Pages

செவ்வாய், 25 ஜூன், 2019

மந்தையும் மன்றமும் - ஆய்வு

மன்றம் என்பது உயர்ந்த அறிவாளிகள் கூட்டத்தைக் குறிக்கும் ஒரு சொல். எடுத்துக்காட்டு:  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் அல்லது அவை.

அவை என்ற சொல் மிக்க எளிதாய் அமைந்த சொல்லென்பதை முன்பு விளக்கியுள்ளோம்.  இச்சொல்லில் வையென்பது வைக்கப்பட்டது, நடைபெறுமாறு நிறுவப்பட்டது என்னும் பொருட்டு.  அங்கு புலவர் கூடுமாறு வைக்கப்பட்டுள்ளது.  அது   " அ ( அங்கு ) +  வை ( நடைபெறுமிடம் )"    எனவே அவை ஆகிறது.  இது மிக்க எளிமையாய் அமைந்ததும் எளிமையாய் விளக்கத்தக்கதுமான ஒரு சொல்.  இதை அமைத்தவர்கள்  அக்கூட்டத்தைச்  சுட்டிக் காட்டுதற்குரிய இடத்திலும் வேலையிலும் இருந்தவர்களே.  எனவே இது புலவர் அமைத்த சொல்லன்று.  அரண்மனைக் காவலர்களோ வழிகாட்டுநரோ அமைத்த சொல்லென்பது கடின சிந்தனை ஏதுமின்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது ஆகும்.  எல்லாச் சொற்களையும் ஒரு மொழியில் புலவர்களே அமைத்தனர் என்பது மடமைக் கருத்தே என்பதுணர்க.  எங்கும் பொறுக்கி எடுத்த சொற்களே ஆங்காங்கு எல்லா மொழிகளிலும் கிடைகின்றன.  அவை பலவேறு வகை மக்களால் அமைத்துப் புழங்கப் பட்டவை.

அவை என்ற சொல் பின் பல மொழிகட்குச் சென்றிருக்கலாம்.  அது இயல்பு.
சவை சபை சபா என்றும் திரிந்திருக்கலாம்.  உயர்தரச் சொல்லாய் இன்று கருதப்படலாம்.  தொடக்க நிலை வேறு.  அடைவு நிலை வேறு.

மன்றம் என்ற சொல்லோவெனின்,  மன்றுதல் என்னும் வினைச் சொல் அடியாகப் பிறந்தது. புலவர் அமைத்த சொல்லாக இருக்கலாம்.  மன்றுதல் எனின் கூடியிருப்பது;   சேர்ந்திருப்பது என்பது ஆகும்.   ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கைத் தொடக்க விழவுக்கும் மன்றல் என்ற சொல் வருகிறது. இதுவும் மன்று என்பதனடிப் பிறந்ததே.

மன்று என்ற வினையை மன்+ து என்று பிரிக்கவேண்டும்.   மன் து என்பது மன்று என்று புணர்ந்து சொல்லாவது தமிழின் இயற்கைக்கு ஒத்ததே ஆகும்.

மன் து என்ற அடியும் விகுதியும் இணைந்து இரண்டு சொற்களைப் பிறப்பித்தன.

மன் து என்பது புணர்ச்சித் திரிபு எய்தி  மன்று என்று ஆகி மன்றம் ஆனது.

இனி :

மன் து என்பதே  மந்து என்று மேற்கண்டவாறு திரிபு எய்தாமல் விகுதி இன்னொன்று  ஐ என்பதைப் பெற்று மந்தை என்று  ஆனது.

மன் என்பது கூட்டம் குறிக்கும் என்றோம்.  இரண்டும் கூட்டமே.  ஒன்று மனிதர்கள் கூட்டம் ( மன்றம்).  இன்னொன்று:  விலங்குகள் கூட்டம். மன் து ஐ ( மந்தை ).

ஒரே அடிச்சொல்லைக் கொண்டும்  அதே விகுதியைக் கொண்டும் இருவேறு சொற்களை உருவாக்கி உள்ளனர் பண்டைத் தமிழர்.  இறுதிநிலையாக ஒன்றில் அம் இட்டனர்.  இன்னொன்றில் ஐ இட்டனர்.

மொழிக்குச் சொல்லைப் படைப்பதென்றால் இப்படியன்றோ திறம்படப் படைக்கவேண்டும்.

சந்தி விதிகள் என்பவை உரைநடை  செய்யுள் முதலியவற்றுக்குரியவாம். சொல்லாக்கத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.. அந்த விதிகள் வேண்டியாங்கு பயன்படும். பயன்பாடின்றியும் ஒழியும்.  இங்கு விதிகளினும்  சொல்லமை வசதிகளே மேல்வருவன காண்க.

கூட்டம் என்பதே உள்ளுறை பொருளாயினும்  ஒன்று மனிதர்க்கும் இன்னொன்று விலங்குக்கும் ஒதுக்கம் பெறுவது இடுகுறி ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.