
    தங்களுடைய பதிவுகளுக்கு நன்றி!
    நான் தமிழ் இலக்கணம் படிக்கிறேன். ப்குபத உறுப்பிலக்கணத்தில் கீழ் வரும் பகுதியை சற்று விளக்கவும்.
    தமிழ் இலக்கணம் - ஆறுமுக நாவலர்- பகுபத உறுப்பிலக்கணம்- புணர்ந்து கெடும் விகுதி
    முன்னிலை ஏவல் ஒருமை ஆய் விகுதியும், பெயரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும் வினை முதற் பொருளை உணர்த்தும் இகர விகுதியும், செயப்படு பொருளை உணர்த்தும் ஐ விகுதியும் , பகுதியோடு புணர்ந்து பின்கெடுதலும் உண்டு . கெடினும் புணர்ந்து நின்றாற் போலவே தம் பொருளை உணர்த்தும்.

    நீ நட, நீ நடப்பி, நீ செல் என்பவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது.

    கொல் களிறு, ஓடாக் குதிரை என்பவைகளிலே பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன.

    அடி, கேடு, இடையீடு என்பவைகளிலே தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது.

    காய், தளிர், பூ, கனி, திரை, நுரை, அலை என்பவைகளிலே வினைமுதற் பொருள் உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்டது.------மேற்கூறப்பட்டவைகளில் வினைமுதற் பொருள் யாவை? அவை எவ்வாறு கெட்டது?


    பதிலளிநீக்கு
  2. இந்தக் கேள்வியை இலக்கணம் நன்கு அறிந்த புலவர் ஒருவர்தாம் வினவுதல் கூடும். தங்கள் தேர்ச்சிக்கு மெச்சினேம். உங்களுக்குத் தெரிந்தவற்றையும் ஆங்காங்கு பின்னூட்டமிட்டுத் தமிழ்வளர உங்களால் ஆன நலம்பல செய்து சிறக்க வாழ்த்துகள்.

    தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
    தமிழினும் வேறெங்கும் யாம்கண்ட தில்லை ----- என்றார் பாரதிதாசன்.

    தனிமை என்பது பண்புப் பெயர். தனிமை + சுவை = தனிச்சுவை பண்புத் தொகை. மைவிகுதி கெட்டுப் புணர்ந்தது. வல்லெழுத்து மிக்கு வந்தது. மேற்கண்ட பாடலில் மை விகுதி கெடாமல் புணர்த்தப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தனிமைச் சுவை என்பதற்கும் தனிச்சுவை என்பதற்கும் உண்டான பொருட்பேதம் யாது?

    பதிலளிநீக்கு

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.