Pages

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சொல்: "சாகரம்" - குமரிக் கண்டத்திற்கு ஆதாரம்.

ஒரு காலத்தில் கடல் என்றால் பேரிடர்களின் பிறப்பிடம் என்று மக்கள் பயந்தனர். பெரும்பாலான புயல்களும் சூறைக்காற்றும் அங்கிருந்துதான் உருவாகிக் கரையைக் கடந்து  நிலத்தில் வாழ்ந்த மக்களைத் தாக்கி அழிவை உண்டாக்கின. கடலைத் தாண்டிப் போவதும் கடினமான காரியம் என்று மக்கள் நினைத்தனர்.

அவர்கள் கடல் என்ற சொல்லை உருவாக்கினர்.

கட+ அல் =  கடல்.

கடத்தற்கு அல்லாத நீர்ப்பரப்பு கடலென்பது.  இனி, அல் என்பது ஒரு வெறும் விகுதி என்று சொன்னாலும் அதையும் ஏற்றுக்கொள்வோம்.  ஏனென்றால் பொருள் எதையும் குறிக்காமல் வெறும்  சொல்லாக்க வேறுபாட்டினை உணர்த்தும் குறியீடாக மட்டும் இந்த விகுதிகள் பயன்பட்டன.  பிற்கால நிகழ்வை முற்காலச் சொல்லில் கண்டு சொன்னாலும் அதில் ஓர் பெரிய வேறுபாடு ஒன்றும் இருக்கப்போவதில்லை.

கட+ அல் என்பதில் பொருளாவது கடத்தலுக்கு அரியதென்பதா அல்லது கடத்தலுக்கு உரியதென்பதா என்று கடா எழலாம்.  கப்பல் தோணி படகு முதலிய மிதவூர்திகள் அமைக்கப்படுமுன் கடல் கடத்தற்கு அரியது என்று பொருள்படவும் இவ்வூர்திகள்  அமைவுற்றபின் கடத்தற்கு உரியது என்றும் பொருள்படவும் வசதியாக வரையறவு செய்துகொள்ளலாம்.  இதனால் நட்டம் ஒன்றுமில்லை.  அது நிற்க, கடல் என்றால் கடத்தற்கு அரியது என்பதனால் வந்த பெயர் என்பதை நாம் என்றும் ஏற்றுக்கொள்ளலாம்.

கடலென்ற சொல் அமைந்த தொல்பழங்காலத்து மனிதர்கள் நாம் அல்லோம் ஆதலின் நாம் இன்று சொல்லை மட்டும் முன்வைத்து  அலசிப் பொருளெடுக்கும் மொழியின் உட்கருவிகளின் துணைகொண்டு  அதனை அறிய முற்படுகிறோம்.

கடல் ஏன் கடத்தற்கு அரியது எனில் காரணங்களை மனித மூளையே தெரிவிக்கும்.  அக்காலத்தில் தோணி படகு முதலியன இல்லை. கடலுக்குள் போவதென்றால் நீச்சல் தெரிந்திருக்கவேண்டும். அதுவும் சில அடி தூரமே நீந்துதல் கூடும்.  சரியாகத் தெரியாதவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு மடிந்துவிடுதலும் ஒரு முடிவு. கடலின்மேல் மனிதனின் ஆட்சி ஏற்பட்ட காலத்தில் கூட இன்னும் காப்பாற்றும் காவலர்கள் இல்லாத நிலையில் கடலுக்குள் கால் வைக்க இயலாதவர்களும் பலர் ஆவர்.

கடலுக்குள் போவோன் கரைக்குத் திரும்புதல் அரிது; இறந்துவிடுவான் என்று நம்பியவர்கள் பலர். இவற்றை வெற்றிகொண்ட முற்காலத் தைரியசாலிகள் என்போர் மீனவர்களே.  கொல்லும் திறம் வாய்ந்த கடலினைத் தெய்வமாக்கியது பண்டை நாகரிகங்கள்.  மனிதனின் இயலாமை அதிலிருந்து வெளிச்சமாகிறது.

இதனால் கடலுக்குச் சாகரம் என்ற பெயரும் ஏற்பட்டது.  அருகில் போனால் மனிதன் இறக்க நேரிடுமே!

சா+ கு + அரு + அம் என்ற  துண்டுகள் இதை நன் கு காட்டுகின்றன.  அருகில் போனால்   சாவுதான் என்று பொருள்.  சாவதற்கு அருகில் போ என்று பொருள். இதன் கெடு அறிவு மறக்கப்பட்ட பிற்காலத்தில் சாகரம் என்பது கடலுக்கு ஓர் அழகிய பெயராய் அமைந்தது.

மொழிவரலாற்றின் நெடுந்தொலைவைக் கடந்த நிலையில் "அமித சாகரர்"  மற்றும் "குணசாகரர்" என்ற பெயர்களை மக்கள் விரும்பினர்.  அப்போது கடலைப் பற்றிய அச்சங்களெல்லாம் ஓரளவு நீங்கி விட்டிருந்தன.

பிற்காலத்து மொழிப்பண்டிதனுக்கு இது  வெளிப்படையாகவில்லை. குமரிக் கண்டம் கடலில் சென்றதும் காவிரிப்பூம்பட்டினம் அமிழ்ந்ததும் ஆகிய அழிவுகளால் இத்தகைய மன நிலையினராய் இந்தியர்கள் ஆனது எமக்கொன்றும் வியப்பில்லை.  அவர்களின் மனநிலையைக் காட்டுவது அவர்களது மொழிகளே ஆம்.  தமிழ் என்ற சொல்லும் அமிழ்(தல்) என்ற சொல்லினின்று திரிந்தது என்று முனைவர் அறவாணன் (துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் )  ஒரு நூலில் கூறியுள்ளார். சமுத்திரம் என்ற சொல்லையும் இப்படியே ஆராயவேண்டியுள்ளது.  சாகரம் முதலிய சொற்களுக்கு வேறு சொல்லமைப்பைக் காட்டுவது குமரியின் அமிழ்வை ஒருவாறு மறைக்கும் முயற்சியாகவோ அறியாமையாகவோ கருதவேண்டும்.

மனிதனின் பல முக்கியக் கொள்கைகளுக்கும் சாவுதான் காரணம். அதைக் கடக்க அவன் இன்னும் பலகாலம் போராடவேண்டி யுள்ளது. இதுவே பல வரலாறுகளும் போதிக்கும் உண்மையாம்.

இப்போது காலக் கழிவினால் பொருள் மறைந்து சொல் இனிதாயிற்று. இந்நிலை மெத்த நன்று.

பின் தோன்று பிழைகள் பின் திருத்தம் பெறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.