Pages

வெள்ளி, 7 டிசம்பர், 2018

எளிதில் அமைப்பறிய முடியாத சொற்கள்.



இவையெல்லாம் நோக்கியவுடன் அமைப்பறிய மாட்டாதவை.

தபால்: அஞ்சலக ஊழியர் தன் பால் ( தன்னிடம் ) கொண்டுதருவதே தபால்.


என்மட்டில் இஃது ஒரு திறமுடைய சொல்லமைப்பு ஆகும். ஒரே எழுத்தை நீக்கி ஒரு சொல்லை உருவாக்கிவிட்டனர். தன் பால் என்பது ஒரு காரணமாகவும் அஞ்சல் என்பது புதியபொருளாக வும் போதருகிறது. ஆகவே காரண இடுகுறி ஆகும். இச்சொலலாக்கத்தால் வேறு சில மொழிகளும் பயன் கண்டன.

தந்தி :    தொலைச்செய்தி அலுவலகத்தின் ஊழியர் தந்து செல்வது தந்தி. 


அடிச் சொல் தா என்பது என்றாலும் தந்து என்ற எச்ச வினையி லிடுந்து நேரடியாய் அமைந்த சொல். ஏவல் வினை யிலிருந்து அமையாமல் எச்சத்திலிருந்து சொல்லமைதல் பிறமொழிகளிலும் காணப்படுவதே.

வதந்தி: வருவோர் கூறிச்செல்வதும் பெரும்பாலும் ஆதாரமற்றது ஆனதுமாம் செய்தியே வதந்தி. 
வ = வந்தவர்; தந்தி : தந்துசென்றது.

இறுதியில் நின்ற தி-யை விகுதி எனினும் திரும்பியது என்பதன் குறிப்பு எனி -னும் இழுக்கில்லை என்க. வந்தவர் தந்து ( சொல்லித்) திரும்பிவிட்டார்,  இப்போது பலராலும் சொல்லப்படுகிறது என்பதாம்.


சில சோதிடச் சொற்கள்:


சோதிடம் :


நக்கத்திரங்கள் என்னும் நட்சத்திரங்கள் ஒளியைச்சொரிகின்றன, . அஃது மட்டு மின்றி நன்மை தீமைகளையும் சொரிகின்றன. இச்சொல் சோர்தல் என்றும் திரியும். இரண்டுக்கும் கொட்டுதல். வடிதல் முதலிய பொருளுண்டு. வானுலாவும் ஒளிவீச்சு உடுக்களும் கோள்களும் அவ்வொளியை நமக்குச் சொரியவே செய்கின்றன.

சொரி > சோர்.

சோர் > சோர்தி > சோதி > ( ஜோதி> ஜ்யோதி ).

இடையில் வருமெழுத்துக்கள் மறைந்து புதிய சொற்கள் உருவாகும். எடுத்துக்காட்டுகள்:
நேர் > நேர்மித்தல் > நேமித்தல். 1
சேர் > சேர்மித்தல் > சேமித்தல்.

இன்னும் பல. இப்படி அமைந்ததே சோதி ( சோர்தி ) என்ற சொல்.
சோர்தி >  சோதி.  ர் என்ற ஒற்று மறைந்தது.
உயர்த்தி என்பது ஒஸ்தி ஆகிவிட்டால் அயலாகிவிடாது.  அதுபோலவே சோதி என்பது ஜோதி ஆயதறிக.

சோதியை சோர்தி என்று எழுதிப் படித்துக்கொண்டிருங்கள். அதனால் முட்டை உடைந்தா  போய்விடும்?

இந்த வான்வடி சோர்தி, இன்ப துன்பங்களையும் சேர்த்துச் சொரிகின்றன நம்மேல்.(இந்த நம்பிக்கை தான் சோதிடத்துக்கு அடிப்படை ) . இது மெய்ப்பிக்கவும் பொய்ப்பிக்கவும் இயலாதது. காட்டுக்குச் சென்ற காளைமாடு கதிர்மறைந்து கண் காணாத வரை கழறிக் கொண்டிருந்தாலும் பயனில்லை. காலத்தை முன்னறியக் கலைகள் அறிவியல் வேறு நம்மிடமில்லை.  சோதிடம் போன்றவை, மனிதனின் கையில் விரும்பினால் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளத் தக்க ஆயுதங்கள். கத்தியால் பழத்தை வெட்டி உண்பவன் அதைக் கடித்து உண்பவனைச் சாடவேண்டியதில்லை.  எப்படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வ தென்பது உங்கள் விருப்பமாகும்.

இராசி : ஆசிட்டு இருக்குமிடம்
இரு+ ஆசி= இராசி ஆகும்

.ஆசு + இ = ஆசி. ( ஆசீர் என்பது வேறு ).


ஆசு என்பது பற்றிக்கொண்டிருத்தல்.  ஆசிரியன் என்பதற்கும் இதுவே அடிச் சொல்.


அடிக்குறிப்பு:


1 ( நியமித்தல் என்பது நில் > நி (கடைக்குறை ) > நி அம் இத்தல் .
நியமித்தல் ஆனது என்று கூறுவர்.நி+ அமைத்தல் = நியமைத்தல் > நியமித்தல். என்றும் கூறலாம். அதே. நிற்குமாறு அமைத்தல். மாறாமல் நிலைபெறுவித்தல். 


பிழைத்திருத்தம் பின்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.