கடவுள் பற்றிப் பேசும்போது அவனைப் பற்றர்கள் பலவாறு புகழ்வதுண்டு. அவனைத் தீன தயாபரன் என்று வருணிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இஃது என்னவென்றால் அவன் எளியோர்க்கு இரங்கி அன்பு காட்டுகிறவன் என்று பொருள். தயாநிதி என்றும் காக்கும் தெய்வம் கருணாநிதி என்றும் புகழ்வதும் பெருவரவுடைய வருணனையாகும். பொதுமக்களும் ஆண்டவனே படியளக்கிறான் என்றும் சொல்வது யாவரும் அறிந்ததே ஆகும்.
கருணை தெய்வம், கற்பகம், பொற்பதமுடையான், எனப் பற்பல வருணனைகள்.
இறைவனை இங்ஙனம் புகழ்ந்துரைப்பது பிற மதங்களிலும் பெரும்பான்மை ஆகும்.
எண்குணத்தான் என்று திருக்குறள் கூறுகிறது. எண்குணம் எனில் எட்டுக் குணங்கள் என்பது ஓர் உரை; எளிய குணங்கள் என்பது இன்னொரு சார் உரையாகும்;
ஆனால் நம் முன்னோருள் ஒரு சாரார் இறைவனுக்கு எந்தக் குணங்களும் இல்லை என்ற கொள்கை உடையோராய் இருந்தனர். நல்லதென்பதும் இல்லை; கெட்டதென்பதும் இல்லை. ஆகவே குணங்கள் அல்லது பண்புகளைக் கொண்டு அவனை அறியவும் தொழவும் முடியாது. அவனை அடைய எந்த அடைமொழிகளும் இல்லாமல் எவ்விதப் புகழுரையும் கூறாமல் தியானிக்க (ஊழ்குதல்) வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தனர்.
அவனோ சுத்த நிர்க்குணன். குணங்கள் பண்புகள் என்ற எதுவும் அவனுக்கில்லை.
நன்`கு சிந்தித்தால் இதிலும் ஓருண்மை இருப்பது புலப்படும். அன்பு இரக்கம் கருணை கோபம் ஆன எல்லாமும் மனிதர்க்குரியவை. மனிதரால் அவர்களின் நீண்ட நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. இவற்றுக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
ஒரு பெண்ணை வன்புணர்வு செய்வோனுக்கும் அவளிடத்தில் கருப்பம் (கர்ப்பம்) தங்குகிறது; அன்புடன் திருமணம் செய்துகொண்டு சேர்வோனுக்கும் அவ்வாறே கருப்பம் தங்குகிறது, இவற்றில் எதற்கும் கடவுள் தடை விதிப்பதில்லை. எது எப்படி நடந்தாலும் அவர் அப்படியேதான் இருக்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் கூறியது போல் : அவர் இருந்தபடி இருக்கிறார். அவரிடம் நாமறிந்த மாற்றம் யாதுமில்லை.
எப்படியும் இப்பிறவியிலிருந்து விடுபட நாம் இறைவனைத் தியானிக்க வேண்டும், சைவக் கொள்கைகள் பதினாறு என்பர். அதிலொன்று அவன் நிர்க்குணன் என்பது. அதாவது அவனது தன்மை பண்பின்மையாகிய தூய்மையே. அதனை முன்னிறுத்தியே தியானிக்கவேண்டும்.
இதுவே நிர்க்குணசைவம் ஆகும், அவன் குணாதீதன் ஆவான்.
முதிர்ந்த ஞானியான தாயுமான சுவாமிகள் : " சுத்த நிர்க்குணமான பர தெய்வமே " என்று இறைவனை விளிக்கின்றார். சிவஞான போதமும் இவ்வாறு கூறும்.
ஒருகாலத்தில் தமிழ் நாட்டில் நிர்க்குண சைவக் கோட்பாட்டினர் இருந்தனர்.
இப்போது - தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.