Pages

வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஆசிரியர், வாத்தியார் , உபாத்தியாயர் - வேறுபாடுகள்.

உபாத்தியாயர்,  வாத்தியார்,  ஆசிரியர் எல்லாம் ஒரே பொருளுடைய சொற்கள் போல் தோன்றுகின்றன.  ஒரு வகுப்பில் மாணவனிடம் ஒரே பொருளுடைய சொற்களைத் தேர்ந்தெடு என்று ஒரு பயிற்சி தரப்படுகிறது.  மாணவன் ஆசிரியர் என்றால் உபாத்தியாயர் என்று தெரிவிக்கிறான். அப்போது சொல்லிக்கொடுப்பவர் அது சரியென்று அவனுக்கு மதிப்பெண்கள் தருகிறார்.

இது சரிதான்.  தொடக்க நிலையில் சிந்திப்பவர்க்கு இவை எல்லாம் ஒரே பொருளுடையவைதாம்.  மேல் வகுப்பில் அதே மாணவனுக்கு இன்னோர் ஆசிரியர்: இவை பொருள் வேறுபாடு உடைய சொற்கள் என்று சொல்கிறார். இப்போது  இது சரியா என்றால் இதுவும் சரிதான்.

ஒரே பொருண்மை காட்டும் பல சொற்கள் இருக்கலாம். ஆனால் அவை ஒன்றுக்கு ஒன்று நுண்பொருள் வேறுபாடு உடையவை.  ஏரி  குளம்-  இவை இரண்டும் நீர்நிலைகள்தாம்.  ஆனால் ஏரி குளமன்று; குளமும் ஏரியன்று: இவை இரண்டும் கிணறு என்பதில் அடங்குபவையும் அல்ல.

பருப்பொருள் ஒற்றுமை; நுண்பொருள் வேறுபாடு.

வாத்தி:  இது வாய்த்தி என்று வழக்குச் சொல்லால் சிற்றூர்களில் வழங்கி தன் யகர ஒற்றை இழந்து  வாத்தி  ஆனது.  சொல்லமைப்புப் பொருள் கொண்டு நோக்கினால், வாய்ப்பாடம் சொல்லிக்கொடுப்பவன் என்று பொருள்.  வாத்தியார் என்பதில் இறுதி ஆர் பணிவுப்பன்மை அல்லது மரியாதைப் பன்மை ஆகும்.

உபாத்தியாயர் என்ற வடசொல்  உப அத்தியாயி என்று பிரியும். இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர் என்று பொருள். சமஸ்கிருதத்தில் இது பெண்ணையும் குறிக்கும்;  இலக்கணம் சொல்லிக்கொடுப்பவரின் மனைவியையும் குறிக்கும். சமஸ்கிருதத்தில் இடம்நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.தமிழில் இந்தத் தொல்லை இப்போது இல்லை. கற்பிப்போன் எவனும் உபாத்தியாயர் தாம். இதன் நுண்பொருள் தமிழில் இல்லையாயிற்று.

ஆசிரியன் என்போன் பெரும்புலமை வாய்ந்த வல்லோன். மொழியில் இதை இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று புலவர்க்கும் அறிவுறுத்தும் பெரும்புலமை வாய்ந்தவன்.  எடுத்துக்காட்டு:  தொல்காப்பியனார்.  வடசொல் என்பது வருங்கால் வட எழுத்துக்களை நீக்கி எழுது என்று சூத்திரம் செய்தார். கடல்போலும் பெருங்கல்வியால் இதை இப்படித்தான் செய்க என்று புலவர்க்குக் கட்டளையிடும் அதிகாரம் படைத்தவர்.  கற்றோருலகு அவரைப் பின்பற்றும். மன்னரும் பின்செல்வர்.  இன்று இத்தகைய ஆசிரியர்களைப் பொருளியல் துறையிலும் பிற துறைகளிலும் அவ்வப்போது கண்டுணர்கிறோம்.  பொருளிய நெருக்கடி காலத்திலும் அரசு செலவுகளை மேற்கொள்ளவேண்டு மென்பார். இன்னொருவர் அவ்வாறு செய்யக்கூடாது என்பார். இவர்களுக்குள் கொள்கை வேறுபாடுகளும் இருக்கும். இவர்களை  பொருளியல் ஆசிரியர் எனலாம்.  ஆசு என்பது பற்றுக்கோடு. பற்றி நிற்பது.  ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றி நிற்பார்.   ஐயனாரிதனாரும் தொல்காப்பியனாரும் தம்முள் சில வேளைகளில் வேறுபட்டுச் சூத்திரம் செய்துள்ளனர்.  இருவரும் ஆசிரியர்கள். ஒருவருக்கு இது சரி; இன்னொருவருக்கு இன்னொன்று சரி.  இப்படிப் பட்டவர்கள் ஆசிரியர்கள்.

மக்கள்தொகை பற்றிய தெரிவியலில் ( தியரி )  மால்தஸ் பிள்ளைகள் அதிகம் பெறக்கூடாது என்பதையும் அதற்கான காரணங்களையும் கூறியுள்ளார் ..இப்போது உள்ள ஆசிரியர்கள் பிள்ளைகள் வேண்டும், அதனால் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கொள்கை வகுக்கின்றனர்.
ஆள்பலம் பற்றிய கொள்கையில் அரசுகளிடையே வேறுபாடுகள் உள்ளன. ஒரு நாட்டுக்கு நல்லது இன்னொரு நாட்டுக்கு ஏலாதது ஆகிவிடுகிறது.

ஆனால் இன்று இந்த நுண்பொருள் வழக்கிறந்துவிட்டது.  வாத்தியார் என்பதும் ஆசிரியர் என்பதும் ஒருபொருண்மைபோல் வழங்குகின்றன என்பதறிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.