Pages

ஞாயிறு, 29 மார்ச், 2020

முன்னுக்கும் பின்னுக்கும்.

கட்டுரை முதலியன எழுதுங்கால்  முன்னுக்கு, பின்னுக்கு என்று எழுதுவதில்லை.   வகுப்பு வாத்தியார் பார்ப்பதற்காக எழுதிய கட்டுரையிலும் " முயற்சி செய்து ஒவ்வொருவரும் முன்னுக்கு வரவேண்டும்" எழுதினால், அவர் முன்னுக்கு என்ற பதத்தின் மேல் ஒரு வட்டம் போட்டு, இது பேச்சுமொழிச் சொல் என்று கூறி அவ்வாறு எழுதுதல் கூடாது என்று அறிவுறுத்துவார்.

மாணவனும் தான் செய்தது தவறு என்று " அறிந்து" கொள்வான்.

மூச்சை நிறுத்தும்போது எழுப்பும் ஒலியை முக்குதல் என்பர். எப்படி அமைந்தது இச்சொல்?    மு என்பது முன் இடம் குறிக்கும் ஓர் அடிச்சொல்.
கு என்பது சேர்தல் குறிக்கும் சொல். இன்று பெரிதும் உருபாக வழங்குவது.

முக்கு என்பது முன்னிடம் கொண்டுவா என்று சொல்வதாகும்.

தொடர்பினைக் காட்ட,  முன் +கு என்று எழுதி,   முன் கு >  முற்கு என்ற காட்டுவதே சரியாகும்.  முற்கு என்பது பின்னர் முக்கு ஆனதென உரைப்பதே விளக்கும் எளிய வழியாகும்.

முன்னுக்கு என்ற உருபேற்ற சொல்லுக்கும்  முற்கு என்ற சொல்லுக்கும் அடிப்படையில் சொற்புனைவு  வேறுபாடாவது ஒன்றுமில்லை.   வாத்தியார் முன்னுக்கு என்ற சொல்லுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும்,  முற்கு என்று அமைந்து பின்னொரு அம் விகுதிபெற்று  "முற்கம்" என்றாகி  மொழியில் இடம்பிடித்துவிட்ட சொல்லுக்கு அவரென்ன எதிர்ப்புத் தெரிவிக்கப்போகிறார்?
முற்கம் > முக்கம் என்பது ஒலி  குறிக்கும் சொல்.

இன்னொரு பதத்திலும் மு என்ற அடிச்சொல்லும் சேர்விடம் குறிக்கும்  கு என்ற துணுக்குச்சொல்லும் இணைந்து இறுதியில் ஓர் அம் விகுதியையும் இட்டுக்கொண்டு சொல்லமைப்பைச் செய்துள்ளது காண்க. அது மு+ கு+ அம் = முகம் என்ற சொல்லே.  முக்கம் என்ற சொல்லிலும் இம்மூன்றுமே  இணைந்துள்ளன என்றாலும் ஒன்றில் ககர ஒற்றுச் சந்தி எழுத்து வந்துள்ளது; இன்னொன்றில் சந்தி இல்லை. இவ்வாறு ஒன்றில் சந்தி வைத்தும் இன்னொன்றில் அஃது இல்லாமலும் ஆக,  இருசொற்களைத் தோற்றுவித்துள்ளமை ஒரு சீரிய அமைப்புத்திறனே ஆகும்.  இத்திறன் மொழியில் வளர்நாட்களிலேயே நன்கு  வெளிப்பட்டுள்ளது பல சொல்லமைவுகளில் காணலாம்.  எடுத்துக்காட்டுக்கு ஒன்று:   அறு + அம் = அறம்.   அறு+ அம் = அற்றம். இவை இருவேறு பொருண்மைகளை உணர்த்த முன் நிறுத்தப்பட்ட சொற்கள் ஆகுதல் காண்பீர்.

இவ்வாறாக, முன் உள்ளதாகிய முகம் என்னும் சினைப்பெயர் ,  மு+ கு +  அம் = முகமென்றே வந்ததல்லால் முக்கம் என்று வந்திலது அறிக.

முன் என்ற சொல்லிற் போலவே,  பின் என்ற சொல்லிலும் அமைப்புத் திறத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.   பின்+ பு =  பின்பு என்றும் இதனின் பேதமாக பின்+ பு + அம் =  பிம்பம் என்றும் வந்துள்ளமை அறிக. இதற்குக்  காரணமும் கூறுதல் கூடுவதே.  பின்பு என்பதிற் பின்மைக் கருத்து வெளிப்பட்டு நிற்றல் வேண்டும்.  பிம்பம் என்பதில் அக்கருத்து உள்ளுறைவாக மட்டுமிருந்தால் போதுமானதாகும். நிலவுக்குப் பின்னால் என்று யாரும் சொல்வதில்லை,  நிலா கோட்டை கட்டியுள்ளது என்று சிற்றூரார் கூறுவதிலிருந்து இதன் சொல்லமைப்புப் பின்மைக் கருத்து அடியிற் படுத்துவிட்டது.

இவ்வாறு சொல்லாக்க நுட்பங்களை அறிந்திடில் தமிழினிமை தக்கவாறு பளிச்சிடுமென்றறிக.

சொல்லமைப்புக் கருத்து பின்புலத்தில் ஒடுங்கிவிடில் அது நிகழ்ந்த சொல்லைத் திரிசொல்லெனலே தகும்.

இப்போது முன்னுக்கு என்ற உருபேற்ற வழக்குச்சொல்லை மட்டும் வைத்துச் சொல்லமைப்போம்.

முன்னுக்கு
மு என்பதும் முன் என்பதும் ஒரே சொல்லின் இரு வடிவங்கள்.
முன்னு என்பதில்  னு என்பது:    0ன்  என்பது சந்தி. உ என்பது சாரியை.
க்கு என்பதில் க் என்பது சந்தி;  கு என்பது  இடம் அல்லது சேர்விடம்.
ஆகவே அடிப்படை உள்ளிருப்புகள்  மு என்பதும்  கு என்பதும். மற்றவை தள்ளுபடி,
மு + கு,
இப்போது அம் விகுதி சேர்த்துச் சொல்லாக்கம் நிகழ்த்துக.
மு + கு + அம் =  முகம்  ஆயிற்று.
முகம் என்றால் முன்னில் அல்லது முன்னுக்கு உள்ள உறுப்பு என்பதே.
இன்னொரு வகையாகச் சொல்லவேண்டின்
முகம் என்றால் முன்னுக்கு.
முன்னுக்கு என்றால் அது முகம், ஆனால் முன்னுக்கு உள்ள பிறவும் குறிக்கும்

முகம் என்பதை முன்னுக்கு என்பதினின்று அமைத்ததில் முன்னுக்கு உள்ள ஓர் உறுப்புக்குச் சிறப்பான பெயர் வைத்தோம்.
மூஞ்சி என்பது முன் + சி=  மூஞ்சி.  முதனிலை நீண்டு சொல் அமைந்தது.  சி என்பது விகுதி.  இடப்பெயரினின்றும் தோன்றிய ஒரு சினைப்பெயர்.

தட்டச்சு சரிபார்ப்பு பின்,



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.