Pages

வியாழன், 22 நவம்பர், 2018

திரையிசை வைத்திரவுகள்.

repositories என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு எளிய மொழிபெயர்ப்பைத் தேடினேம்.(சில விநாடிகள் ).  இரு சொற்கள் முன்வந்து நின்றன.  ஒன்று களஞ்சியம் என்பது.  இந்நாளில் இச்சொல் பொருள்விரிவு அடைந்துள்ளது.  தமிழ் செறிந்த ஒரு நூலை எழுதிய அறிஞர் க.ப.மகிழ்நன் ( 1945) அதைத் தமிழ்க் களஞ்சியம் என்று பெயரிட்டார். இனிய தமிழ்நடையான் இயன்றது அந்நூல்.  இவர் தமிழ்நடையை எடுத்துக்காட்டுகளிலொன்றாகப் பாவாணர் முன்வைப்பார்.    களஞ்சியம் -  முற்காலத்தில் தானியங்களை கொணர்ந்து சேர்த்து வைக்குமிடத்தைக் குறித்தது.  யாவருமறிந்த எளியவழியில் இதைச் சொல்வதானால் வைக்குமிடம் எனலாம்.  இதை வைப்பிடம் என்று தோற்றுவிக்கலாம். வைப்பகம் என்றால் சற்று முறைப்படி அமைந்த ஓரிடத்தைக் குறிப்பதாகவே எமக்குத் தோன்றுகிறது.  ஆனால் வைப்பிடத்துக்கு இன்னொரு பெயரும் தமிழில் இல்லாமல் இல்லை. அதுதான் குதிர் என்ற சொல்.  நெல்லைக் கொணர்ந்து கொட்டிவைக்க ஒரு கூடு குடியானவர்கள் வீடுகளில் இருக்கும்.  அந்தக் கூட்டுக்குக் குதிர் என்று பெயர்.

கொஞ்ச நேரம் தேடினாலும் அது தேடுதல்தானே.  ஒரு பொருளைச் சில விநாடிகள் திருடி வைத்திருந்துவிட்டு மனம் மாறி மீண்டும் பழைய இடத்திலே யாருமறியாமல் வைத்துவிட்டாலும் அதுவும் திருட்டுதான் என்று சட்டம் சொல்வதாக அறிவோம்.  அதுவேபோல் தான் தேடுதலும்.

இந்தச் சொற்களையெல்லாம் உங்கள் முன் நிறுத்திவிட்டு, இதற்கு ஒரு புதிய பதத்தை கொண்டுதரலாமோ என்று எண்ணினேம்.  அதற்கான ஒரு சொல்லை மிதப்பித்ததில் வைத்திரவு என்பது  வந்து நின்றது.   வைத்திரு > வைத்திரவு.  இங்கு வைத்திரு என்பதில் உள்ள இறுதி உகரம் கெட்டு அகரமாக மாறிவிட்டிருக்கிறது.  இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கூறவேண்டின், உறு + வு =  உறவு என்றசொல்லைக் கொண்டுநிறுத்தலாம்.  திற+ வு = திறவு என்பதில் எதுவும் திரியாமல் இயல்பாய் அமைந்ததால் உறவு என்னும் சொற்கும் திறவு என்னும் சொற்கும் இலக்கணம் வேறாகிறது. இரவு என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இதன் அடிச்சொல் இர் என்பது.  இர் + உள் = இருள்.   இர்+ ஆ =  இரா.  இர்+ ஆம் + அர் = இராமர்.  (  இருள் நிறமாகுமவர்). இராமரும் கண்ணனும் கருமை நிறம். இரவு என்பதில் ஓர் அகரம் தோன்றியது.

இறுதிச் சில வரிகளைப் பொழித்துரைப்பின்:

உறு + வு =  உறவு.  ( உகரம் கெட்டு அகரம் தோன்றியது).
திற + வு =   திறவு    (  இயல்பு:  அதாவது விகாரம் இல்லை).
இர் + வு =  இரவு.  ( இங்கு ஓர் அகரம் தோன்றியது.)

இவை நோக்கி.  வைத்திரவு என்பதற்கான இலக்கணத்தை நீங்களே சொல்லிவிடலாம்.

இன்று  ஓரிடத்திற்குச் செல்லவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேம்.  ஒன்றன் பின ஒன்றாக இரு விருந்துகள் ஏற்பட்டுவிட்டன:  இருவர் வந்துவிட்டனர். அவர்களுடன் பேசிச்சிரித்து அமுதும் படைத்து அனுப்பி வைக்க வேண்டியதாயிற்று.

