Pages

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

றம்பம் < அறம்பம் ( ரம்பம் )


ஆரம்பம் அம்பு முதலிய சொற்களை ஓர் இடுகையின் மூலம் விளக்கினேம். 1 அம்பு என்ற ஏவப்படும் குத்துகோலுக்கு எப்படிப் பெயர் அமைந்தது என்று சொன்னோம். இச்சொல்லில் அமைந்துள்ள சுட்டடிச் சொல் வளர்ச்சியை அவ்விடுகையிற் புலப்படுத்தியிருந்தேம்.
அதை இங்குக் காணலாம்:

இவை முன்பும் எம்மால் வெளியிடப்பட்டவைதாம்.

இன்று ரம்பம் என்ற சொல்லை அறிந்தின்புறுவோம்.ஒரு புறத்தோ  இருபுறத்துமோ அறுபல் உள்ள நெட்டிரும்புத் தகடு ஒரு கைப்பிடிக்குள் மாட்டப்பட்டு மரத்தை அறுக்க வழிசெய்யும் ஓர் கருவியே ரம்பம் என்று சொல்லப்படுகிறது. இது உங்களுக்குத் தெரிந்ததே.  ஒரு வரையறவு தரவேண்டுமெனற் பொருட்டு இதைச் சொன்னோம்.

ரம்பத்தின் வேலை அறுப்பதுதான்.  ஆனால் இந்தச் சொல்லை உற்று நோக்கின் இது தெரியவில்லை.

வேற்றுமொழிச் சொல்போல் தெரிகிறது. ஒன்றும் ஆய்வு செய்யாமலும் சிந்திக்காமலும் இது தமிழன்று, காரணம் ரகரத்தில் சொல் தொடங்காது  என்று சொல்லிக்கொண்டிருக்கலாம்.  இப்படிச் சொல்பவன் மூளையைச் சற்றும் பயன்படுத்தாத முட்டாளே ஆவான்.
ரம்பம் என்பதை இரம்பம் என்று எழுதி, ரகரத்தில் சொல் தொடங்காது, ஆகவே அது உருது என்று எண்ணி, சரிப்படுத்தச் சிலர் நல்லோர் முயன்றுள்ளனர்.  அவர்களுடைய முயற்சி பிழைத்தது என்பது நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
பழைய தமிழ் வாசகங்களில்  (பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் ) ஆசிரியர் சிலர் இதனை றம்பம் என்று எழுதியிருப்பர்.  ஆனால் றம்பம் என றகரம் அயற்சொற்களில் வருவதில்லை என்ற மறுப்பு எழுமென்பதால் பின்னர் இச்சொல் ரம்பம் என்றே எழுதப்பட்டது.

மரத்தை அறுப்பது ரம்பம்.  ஆகவே அறு என்பதே இதன் பகுதி.

அறு+ அம் + பு + அம்  என்ற வழியிற் புனையப்பட்டது இச்சொல். இதில் இரண்டு அம் வந்துள்ளன. ஒன்று இடைநிலையாகவும் மற்றொன்று இறுதியாகவும் அமைந்துள்ளன.2 

இதில் ஏன் இரண்டு அம் வரவேண்டும் எனலாம்.  இச்சொல்லை அமைத்தவன் ஒன்றை விகுதியாகவும் இன்னொன்றை இடைநிலையாகவும் பொருத்தியுள்ளான். இது பேச்சுவழக்குச் சொல். முதன்முதலாய்ச் சொல் அமைத்தவனைப் பாராட்ட வேண்டும்.  நடுவிலுள்ள அம்மினை நீக்கிவிடில் அறுபம் என்று வரும். அல்லது வலிமிகுத்து அறுப்பம் என்று வந்துமிருக்கலாம். புனையப் பல வழிகள் இருப்பின் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.  அதனை இன்னோசை கருதிய முடிவு என்னலாம்.

அறுப்பம் என்பதுதான் பிடிக்குமென்றால் உங்கள் குடும்பத்திலோ வட்டாரத்திலோ அதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். கூடாது என்று நாடாளுமன்றச் சட்டம் எதுவுமில்லை.

ஆனால் அமைந்த சொல்:  அறம்பம் என்பதே.

அறம்பம் > றம்பம் > ரம்பம்.

ஒப்புக்கு:   அரங்கன் > ரங்கன்.


அடிக்குறிப்பு.
1        (ஆம்  ஓம் என்பன வினைமுற்று விகுதிகள்.  வந்தேம் என்றும் எழுதலாம். வந்தோம் என்றும் எழுதலாம்.  இவை பிழைகளல்ல. வந்தோம்  என்பதே இன்று பெரிதும் வழங்குவது .) நன்னூலிலே வேறு இலக்கண நூல்களிலே படித்தறிக.

2  இறுதி, சொல்லின் மிகுதி:  மிகுதி> விகுதி;
ஒப்பு நோக்குக: மிஞ்சு > விஞ்சு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.