Pages

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

அரை> அரைசு> அரைசம் > ரசம்.

வினைச்சொற்கள் பெரும்பாலும் பிறமொழியிற் சென்று இயைவுடையவாகுவதில்லை. பிறமொழியிற் பயன்பாடு காணும்போது
வினைச்சொல் ஒரு பெயர்ச்சொல்போல் இயலும் நிலையை அடைகின்றது.  எடுத்துக்காட்டாக ஆங்கிலச் சொல்: "டிரைவ்" இது தமிழில் வந்து வழங்குங்கால் அதன் வினைத்தன்மையை உள்ளுறுத்த, "பண்ணு" அல்லது "செய்" என்ற இன்னொரு சொல் தேவைப்படுகின்றது.

எடுத்துக்காட்டு: " மானா மதுரையிலிருந்து டிரைவ் பண்ணித்தான் மதுரைக்கு வரமுடியும்" என்ற வாக்கியம் ஆராய்தற்குரியது.

மானாமதுரையிலிருந்து மதுரைக்கு டிரைவித்தான் வந்தேன்" என்றால் உடனே இவளுக்குத் தமிழ் தெரியவில்லை என்று என்னை முதுகில் தட்டி மூலையில் நிறுத்திவிடுவார்கள். பண்ணு செய் என்ற உதவும் வினைகள் தேவைப்படுவது நன்`கு புரிகிறதல்லவா

உண்மையில் இந்த டிரைவ் என்பது தமிழ் வினைச்சொல்லுடன் நெருங்கிய தொடர்பு உடையது. ஆங்கிலத்துக்குள் நடமாடும் தமிழ்மணி அது என்றுகூடச் சொல்லலாம். எப்படி என்று கேளுங்கள்.

"நாயைத் துரத்து " என்பது ஆங்கிலத்தில் "டிரைவ் எவே த டாக்"  என்று வரும்.
இதில் வரும் "துர(த்து) " என்பதே டிரை(வ்) என்பதன் மூலம். பிறைக்கோடுகளுக்குள் அடைபட்டுள்ள  வேறுபடு ஈறுகளை மெல்ல அகற்றிவிட்டுச் சொற்களை நுணுகி ஆய்ந்தால்,   துர>டிரை என்பது நன்றாக விளங்கும். பெரும்பாலும் வண்டிகளை எத்திசையிலிருந்தும் எத்திசைக்கும் செலுத்தலாம் என்றாலும் அடிப்படையில் அது முற்செலுத்துதலே ஆகும். இதைக் கூறுகையில் உருண்டையான உலகின்மீது  எது பின் எது முன் என்பது உங்கள் சொந்த ஆய்வுக்குரியதாகும்.

 ஏன் இதை விளக்குகிறேன் என்றால்  வினைச்சொல் என்பது ஒரு மொழியினோடு  குருதியிற் கலந்து நிற்பது. துரத்து அல்லது துர என்பது வினையாதலின் தமிழுக்கே உரியது.  டிரைவ் என்பதும் வினைவடிவில் ஆங்கிலத்துக்கே உரிமை பூண்டு நிற்பது. வினைச்சொற்கள் அதிகமுள்ள மொழி கருத்துரைக்க ஏற்ற திறன்படு மொழியாகும். மேலும் சொல்லின் வினைவிசையானது பொருளில் நிற்கின்றது.  அதனால்தான் துணைவினை இன்றிப் பிறதடத்துக்குத் தாவமுடிவதில்லை.

பெயர்களைக் கடன்பெறுவதும் பிறமொழியில் ஆள்வதும் எளிதிலும் எளிதே. அரிதாவது வினையே. தமிழ் வினைச்சொல் என்பது தமிழ்ப்பெண் போன்றது. தன்னினத்துடன் மானங்காத்து மகிழும். அவ்வம் மொழியினருக்கும் ஆங்காங்கு மானமுண்டு; பிறருக்கில்லை என்பது இதன் பொருளன்று.

இப்போது ரசத்துக்கு வந்திடுவோம்.  முன் காலத்தில் உரிய துணைச்சரக்குகளைக் கல்லில் அரைத்தோ அம்மிக் குழவியால் தட்டியோ பொடிகளாக்கி நீரிலிட்டுக் காய்ச்சி எடுத்துக் குடித்தனர். தட்டக் கல் இல்லாதவிடத்து ஒரு பானை நீரிட்டால் அது அரை காலாவதுவரை நன் கு கொதிக்கவைத்து சரக்குகளின் உட்பொதிவை நல்லபடியாக இறக்கி ரசத்தைச் செய்தனர். அரைக்கப்பட்டமையின்  அரை > அரைசு > அரைசம் >  அரசம் ( இது ஐகாரக் குறுக்கம் ) > ரசம் ஆயிற்று.   அரை என்பது தமிழ் வினைச்சொல். அரங்கன் என்ற சொல் தன் முதல் எழுத்து விழுந்து ரங்கன் ஆனது போலவே அரசம் என்பதும் ரசம் ஆனது.

உரசி எடுத்த சாறு சுரசம் ஆனது எப்படி?  அதை இன்னொரு நாள் காண்போம்.

பின் தோன்று பிசகுகள் பின் திருத்தப்பெறும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.