Pages

திங்கள், 27 ஜனவரி, 2020

சவுத்துப்போதல் ஒரு சிந்தனை

முதலில் நாம் சிந்தனையைச் சிந்தனையிலிருந்தே தொடங்குவோம். எண்ணுவதென்பது மனத்துள் நிகழ்வதாகும்.  அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக இல்லாமல் ஒரு சிறு தொடராக எண்ணி அதை வெளிப்படுத்துவதே சிந்தனை ஆகும். வெளிவரும்போதே அதை அடுத்த மனிதன்" சிந்திப்பா"க உணர்ந்துகொள்கிறான்.  சிறு என்பது "சின்" என்பதிலிருந்தும், அது உருக்கொள்வது  "து" விகுதியாலும், வெளிவருவது இ என்னும் வினையாக்க விகுதியாலும் அறிகிறோம். எனவே சின் து இ > சிந்தி ஆகி  சிந்தித்தல் ஆகிற்று. சிந்துதல் என்பது நீர் போன்றவற்றையும் தூள் போன்றவற்றையும்
அதன் இருப்பு நிலையினின்றும் வெளிக்கொணர்தல். நீரைச் சிந்திவிட்டான், மூக்குப்பொடியைச் சிந்திவிட்டான் என்ற சொல்லாட்சிகளைக் காண்க. இ என்பது இங்கு என்ற சுட்டுச்சொல்  ; அஃது இன்னொரு பொருட்பெயருடனோ வினைப்பெயருடனோ இணைகையில் இடமாற்று ஏற்படுவதையும் குறிக்கும்,
அள் > அள்ளு.  அள் > அளி > அளித்தல் என்பது காண்க. அள்ளுதல் என்பது ஒருசேர்ப்பாக எடுத்தல்;  அளித்தல் என்பது அவ்வாறு எடுத்ததை "இங்கு"  (இ) இடமாற்றிவிடுதல். கொடுத்தலுக்கும் மனவிரிவும் அன்பும் தனதே என்று கவர்ந்துகொள்ளாமையும் வேண்டும்,  ஆதலின் வேறு பொருண்மைக் கருத்துகளும் அதில் ஒட்டிக்கொண்டன. சிந்து என்பது பொருட்பெயராய்ச்  சிறுகவியைக் குறித்தது.  அளவடியின் குறுகிய முச்சீரடி அதுவாகும்.  அது சிறு நெய்யுமநூல்வகையையும் குறித்ததென்பர் வரலாற்றாசிரியர். அந்நூல் வணிகப்பொருளாய் நிலவிய காலத்தில் அவ்வணிகம் நிகழ்ந்த இடமாகிய ஆற்றங்கரையும் சிந்து என்று பெயர் பெற்றதென்பர்.  அங்கு வழங்கிய மொழியும் சிந்தி எனப்பட்டு அது பேசியோரும் சிந்திகள் எனப்பட்டனர். இ என்பது உடைமைக் கருத்துமாம்.  சிந்து + இ : " சிந்து "வை உடையது சிந்தி.

( சளித்துன்பம் உடையோன் ஒருவன் )  மூக்கிலிருக்கும் சளியை வெளியிலெடுக்கையும் மொத்தமாக ஒரே வேளையில் எடுத்துவிடல் இயலாமை காரணமாக ஊற ஊற எடுக்கவே " சிந்துதல். "  மற்றும் "மூக்குச் சிந்துதல் "  என்ற சொல்லாட்சிகள் ஏற்பட்டன. எண்ணங்கள் மனத்துள் ஊற ஊற வெளிப்பட்டு அறியப்படுதலின் அது சிந்து சிந்தி சிந்தித்தல் ஆனது. இவை கூறும் அடிப்படைக் கருத்து சிறுமைதான்.
சேர்த்துவைத்து வெளிவந்த மொத்தமன்று என்பதை உணரவேண்டும். எதிலும் இடக்கரைக் ( vulgarity )  கருதுவதன்றி  அடிப்படை கருதவேண்டும்.

