Pages

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பெருவுடையார் பிருகதீஸ்வரர் கோயில் சொல் பொருள்.

பிருகதீஸ்வரர் சொல்லமைப்பு.

இந்தச் சொல்லை இப்போது கணித்தறிவோம்.

இக்கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பெற்றதென்பது நாம் அறிந்ததே, இதைக் கட்டும்போது அம்மன்னன் என்ன பெயரிட்டான் என்பதை நாம் அறியோம்.   ஆதிப் பெயர் எதுவாகவேனும் இருக்கட்டுமே.  இச்சொல் எப்படிப் புனையப்பட்டதென்பதை மட்டும் பற்றி இங்கே உரையாடுவோம்.

கோயிலின் பெயர்களிலொன்று பெருவுடையார் கோயிலென்பது.  உடையவர்கள் உலகில் பலர் எனினும் உண்மையில் யாவையும் உடையான் என்போன் கடவுளாகிய சிவபெருமானே ஆவான். ஆகவே பெரு உடையார் என்பது பொருத்தனமான பெயர்.

உடையார் என்ற சொல்லின்முன் பெருமை குறிக்கும் பெரு என்னும் உரிச்சொல் வருவதாயின் அது பேர் என்று திரியவேண்டுமென்பது இலக்கணம்.   ஒரு ஊர் என்பது ஓர் ஊர் அல்லது ஓரூர் என்று மாறும்.  அதுபோலவே இச்சொல்லும்.  கவிதையில் மட்டும் இசை முறிவு ஏற்படுமாயின் இசையைத் தக்கவைத்துக்கொள்ள இவ்விதியைக் கவிஞர் புறந்தள்ளலாம்.  கவிதைக்கு ஓசையே முதன்மை. இலக்கணத்தில் மாற்றம் செய்துகொள்ளத்தக்க இடங்களும் உள்ளன.

இந்தப் பெயரில் அப்படி வராமல் பெரு உடையார் -  பெருவுடையார் என்று வருகிறது.  எனவே பெருவு உடையார் என்பதுதான் இதுவோ என்று எண்ணத் தோன்றும்.  பெருவு என்ற சொல் பெரியது என்ற பொருளில் தனிச்சொல்லாய்க் கிடைக்கவில்லை.  ஆனால் நமச்சிவாய என்ற மந்திரம் பெருவெழுத்து என்று கூறப்படும்.  இச்சொல்லும் பேரெழுத்து என்று திரிபு கொள்ளாமல் பெருவெழுத்து என்றே கிடைக்கின்றது.  பேரெழுத்து என்ற சொல்லும் பெருவெழுத்து என்பதும் ஒன்றென்று கூறுவதற்கில்லை. இவை பொருள் வேறுபாடு உள்ளவை.  ஆதலின் பெருவு என்ற ஒருசொல் இருந்து அது பெரியோன் சிவன் என்ற பொருளில் வழங்கிற்று என்று கொள்க. அச்சொல் வழக்கிறந்துவிட்ட தென்பதை இவ் வடிவங்கள் காட்டுகின்றன.  பெருவு உடையார் - பெருவுடையார் எனின் பெரு என்பது   பேர் என்று மாறத் தக்கதன்று.  நிலைமொழி ஈற்று வுகரம் உகரம் வர,  வந்த உகரம் ஒழியும்.
இப்போது இலக்கணம் சரியாய் உள்ளது.

பின்னாளில் பெருவுடையார் என்ற சொல் இப்படி மாறிற்று.

பெருவு  -  பிருக.  (பெ >  பி;  வு > வ > க )
அது  -   து. (  இவை இரண்டும் மூலச் சொல் முதனிலையிலும்  மற்றும் இடைநிலையிலும்  ஏற்பட்ட திரிபு )
உடையார்:  ஈஸ்வரர்.  ( இது உடையார் என்பதன் பொருளைத் தருகிறது ).

