Pages

திங்கள், 18 மே, 2020

பண் - பலபொருளுள் நிந்தை

பண் என்ற சொல் தமிழறிந்தோரிடையில் அறியப்பட்ட இனிய சொல்லே ஆகும். இதற்குப் பல பொருள். என்றாலும் பெரும்பாலும் பண் என்றால் பாட்டு என்ற பொருளில் அது மக்களிடை  வழக்குப் பெற்றுள்ளது. இஃதன்றி பண்பாடு, பண்பட்ட, பண்படுத்துதல் என்பன போலும் சொல்லாட்சிகளிலும் அது உணரப்படுகிறது.


பண் என்பதற்குப் பல பொருள் இருத்தலால்,  பயன்படுத்துதற்குக் கடினமான சொல்லானாலும்,  அதன் பல்வேறு பொருள்களில் ஒன்றிரண்டு மட்டுமே நினைவில் அல்லது பொருண்மையறிவில் வைத்துக்கொண்டுள்ளபடியினால் , நடைமுறையில் இச்சொல்லால் நமக்குத் தொல்லையொன்றுமில்லை என்பதே உண்மை. மறதியும் சிலவேளைகளில் நம் கடினத்தை நீக்கிவிடுதல் கூடும்.

பண் என்பது நிந்தனை என்ற பொருளுடையதாகவும் உள்ளது. இப்பொருளின் இதைப் பயன்படுத்திய  இந்நாளைய  ஆசிரியர் யாரும் நம் நினைவில் இல்லை.

இப்பொருள் எவ்வாறு ஏற்பட்டது எனக் காண்போம்:

பள் >  பள்ளம், தாழ்வு.
பள் > படுகை, தாழ்வு.
பள் > பண்> பணிதல் ( தாழ்நிலை மேற்கொள்ளுதல் அல்லது அடைதல்)


நிந்தனை செய்யப்படும் ஒருவன்,, பிறர் காட்சியில் தாழ்நிலையில் எண்ணப்படுகிறான். பணிதலுறும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
பள் > பண் ஆவதனால், பண் எனற்பாலது நிந்தனை என்றும் பொருல் படும்.

பள் ( அடிச்சொல் ) > பண் > பணிதல், பணிவு.

ள் என்ற ளகர ஒற்று உடைய சொற்கள் ணகர ஒற்றாக மாறுவது சொல்லியல் விதிப்படியாகும்.

சந்தி என்னும் சொல்புணார்ச்சியிலும் மற்றும் ஏனை இடைச்சொற்களின் சேர்க்கையாலும்  ள் என்பது ண் ஆகிவிடும்.  எ-டு:

மாள் > மாண்டார்.


ஆள் எனற்பால பெண்பால் விகுதியும் ஆண் என்ற வடிவத்தையடைந்து  பின் ஆண்பால் விகுதியுமாகும்.

 ஆள் > ஆண்
ஆண் >  ஆன்.  ( எ-டு: வந்தான் ).

புணர்ச்சியில்:  ஆள் - ஆண்ட, ஆண்டு. ( எச்ச வினைகள்)
இங்கு வினைப்பகுதுயுடன் சேர்ந்தவை இடைச்சொற்கள்.

ஆள் என்ற சொல்லே  ஆட்சியுடைமை அல்லது ஆளுகையைக் காட்டும். அதனின்று திரிபுற்ற ஆண் என்ற சொல்லில் இப்பொருள் சிறக்கவில்லை.


ஆண்மை என்ற சொல்:

இது இருவகையிலும் பெறப்படும்.  எ-டு:

ஆள் + மை =  ஆண்மை.
ஆண் + மை = ஆண்மை.

சொல்லாண்மை, நகராண்மை என்று வரும் சொற்களை  ஆள்+மை = ஆண்மை என்றும்   ,  ஆண்தன்மை என்று குறிக்கும்போது  ஆண்+மை என்றும்  பிரித்தலே சரி.

சொல்லமைப்பில்:  ஆள் - ஆண்டவன்.

பிளவுக் கருத்து:  பாள் > பாண்டம்.

                                    பாள் > பாளம் என்பதும் பிளவுக் கருத்தே.

இதுகாறுங் கூறிய சிலவற்றால்,  பண் என்பது ஏன் நிந்தை என்ற பொருளிலும் நிகண்டு மற்றும் அகரவரிசைகளிலும் காணப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.


தட்டச்சுப் பிழைகள் பின் கவனிப்பு.

5.30 மாலை 19.5.2020 -  சில தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.

1 கருத்து:

  1. சில இடுகைகளில் முன்னர் யாமெழுதிய பதில்கள் அழிந்தனபோலும். அவை காணப்படவில்லை. இங்கு நீங்கள் எழுதிய குறிப்பு இவ்வாறு காணவில்லை என்றால் மீண்டும் எழுதுங்கள். சிறந்த கருத்துகளைப் பலரும் அறியச்செய்வதும் ஒரு கடமை எனலாம்.

    பதிலளிநீக்கு

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.