Pages

புதன், 29 ஆகஸ்ட், 2018

நியாயம் ஞாயம் எதிர்மறை ?

ஞாயம் என்ற சொல் தமிழ்மொழியில் சிற்றூர்களிலும் வழங்குவதாகும். தமிழ் கற்பிப்போர் இது நியாயம் என்ற சொல்லின் பேச்சுத் திரிபு என்று கூறுவர். 

இப்படிச் சொல்வதே சரி என்று பட்டால் இவ்வாறே கொள்ளலாம் அதனால் ஆவதொரு நட்டமில்லை. எது எதன் திரிபாக இருந்தாலென்ன என்று விட்டுவிடலாம்.

நியாயம் என்பது இந்தோ ஐரோப்பியத்தில் இல்லை என்று சொல்கிறார்கள். எனவே அது தமிழிலிருந்து புறப்பட்ட சொல் என்று கொள்ளவேண்டியுள்ளது. சில ஆசிரியர்கள் நியாயம் என்பதன் பகுதி நில் என்பதே என்றனர். அதாவது அவர்கள் கூறுவது:  எது நிற்கும் திறமுடைத்தோ அது நியாயம். எது நில்லாதோ அது நியாயம் அன்று என்பது. உண்மை காண்பதற்குக் கூடிப் பேசுவோர் எதை ஏற்பரோ அதுவே நியாயம் அஃதல்லாதது நியாயம் அன்று என்றே விளக்குவதற்குரியதாகிறது. இவற்றில் எதுவும் நியாயத்தின் உள்ளீடு எது என்பதைத் தெரிவிக்கவில்லை.

சொற்கள் ஏற்படும்போது இதுபோலும் வரையறைகளைக் கண்டபின் ஏற்படுவதில்லை ஆதலால் நாம் இதை முன்வைக்கத் தேவையில்லை. மேலும் பேச்சு வழக்கில் உண்டான சொற்களில் புலவர் திறத்தை அறிய முற்படுவதும் ஏற்புடைத்து என்று கொள்வதற்கில்லை.

பேச்சில் இன்னும் இச்சொல் ஞாயம் என்றே வழங்குகிறது.   எழுதுவோர்தாம் நியாயம் என்று சொல்கின்றனர்.

நியாயம் என்பதன் எதிர்மறை அநியாயம். ஞாயம் என்பதற்கும் அதுவே எதிர்மறையாகக் கொள்ளப்படுகின்றது.

மூலச்சொல் ஞாயம் என்பதே என்று வைத்துக்கொண்டால் அதன் எதிர்மறை அன்ஞாயம் என்பதே சரியென்று தோன்றுகிறது.  அன் என்பதும் அல் என்பதன் திரிபாக எதிர்மறை முன்னொட்டு ஆக வல்லது.  மொழி -  அன்மொழி ( அன்மொழித்தொகை )  என்ற இலக்கணக் குறியீட்டைக் காண்க..

மேலும் ஞாயம் என்பதும் ஞயம் என்பதன் திரிபாகக் கொள்ளவேண்டும்.  இது நயம் நல்லது என்பதன் பொருளும் ஆகும்.  ஆதலின் ஞாயம் எதிர்மறை அன் ஞாயம் என்பதே பொருத்தமுடைத்தாகிறது,



 இரண்டுமே சிற்றூர்ச்சொற்கள்;  பொருளும் பொருத்தமாக உள்ளது,

அன்ஞாயம் (பேச்சு மொழிச் சொல் ) என்பதே பிற்காலத்து "அநியாயம்" என்று மறுபிறவி எடுத்துள்ளது  என்பது தெளிவு.  மூலச் சொற்கள் ஞாயம் -  அன்ஞாயம் என்பனவே .

நில் என்பதன் அடியாகத் தோன்றியதே நியாயம் என்று முடிப்பது நன்`கு சிந்திக்கப்பட்டதே என்றாலும் பேசுவோரின் கற்பனைக்கு ஏற்ப ஞாயம் மாறுவதுடைத்து என்பதை அது மேற்கொள்வதாகிறது . ஆனால் ஞாயம் என்ற சிற்றுரார் அமைத்த வடிவம் நயம் என்ற மூலத்தின் அடிப்பிறந்து நலம் உடையதே ஞாயம் என்று உள்ளீடு  காட்டிச் சொற்றிரிபுக்கும் பொருத்தம்  ஊட்டி அமைகிறது . இவ்வாறு உருவானதே  ஞாயம் என்னும் சொல். 
-------------------------------------------------------
Posting as B.I Sivamala
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.