Pages

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மோகன் வரையாது வழங்கினவர்.

Click here for Mohan Swami's photo:  http://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_85.html


மோகன்  நினைப்பினிலே முன்வந்து நிற்பதெல்லாம்
ஆகும் பொழுதெல்லாம் அன்புடனே --- தாகம்
பசியின்றிப்  பாரோர் மகிழப்பா    டிக்கை
மிசைக்காசு தந்துவத்த லாம்.

இதன் பொருள்:   மோகன்  நினைப்பினிலே -  மோகன் அவர்களுடைய எண்ணங்களில்;   முன் வந்து நிற்பதெல்லாம் -  முதலாக மேம்பட்டுத் தோன்றுவதெல்லாம்;   ஆகும் பொழுதெல்லாம் -  தேர்வு செய்யப்படும் நல்ல நேரத்திலே;  அன்புடனே -  நேயமான நெஞ்சமுடன்;  பாரோர் -  இன மத வேறுபாடின்றி எம்மனிதரும்;  தாகம் பசி இன்றி மகிழ - நீர் வேட்கையும் உணவை வேண்டுதலும் ஆகியவற்றுக்காகத் துன்பமடையாமல்,  பாடி - நல்ல இசையின் அரவணப்புடன்;  கை மிசை -  கைகளில்;  காசு தந்து -  அவர்களுக்குச் செலவுக்குப் பணம் தந்து;  உவத்தல் ஆம் - தம்  மனம் மகிழ்வு கொள்ளுதல் ஆகும். 

இவர் முதியோர் இல்லங்கள் பலவற்றுக்கு வரையாது வழங்கியவர்.
இவர் படம் முன் இடுகையில் உள்ளது.

இறைவன் இவருக்கும் இவர் மனையாளுக்கும் செல்வங்களை வாரி
வழங்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.

ஊருணி நீர்நிறைந்  தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
என்றார் வள்ளுவனார்.

ஊரில் உள்ள மக்களெல்லாரும் குடிப்பதற்கு நீர் எடுக்கும் குளம் அல்லது ஏரி ஊருணி  எனப்படும்.  ஊர் உண்ணும் குளம் ஊர்+ உண்+ இ;  அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தால் எப்படி இருக்கும்?  ஊரார் மகிழ்வுடன் நீரருந்தித் தாகம் தவிக்காமல் இருப்பர், மகிழ்வர் அல்லரோ?   அறிவாளி  ஒருவருக்குப் பணம் கிடைப்பது அது போன்றதே.  அதனால் பலருடைய துன்பங்களும் தீரும். ஒரு தற்குறியிடத்தில் பணம் இருந்தால் அது நன்மக்களுக்கும் முதியோருக்கும் சிறாருக்கும் கல்வி உணவு உடை உறையுள் முதலியவற்றுக்குப் பயன்படாது. மோகன் உலகு அவாம் பேரறிவுடையார்:  இப்பாரிலுள்ளோர் விரும்பும் சிறந்த அறிவு மிக்கவர் என்று பொருள். திரு வென்பது செல்வம். 

ஒரு சமயம் கோவில் அன்னதானத்துக்கு ஓர் ஆயிரம் பற்றாக்குறை ஏற்பட்டது,  கேள்விப்பட்டவுடன் அந்தக் காசைக் கொடுத்து உதவினார்.

வண்டி வசதி இல்லாத அன்பர்களுக்கு தம் உந்து வண்டியில் பூசை பாட்டு நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வார்.

இன்று சமைக்கவில்லை என்று மட்டும் சொல்லக்கூடாது, இவரிடம். உடனே சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும்.

இத்தகைய பரந்த உள்ளம் பாரிக்கு இருந்தது.  பாரி என்ற சொல்லே பரந்த என்ற சொல்லுடன் தொடர்புடையது.  பர > பார். முதனிலை நீண்டு பெயரானது.  இவரும் அத்தகைய அன்னதானப் பிரபு ஆவார்.

நான் இந்த உடல் அன்று என்ற வேதக் கருத்தை மிகவும் போற்றுவார் இவர்.

இவருடைய துணைவியார் ரஜினி அம்மையார் இவர் போன்ற தங்கமான குணத்தவர்.

இவர்கள் எல்லா நலமும் பெற்று மகிழ வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.