Pages

செவ்வாய், 2 அக்டோபர், 2018

அடிச்சொற்கள்: புள், பிள்.

இன்று புட்டி என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

புள் பிள் என்று இரண்டு அடிச்சொற்கள் உள்ளன.  இரண்டும் ஒரு பொருளில் ஏற்படும் துளை போன்ற இடைவெளியையும் இரண்டாக வேறுபட்டு நிற்கும் நிலையும் குறிக்கவல்லவை என்பதை உணர்ந்துகொள்க.

புள் > புழை என்ற சொல்லைக் காண்க. புழை என்ற தொல் ஒரு பெரிய அல்லது சிறிய துவாரத்தைக் குறிக்கலாம்.  அந்தக் காலத்தில்  ஓர் ஆலமரத்தில் ஒரு பெரிய துளை இருந்தது.  இதன் காரணமாக அந்த ஊருக்கே " ஆலப் புழை" என்ற பெயர் வந்து நிலைத்து இன்றுவரை அது நிலவுகின்றது.

இப் புழையில் விழுப்பம் அல்லது சிறப்பு  ( விழேடம்)  என்னவென்று தெரியவில்லை.  விழேடமாவது விழுமிதாய் எடுத்துக்கொள்ளத் தக்க உள்ளீடு.

புள் என்ற அடிச்சொல்லுடன் தி என்னும் விகுதி சேர்க்க, புட்டி ஆகும்.  புள்+தி = புட்டி. துளையுள்ள ஏனம் அல்லது பாத்திரம். ளகர ஒற்றின் இறுவாய் தகர வருக்கம் வர, டகரம் இரட்டித்துச் சொல் அமையும்.

இப்போது சில எடுத்துக்காட்டுகளைக் கூறி இதனைத் தெளிவுறுத்துவாம்:

கள் + து =  கட்டு > கட்டுதல் (வினைச்சொல்).

கள் +  தி =  கட்டி.  நன் கு கட்டப்பெற்று இறுக்கமானதே கட்டி.  இங்கு கட்டப்பெறும் பொருள்:  அணுத்திரள்களாகவும் இருக்கலாம்.  தூள்களாகவும் இருக்கலாம். எதுவாயினும் கட்டும் பசையினால் அல்லது பிறவால், கட்டப்பெற்றுக் கட்டி ஆகிறது.

குள் >  குள்ளை ( நீட்டக் குறைவு, உயரக் குறைவு).

குள் + தி >  குட்டி.  ( நாய்க்குட்டி, பூனைக்குட்டி,  சின்னக்குட்டி ).

பள் + தி = பட்டி.
தாழ்வான நிலங்களில் நீர் இருக்கும். விளைச்சலுக்கு ஏற்ற இடமாக இருக்கலாம். இதன் காரணமாக,  இத்தகு தலங்களில் அமைந்த குடியிருப்புகள் பட்டி எனப்பட்டன.   பட்டு என்றும் வரும்:  எடுத்துக்காட்டு: அம்மானிப்பட்டு. (ஊர்ப்பெயர்). குளத்தூரான்பட்டு.  ( நீங்கள் வரைபடங்களில் தேடி மேற்கொண்டு ஆய்வு செய்து தெரிவியுங்கள்).

இவ்வளவும் புட்டி என்ற சொல்லை விளக்கவே சொல்கிறோம்).

பிள் என்பதிலிருந்து பிளவு, பிளத்தல் இன்னும் பல காண்க. பின் அளவளாவுவோம்.    நன்றி.

 


அடிக்குறிப்புகள்:

விழு+ எடு + அம் = விழேடம்.  இதில் விழு = சிறப்பு.  எடு+ அம் = ஏடம் என்று, முதனிலை நீண்டு பெயர்ச்சொல் ஆனது.  இது பின் அயல்திரிபுகள் கொண்டு உருமாறியதை ஈண்டு கவனிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.