தசைதின்னிச் சின்`கோலிகள்.
'Flesh-Eating' Bacteria
இதுபற்றிய பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றை நீங்கள் வாசித்திருப்பீர்கள். இப்போது இன்னொன்று.
உருப்பெருக்கியில் (நுண்பெருக்காடியில் ) நோக்கினால் இந்தச் சின்`கோலிகள் சின்னக் கோல்கள் போல் காணப்படும். ஆதலின் இவற்றுக்கு இப்பெயர் தமிழில் பொருத்தமானது. இது "பாக்டிரியா" என்னும் ஆங்கிலச் சொல்லின் ஏற்கத் தக்க தமிழாக்கமாகும். பாக்டிரியா எனின் சின்னக் கோல்கள் போல் தோன்றுவன என்பதே பொருளாகும்.
வியாதி என்று தமிழில் வழங்கும் சொல் மிக அருமையாய் அமைந்தது.
விய என்றால் பெரிது என்பது பொருள். விய+ ஆதி : பெரிதாகிக் கொண்டு செல்வது. அதுதான் இந்த நுண்ம உயிர்களின் நடவடிக்கையால் இப்போது நடைபெற்றுக்கொண்டு உள்ளது காண்பீர். வியத்தல் என்பது வினைச்சொல். வியந்தேன் - பெரிதாகக் கண்டேன் அல்லது உணர்ந்தேன் என்பதே பொருள். விய - வியப்பு என்றுமாகும்.
வியனுலகு என்ற குறள் சொற்பயன்பாட்டில் பெரிதான உலகு என்று பொருள்.
பலர் இறந்துபோவதைக் கண்டு கண்டு பழக்கப்பட்ட ஒரு மனிதன், இறப்பது வழக்கமாக நடைபெறுவது என்ற நிலைக்கு வந்துவிடுகிறான். இவன் " ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்ற பழமொழியைப் புனைந்ததில் யாதொரு வியப்புமில்லை. ( பாருங்கள்: வியப்பு என்ற சொல் வந்துவிட்டது ). பண்டிருந்த கற்காலத்துக்கும் முற்காலத்தில் காடுமலைகளில் வாழ்ந்த மனிதன், சாவின் தன்மையைச் சிந்திப்பவனாய், ஏதோ பெரிதொன்று நடைபெறுகின்றது என்று நினைத்தான். நன்றாக இருந்தவன் கோணல்கோணலாய்ப் பிடித்துக் கைகால் இழுத்து விழுந்து இறக்க, அதேபோல் நிலைமை பிறருக்கும் பரவி அவர்களும் இறக்க, சாவுக்களம் விரிவுபடுவதை மனிதன் உணர்ந்தான். விய ஆதி ( பெரிதாக ஆகுதல் ) நடைபெற்றது கண்டான். இதை விளைவிக்கும் அந்த ஏதோ ஒன்றுக்கு வியாதி என்று பெயரிட்டான்.
பரவுவதே வியாதி. நாளடைவில் அதிகம் பரவாமல் ஒருத்தனைக் கொன்ற நோய்க்கும் வியாதி என்றே கூறப்பட்டது இச்சொல்லின் பொருட்குறுக்கம் ஆகும். அடிச்சொல் விய என்பது பெரிதாவது என்று பொருள்தருவதே இதற்குக் காரணம்.
சாவு நிகழ்ந்தே தீருமென்பது மிக்கத் தெளிவான பின்னர்:
"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு"
என்பது உலகின் பெருமை என்பது உணரப்பட்டது.
இன்றைய நிலையில் சாவைத் தருவது எது? அது சாதாரணமானதுதான். எப்படியும் நிகழ்ந்தே தீரும். இறைவன் ஒருவனே நித்தியன் என்று நினைத்தான் , உணர்ந்தான் மனிதன்.
சா - சாவை,
தார் = தருவது.
அண் = அடுத்து
அம் : அமைந்தே தீரும் என்னும் பொருளை உணர்த்தும் விகுதி.
தரு : தாராய், வரு : வாராய் என்றும் திரியும். இது எதிர்மறைப் பொருளும் தரும்.
வாராய்: வருவாய்,
வாராய்: வரமாட்டாய்
இவற்றின் பொருளை வாக்கியத்தை நோக்கி அறிக.
சாவு என்பது சாய்தல் என்னும் அடிச்சொல்லின் பொருள் வளர்ச்சி ஆகும்.
சின்`கோலிகள் விளைப்பது விய ஆதி ஆகிய வியாதிதான். வியாதியால் மரணம் ஏற்படுவதும் சாதாரண நிகழ்வுதான் . சா- சாவை தார் ( தரு) தருகின்ற அண் - அடுத்த அம்: நிகழ்வுதான். அல்லது சாய்வு தரும் நிகழ்வுதான். நடந்தே தீர்வது.
இவைகளெல்லாம் எப்போதும் ஆவது என்று
வேதம் உணர்ந்தார் வியக்காமல் உரைப்பினும்--- தம் மக்களுக்குச்
சாதம் அளிக்கும் உயர்ந்த உழைபாளிகள் கவனம் கொள்வதே கருதத் தக்கது ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.