மேலே காட்டியதுபோல ஒவ்வொன்றையும் நுணுக்கி எடுத்து ஆய்வு செய்தாலன்றி எதையும் அறிதற்கியலாது.

இப்போது சவுத்துப்போதல் என்பதுபற்றிச் சிந்திப்போம். சவுத்தலாவது இளகுதல், பொருளின் கட்டித்தன்மை குறைந்து குழைவு அடைதல் என்பவாகும். செத்த உடல் முதலில் சவுத்துப்போகிறது.  இந்நிலையில் அதைச் சற்றே வளைக்கலாம். பின்னர் அது கெட்டிப்படுகிறது.  அப்போது அவ்வுடல் விறைத்துவிட்டதென்பர்.  அதன் கால் கைகளை நகர்த்துவது கூடக் கடினம். நகர்த்தினால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி முன்னிருந்ததுபோல் இருக்கும்.  சா> சாதல்.  சா> சாவு.  இது வு என்னும் விகுதி பெற்ற சொல்.  இது அம் விகுதி பெற்று சா > சா+ அம் > சவம் என்றானது.  இதில் சாகாரம் தன் ஒலிநீட்சி குன்றிச் சகரமானது. சா அம் > சவம் ஆனதில் வகர உடம்படு மெய் தோன்றிச் சொல் அமைந்தது.   இதை இவ்வாறன்றி மாற்றுவிளக்காக சா> சாவு ( விகுதி: வு ) > சாவு+ அம் > சாவம் >  ( நீட்சிகுன்றி ) சவம் ஆயிற்றென்று முடிப்பினும் அஃதேயாம்.

இவ்வாறே சா> சாவுறு > சாவுற்றுப்போதல் > சாவுத்துப்போதல் என்ற அடைவு காண்க. சிற்றம்பலம் என்பது சித்தம்பலம் > சிதம்பரம் ( ற்ற > த்த.  இனி ல - ர திரிபு மொழிகள் பலவினுக்கும் பொதுத்திரிபு )  என்றாம்போல சவுத்துப்போனது என்பதும் ஆனது. அதாவது பொருள் இளக்கநிலை எய்தியது, தன் இறுக்கம் குன்றியது என்பதே.

இனிச் சவாரி என்ற சொல் காண்போம்.

ஆர்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பொருள் பல. அதற்கு ஒத்திருத்தல் என்பதுமொன்று.  பொருந்துதல் தங்குதல் என்றும் உள.  சவம்போல ஒன்றும் இயக்காமல் ( குந்திக்கொண்டு)  செயலின்றி உடன்போவதே சவாரி ஆகும்.

சவ(ம்) >  சவ+ ஆர் + இ = சவாரி,

சவம்போலப் பொருந்திச் செல்லுதல். ஒத்துப்போதல். ஓடுமெதிலும் தங்கிக்கொள்ளுதல் என்பன பொருள்விரியாகும். இஃது ஒரு இனிய செலவொப்பீடு ஆகுதல் காண்க.

நளடைவில் சவ ஒப்பீடு மறைந்து   சவாரி என்ற சொல் தனித்துவம் ( தனி+து+ அம்)  பெற்றதும் நல்லதொரு நிகழ்வே ஆகும்.  இது தமிழர்தம் வணிக அலைவுகளால் பிறவிடங்கட்கும் பரவிற்று. சாலமோன் (  " நல்ல மகன் "  என்ற சொல்லும் இவ்வாறு பரவிய சொல்லே.  மகன் > மோன்.   தோகை  என்ற சொல் எபிரேயமொழியில் காணப்படுவதும் அதைக் கால்டுவெல் சுட்டிக்காட்டியதும் அறிக.  சவுத்த(ல்) என்பது soft  என்பதனுடன் கொண்ட ஒலியொற்றும் காண்க. மற்ற எல்லை தாண்டி உலவும் சொற்களை அவ்வப்போது ஆய்ந்து வெளியிட்டிருக்கிறோம். அவற்றையும் அறிவீராக.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிசெய்யப்படும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.