Pages

சனி, 4 மே, 2019

சீக்காது, சீத்தலை, வாத்தியம், சூத்திரம் மற்றும் சீக்காட்டுதல்.

காதில் சீழ் வைக்கும் ஒரு வீக்க நோய் உள்ளது.   தற்கால நடையில் இதற்குக் காது அழற்சி என்று கூறுவர். இதன் பழைய பெயர் : " சீக்காது " என்பது ஆகும்.

இப்பெயரை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சீக்கு + ஆது  என்று பிரிவதற்குரிய சொல்போல் தோன்றும்.  அது சரியன்று.  இதனை ஆய்வோம்.

இந்நோயில் காதில் சீழ் வைத்து வீங்கும்.  ஆகவே  சீழ் அல்லது சலம் என்று பொருள் படும் சொல்லும் காது என்ற உறுப்பின் பெயரும் இணைப்புற்று உள்ளது. இணையவே,  சீழ்க்காது என்று ஆகி,    ழகர ஒற்று மறைந்து சீக்காது ஆயிற்று.

இப்படி ழகர ஒற்று மறைந்த இன்னொரு சொல் வேண்டுமெனின்:

வாழ்த்தியம்  >  வாத்தியம் என்பது காண்க.  ழகர ஒற்று மறைந்ததால் இஃது ஒரு திரிசொல் ஆகும்,

இயம்  என்பது பல ஒலிக்கருவிகளுடன் இயங்கும் ஒரு கூட்டம்.  வாழ்த்து என்பது தான் வாத்து ஆகிவிட்டது.   வாத்து என்ற பறவை வேறு.

சூழ்+ திறம் >  சூழ்த்திறம் >  சூத்திறம் >  சூத்திரம் என்பதும் காண்க.

எதையும் ஆலோசித்துத் திறனுடன் செய்தவனே சூத்திரன்.  பண்டைக் குமுகம் கைத்திறன் உடையவனை மதிக்கத் தவறினமையால்  சூழ்ந்து திறம்பட ஒன்றைச் செய்வோன் மதிப்புப் பெறாதொழிந்தான்.  திறமுடன் அமைக்கப்பட்ட நூற்பாவே  சூத்திரம்.  இது உண்மையில் சூழ் திறம் கொண்ட நூலின் பாடல் ஆகும்.

சீக்காட்டுதல் என்ற இன்னொரு சொல்லும் உளது, இதுவும் உண்மையில் சீழ்க் காட்டுதல் தான்,  ழகர ஒற்று மறைந்தது.  சீக்காட்டுதல் என்றால் சீழ் அல்லது சலம் வைத்தல்.

சீத்தலைச் சாத்தனார் என்ற சங்கப் புலவரின் பெயரின் சீத்தலை என்பது  சீழ் பிடித்த தலை என்று பொருள்பாடாமல்  குளித்தலை என்ற ஊர்ப்பெயர் போலும் அமைந்ததே என்று உணரற்பாலது.  சீர்த்தலை >  சீத்தலை.  தலையென்பது இடம்.  சீரமைந்த இடம் என்பது பொருளாகும்.

தலை > தலம்,    இது அம் விகுதி பெற்ற சொல்.

அறிந்து மகிழ்வோம்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.