Pages

வெள்ளி, 21 ஜூன், 2019

மாது - தவறான சொல்!

மாது என்ற சொல் பேச்சு வழக்கில் அவ்வளவாக வருவதில்லை. அதற்குப் பதிலாகப் பெண்பிள்ளை என்ற சொல்லின் திரிந்த வடிவத்தையே கையாள்கின்றனர்.

பெண் என்ற சொல் பொம் என்று திரிவது வேடிக்கைதான்.   எகரத் தொடக்கம் ஒகரமாகவும் ணகர ஒற்று மகர ஒற்றாகவும் மாறிவிடும் நிலையில் திரிபுகளுக்குப் பெயர்போனவர்கள் தமிழ்ப்பேசுவோர் என்பது தெளிவாகவே தெரிகிறது.

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழர் தம் நெறியாம்.

இலக்கணப் படி அம்மாவை அவள் என்றுதான் குறிப்பிட வேண்டும்.   உயர்வுப் பன்மையில்  அவர் என்று  சொல்லலாம்.   ஆனால் பலர் அது என்றும் சொல்வதுண்டு.   அம்மா அஃறிணை ஆக்கப்பட்டாலும்,  அது என்பதன் உள்நோக்கம் பணிவு குறித்தலே ஆகும்.

அருகில் நிற்கும் அம்மாவைக் குறிக்க:

என் அம்மா அது.....

என்பதுமுண்டு.  நாளடைவில் அம்மா போலும் உயர்வுக்குரியவர்களையும் என் என்ற சொல்லைத் தவிர்த்து   "  அம்மா அது "   அல்லது  "  மா து " என்றனர்.

அம்மா என்ற விளி வடிவச் சொல்லின்  இறுதி:  மா.
அது என்பதன் இறுதி:   து.   து என்பதோ அஃறிணை விகுதி.

மா+ து  =   மாது;   பெண் என்ற பொதுப்பொருளில் இப்போது வழங்குகிறது.

மாது என்பதில் து என்பதாம்  அஃறிணை விகுதியை வைத்துக்கொண்டவாறே,   அர் விகுதிப் பன்மையும் பெற்று மாதர்  என்று ஆகிவிடுகிறது.

மாதர்தம்மை இழிவு செய்யும் என்ற வரி வரும் பாரதி பாடலில்  இஃது  உயர்வான பொருளுடன் மிளிர்கின்றது.

மாது என்பது ஒரு பகவொட்டுச் சொல்  அல்லது போர்மென்டோ ஆகும்.  இதன் ஆதிப் பொருள்  அது அம்மா என்ற பணிவான குறிப்பே.   உயர் வினால் அஃறிணை வடிவில் அமைந்துவிட்ட வழுவமைதிச் சொல் ஆகும்.

து விகுதி பெற்ற அஃறிணைச் சொற்கள் பல. இச்சொற்களில் திணை வலிமை பெறவில்லை.   கைது என்பது கையகப் படுதல் என்னும் தொழிலைக் குறித்து நிற்கின்றது.    விழுது என்பது சினைப் பெயர்.

பல சொற்களில் இது அது என்பன சொல்லாக்க இடைநிலையாக வரும்.  எடுத்துக்காட்டு:

பருவதம் :   பரு+  அது + அம் =  பருவதம் > பர்வதம்.   பருமை உடையதாகிய மலை.

இப்போது இன்னும் படைக்கப்படாத இரண்டு புதிய சொற்களை மேற்கண்ட பாணியிலே அமைத்துக் காண்போம்.

அம்மா அவள் >   மா + அள்=    மாவள்.
அப்பா அவன் >  பா + அன் =  பாவன்.

அப்பா அம்மா இவர்களை அவன் அவள் எனல் ஏற்றுக்கொள்ள இயலாதவை,
இற்றை நிலையில்.  இருப்பினும் அமைத்துப் பார்த்தோம்.


அறிந்து மகிழ்க.

திருத்தம் வேண்டின் பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.