Pages

செவ்வாய், 25 டிசம்பர், 2018

குடிமகன் மற்றும் இணையமான் ( நெட்டிசன்)

ஜகம் என்ற சொல்லின் தொடர்பில்  நாம் பகவொட்டுச் சொற்களை அறிந்துகொண்டோம்.

அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2015/10/etc.html

மேலும் இது:

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_23.html

ஆங்கில மொழியில் புதிய பகவொட்டுச் சொற்கள் பல வந்தவண்ணம் உள்ளன.  விரிந்த பயன்பாட்டின் காரணமாக இவ்வகைச் சொற்களின் தொகுதி வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.  இவற்றில் சிலவற்றையாவது நீங்கள் நாடோறும் எதிர்கொள்ள நேர்த்திருக்கும் என்னில் மிகையன்று.

சிட்டிஸன் என்னும்  - குடிமகன்/ள்  என்று பொருடரும் சொல் சில காலமாக ஆங்கிலத்தில் வழக்கில் இருந்துவருகிறது.  இதன் சொல்லமைப்புப் பொருள் நகரவாணன் என்பதே.   நகரவாணன் என்பது உண்மையில் நகரவாழ்நன் என்பதன் திரிபு என்பதை அறிவீர்கள். வாழ்நாள் என்பது வாணாள் என்று திரிந்தமைபோலுமே  நகர வாழ்நர் என்பது நகரவாணர் என்று திரிந்தது.

வாண் என்பது புணரியல் வடிவமேயன்றி ஒரு தனிச்சொல்லாய்த் தமிழ்மொழியில் கிட்டுவதில்லை.  எனவே வாண்+ அர் =  வாணர் என்று காட்டற்கியலாமை அறிக.  திரிசொல்லின் பாதிவடிவ மாதலின்  வாழ்நர் என்பதினின்றே இதை விளக்கற்கியலும்.

கலைவாணர் :  கலையினால் பெருவாழ்வு உடையார்.
மதிவாணர்  :   அறிவினால் பெருவாழ்வு உடையார்.

இதனால் வாழ்நர் என்ற சொல்லின் ஆட்சியை  அறியலாகும்.

ஆதிப்பொருள் சிட்டிஸன் என்பதற்கு  an inhabitant of a particular town or city என்பதே ஆனாலும் ஆங்கிலத்தில் அப்பொருள் இன்று விரிந்துள்ளது.   ஒரு நாட்டின் குடியாண்மை யுரியோன் என்பதே இற்றை விரிபொருள் ஆகின்றது.  காரண இடுகுறி என்பது தனிவிளக்கமாகத் தரப்படவில்லையேனும் அவ்வமைவு ஆங்கிலத்திலும் ஏனை மொழிகளிலும்  உள்ளதென்று அறிக.

சிட்டிஸன் என்பதிலிருந்து பகவொட்டாக நெட்டிஸன் என்ற சொல் அமைத்து அதனை வழங்கிவருகின்றனர். இது போர்ட்மென்டோ எனப்படும் வகைச்சொல்.   குடிமகன் என்பதிலிருந்து இணையமகன் என்று அமைக்கலாம் என்றாலும் மகன் என்பதன் திரிபாகிய மான்  ( பெருமகன் > பெருமான்)   என்ற பின்னொட்டினை இணைத்து இணையமான் என்பதையே நெட்டிஸன் என்பதற்கு நேராய் வழங்கலாம் என்பது எம் துணிபு ஆகும்.  மகன் என்பது பிறப்புப் பொருளினின்று நீங்காது நிற்கின்றது என்பதை நோக்க மான் என்ற திரிபின்னொட்டே பொருத்தமாகிறது. மான் என்று சொல்லும்போது பிறப்பு பற்றி எண்ணம் வரவில்லை; ஒருவேளை மான் என்னும் விலங்குபற்றி எண்ணம் எழலாம் எனின் அதை அறிவு நீக்கித்தரும் என்பதை அறிக. சிட்டிஸன் என்பதற்குக் குடிமகன் என்பது ஒருவாறு பழகிப்போய்விட்டபடியால் மகன் எனற்பாலதன் தனிப்பொருண்மை இங்கு போதரவில்லை எனக் கருத்துக்கொள்க.

குடிமகன் என்பது குடிமான் என்று திரியவில்லை;  இவ் வடிவம் காணப்படாமையின். 

இணையவாணர் எனினும் நன்றேபோல் உணர்கிறோம்.

அதியமான்
மலையமான்
நெடுமான்
புத்திமான்
கருமான்
செம்மான்
பெம்மான்  ( பெருமான் என்பது பின்னும் திரிந்தது )
எம்மான்     (எம் + (பெரு) மான் )

இயற்பெயர்களிலும் பிற பொதுப்பெயர்களிலும் மான் இறுதி காணப்படும். இவற்றில் ம் இடைநிலை; ஆன் என்பதே விகுதி.  புத்தி+ ம் + ஆன்.

பிறவா வரம் தாரும் பெம்மானே :  பாட்டு.
எம்மான் எல்லோரும் இன்புற்றிருக்கத் தன் உயிர் வாழ்ந்த  : பாட்டு. பாபநாசன் சிவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.