அதில் இரண்டாமவராக வந்தவர்  ஓர் இசைப்பிரியர்.  பல பாடல்களைக் குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.   பேசுகையில் ஜோன்புரி என்ற வட இந்திய இராகமும் கல்யாணி என்ற நாமறிந்த கருநட இராகமும் மேலெழுந்தன.  இறுதியில் கல்யாணி இராகத்தில் அமைந்த " நமக்கினிப் பயமேது?"  என்ற பி.யு. சின்னப்பாவின் பாடலைப்  போட்டுக்காட்டினோம்.
அதுகேட்டு அவர் அசந்துவிட்டார்.  இந்தப் பாடலுக்கான இசைத்தட்டு போன்றவை எங்கள் தாத்தா காலத்திலிருந்து எம் வீட்டிலிருந்தன.  பழைய பதிவிசைப் பெட்டியைப் பழையனவாங்குவோரிடம் தூக்கிக்கொடுக்குமுன் சிலமுறை கேட்டிருக்கிறேம்.  இப்போது அது யூடியூபில் கிடைக்கிறது.

பல இசைத்தட்டுகள் உடைந்துவிட்டன. வீடுமாறும்போது உதவியவர்களின் கவனக்குறைவால் அவை போய்விட்டன.

எம்மிடம் முறையான வைத்திரவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சில ஆண்டுகளின் முன் யாமறிந்த முஸ்லீம்  நண்பர் ஒருவர் திருமணத்தின் பின் எம்மையும் சிலரையும் தனிவிருந்துக்கு அழைத்திருந்தார்.  எங்களுக்காக சைவ உணவு உணவகத்திலிருந்து தருவித்திருந்தார்.  உண்டபின் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவர் வீட்டில் நிமையத்துக்கு 78 சுற்று ஓடும் இசைத்தட்டுகள் படப்பெயர்களுடன் வரிசையாக நிலைப்பேழைகளில் அடுக்கியிருக்கக் கண்டோம். 1940 முதல் 1065 வரை  வந்த தமிழ்-   இந்தித் திரைப்படங்களின் பெயர்களும் குறிக்கப்பெற்று இருந்தன. இவற்றுக்குச் சந்தை ஏற்படும், அப்போது அவற்றை உரிய புதிய ஊடகத்தில் (  அதாவது ஓடகத்தில்) பதிவேற்றி விற்பனைக்குக் கொண்டுவரலாம் என்றார். நல்ல திட்டம் என்று யாமும் புகழ்ந்தேம்.  இத்தகைய வைத்திரவு    வேறு  வீடுகளிலும் இருக்கலாம்.  எமது தாத்தா விட்டுப்போனவை சிலவே ஆதலின் யாம் இத்தகு வணிகத்தில்  ஈடுபட நினைக்கவில்லை.

இது ஒரு வைப்பகம் அன்று; அதனினும் சிறிது. குடியிருக்கும் வீட்டினொரு பகுதியுமாகும்.   இது ஒரு வைக்குமிடமும் அன்று;  அதனினும் சற்றுப் பெரிது. ஒரு முறையும் வரிசையும் அங்குக் காணப்பட்டன.  எனவே வைத்திரவு என்று பதத்துடன் இதைப்பற்றிப் பேசலானோம். இவையே திரையிசை வைத்திரவுகள்.

தமிழில் சொற்களை உண்டாக்குதல் கடினமன்று. அதற்கு வசதிகள் பல உள்ளது தமிழாகும். கொஞ்சம் சிந்தனையும் முயற்சியும் இருந்தால் பல படைக்கலாம். போர்ப்படைகளுக்குரிய சில அலுவலர் தரநிலைப் பெயர்களை முன்னர் படைத்து வெளியிட்டதுண்டு. அவை மீளா இருளில் மூழ்கிவிட்டன.

இங்கு உள்ள இடுகைகளின் வழிமுறைகளைப் பற்றிநின்று சில சொற்களையாவது உருவாக்கலாம்.

அறிந்து மகிழ்வீர்.

குறிப்புகள்:

வை :  வைத்து > வத்து > வஸ்து.
வை : வையகம்.  இறைவனால் அல்லது இயற்கையால் வைக்கப்பட்ட இடம்.
வைபோகம்:  இனிமை வேண்டிப் போகும்படியான நிகழ்வு.
வை > வ > வயம்:  வைத்திருப்போனிடம் இருத்தல்.
வை > வயம் > வயந்தம்:   உயிர்களைத் தம்பால் ஈர்க்கும் (வைக்கும் )  காலம்.
வை > வய > வயல்:  பயிர்கள் வைத்திருக்கும் இடம்.
வை > வைத்தியம்:  மருத்துவனால் வைத்துப் பார்க்கப்படும் நோயாளிகள் சிகிச்சை முறை  
இன்னும் பல.

எழுத்துப்பிழைகள் பின் திருத்தப்பெறும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.