(பெருமான் > பிரமன் என்று சிலர் கூறுவர்; இதிலும் பெ> பி திரிபு வருகிறது )

(பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழியிலும் பெ-பி மோனையாக நிற்றல் காண்க ).

இத்தமிழ்த் திரிசொற்களையும் உன்னுக:

பெருமான் > பிரான்.   சிவபிரான்.  ஏசுபிரான்.
பெருமாட்டி > பிராட்டி.  சீதாபிராட்டி.

மேற்கூறிய பிருக து ஈஸ்வரர்:

இவற்றை எல்லாம் சேர்த்துப் புணர்த்தினால்  பிருக து ஈஸ்வரர் என்று ஆகி,
புணர்த்தப்பெற்று,   பிருகதீஸ்வரர் என்று சரியாக வருகிறது.   இது ஒரு விளக்க வரலாற்றையும் தெரிவிக்கிறது.  அதாவது பெருவு என்னும் உடையாரே ஈஸ்வரர் என்பதாம் என்பதறிக.  பெருவு என்றால் அது ஈஸ்வரர் என்பதே இதன் பொருள்.  அதாவது சிவன்.


ஆகவே பெருவுடையார் எனின் பிரகதீஸ்வரர்.

பெருவுடையார் என்பதற்குச் சமஸ்கிருதத்தில் பொருளாக்கம் தந்து அதையே ஒரு பெயராக வைக்கப்பட்டிருக்கிறது. திரிபுப் பெயராயினும் மூலப்பெயர் அது; அதன் விளக்கம் இது என்-கின்றது இப்பிற்புனைவுப் பெயர்.

அடிக்குறிப்பு:

பெருவுதல்:  வினைச்சொல்.  பெருவு:  தூக்கத்திற் பிதற்றுதல்.


6 கருத்துகள்:

  1. நல்ல ஒரு பதிவு மிகவும் நன்றி

    பதிலளிநீக்கு
  2. நன்றி உரித்தாகுக, வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. ஏன் சமஸ்கிருதம் மொழ்க்கு இவ்வளவு முக்கியத்துவம் 😐😐😐😐😐

    பதிலளிநீக்கு
  4. இறைவனுக்காகவென்று ஓர் இல்லம் அமைத்தார் மாமன்னர் இராஜராஜ சோழன். அவ்வில்லத்திற்கு எந்த மொழியினரும் வருவர். இறைவன் என்றாலே அவருக்கு மொழிப்பேதம் இல்லை. இறைவனுக்குத் தெரியாத மொழியா? சமஸ்கிருதம் பிற ஆட்சிப்பகுதிகளிலும் அறியப்பட்ட மொழி. மாமன்னர் விரிந்த மொழிநோக்குடையவர். எல்லா மொழிகட்கும் அரவணைப்புத் தந்தவர் அவர். தனது மகள் ஒருவரைக் கம்போடிய அரசன் அனிருத்த என்பானுக்கு மணம் செய்வித்தவர். நீலவுத்தம சோழன் என்னும் தனது தளபதியை ( இப்போது இந்தோனேசியாவில் உள்ள) பாலிம்பாங்கிலிருந்து சிங்கப்பூர்த் தீவைக் கைப்பற்றச் செய்தவர். இவர்தம் பொதுமை நோக்கினைச் சிங்கப்பூரிலுள்ள ஒரு சீனப் பெண் எழுத்தாளர்கூடப் புகழ்ந்ததைப் படித்து வியந்தேன். மலாய் அரசுகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர். அவருக்கு இல்லாத பன்மொழித் தொடர்புகளா? சீனப் பேரரசருக்குப் பொன்னும் மணியும் பரிசுகளாக அனுப்பியவர். அவரைப் போல் மொழிவரம்பு கடந்த திறம்பெறு மன்னரை யாம் கண்டிலம். நாம் மகிழலாம். சிவமாலாவுக்காக அ.மா. மணி

    பதிலளிநீக்கு

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.