Pages

சனி, 8 செப்டம்பர், 2018

மேகம்

பெட்டாமெதாசோன் வேலரெட் என்ற சொல்லைப் போல மேகம் என்ற சொல்லில் அறிந்து உயர்த்திக் கருதத்தக்க அமைப்புகள் ஏதுமில்லை. மிக்க எளிதாகவே அமைந்த சொல்லே அது.

வானத்தில் மேலே இருப்பது மேகம்.  முதலில் மேல் என்ற சொல்லின் இறுதி லகர ஒற்று  ஒழிந்தது.  இலக்கண ஆசிரியர் லகர ஒற்றுக் கெட்டது என்பார்கள்.  கெட்டது என்றால் இல்லாததானது.  இப்போது மே மட்டுமே உள்ளது.  அதில் கு அம் ஆகிய சிறு துண்டுச் சொற்களைத் தந்து நீட்டினால்
மேகம் ஆகிவிடும்.

கு என்பது சேர்விடம் குறிக்கும் சிறு சொல்.   சிங்கப்பூருக்கு,  மலாக்காவிற்கு என்பவற்றில் அது உருபாக வந்து சேருமிடம் குறிக்கும்.  மே கு அம் என்பதில் "மேலுக்கு" என்பது பொருள் கொண்டாலும் பொருளற்ற இணைப்பு என்று கொண்டாலும் அதனால் கூறத்தக்க விளைவுகள் எவையுமில்லை.  நீங்கள் எப்படி வைத்துக்கொண்டாலும் நல்லதே.  அம் என்பது அமைவு என்பதன் அடிச்சொல். இங்கு விகுதியாக வருகிறது.  அதற்குப் பொருளிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.  ஏன் இப்படிச் சொல்கிறோம் என்றால், சொல்லமைப்பில் அமைந்தபின் உள்ள மொத்தப்பொருள் அல்லது இறுதி அடைவே நாம் சொல்லைப் பயன்படுத்த உதவுவது ஆகும். நாற்காலி என்பதில் நாலு என்றும் கால் என்றும் பிரித்தறிவது சொல்லாய்வுக்குப் பயன்படலாம்; அதில் உட்காருவோனுக்குத் தேவையில்லை.  முக்கால்கள் உள்ளதை  நாற்காலி என்று குறித்துவிட்டாலும் பெரும் விளைவுகள் ஒன்றுமில்லை.

வானிற் பறக்கும் மேகத்தைக் கையால் பிடிப்பதைவிட இச்சொல்லை அறிந்துகொள்ளுதல் மிக்க எளிதாம்.

மேகம் என்பது சிற்றூர்களில் பேச்சில் அறியப்படும் சொல் ஆகும்.  மேலே உள்ளது என்பதுதான் பொருள்.  மேலே உள்ளவெல்லாம் மேகமாகிவிடுமா?  நாலு கால் உள்ளதெல்லாம் நாற்காலியா?  ஆகவே இது பகுதி காரணமும் பகுதி பயன்பாடும் உய்த்த காரண இடுகுறிப் பெயர்.  நிலாவும் சூரியனும் மேலேதான் உள்ளன!  அவை மேகமல்ல. சொல்லமைப்பில் முழுமையும் காரணங்களைத் தழுவிச் சொற்கள் அமைதல் குறைவு. வீட்டில் பேசும் பணிப்பெண்ணைப் பேச்சாளர் என்பதில்லை. ஆனால் அவளும் பேசுகிறாள். ஆகவே "பேச்சாளர்" என்பதுகூட முழுமையும் காரணம் தழுவியது என்று கூறுவதற்கில்லை.

காரண காரியங்களை ஆராயப்போனால் சூரியன் உதிப்பதுமில்லை;  அழுந்தமிழ்வதுமில்லை.  பூமியே சுற்றிக்கொண்டு போகிறது.

அஸ்தமிப்பது என்பது அழுந்தமிழ்வது ஆகும்.  அழுந்து > அஸ்து; அமிழ் > அமி.
அஸ்தமி. நிலத்துக்குள் அல்லது கடலுக்குள் அழுந்துவது;  அப்புறம் அமிழ்வது. இதைப் பார்த்துக் கோபமுற்றோர் அழித்துவிட்டனர்.  ஏறத்தாழ ஈராயிரத்துக்கு மேலான இடுகைகள்   --  இவை பழையகால நெகிழ்தட்டுக்களில் (ப்ளோப்பி டிஸ்க்) உள்ளன. மேற்கொண்டு அவற்றை வெளியிடவில்லை,   மீளா இருளில் சில மூழ்கியிருக்கலாம். 

சங்கப் புலவர் சிலர் பாடியவாக ஒன்றிரண்டு பாடல்களே கிடைக்கின்றன. அவர்கள் நல்லிசைப் புலவர்கள்.  ( அப்படியென்றால் பெரும்பெரும் புலவன்மார்.)  வாழ்க்கை முழுமைக்கும் இரண்டு பாட்டுத்தாம் பாடினரோ? பல்லாயிரம் இருக்கும்.  நம் கைக்கு எட்டியவை :  2.

எட்டியவையே கிட்டியவை: அவை கொண்டு தமிழ் போற்றுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.