Pages

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

சொல்லாக்கமும் வட\ திசைச் சொற்களும்

நாம் தமிழ் வாத்தியாரிடம் போய்த் தமிழ்ப் படிக்க அமர்ந்தவுடன் அவர் நமக்கு அறிவு கொளுத்தும் பொருட்டும் மொழியினை அறிவிக்கும் பொருட்டும் பல சொற்களைச் சொல்லிக்கொடுப்பார்.  அவர் பெரும்பாலும் நல்லவராகவே இருப்பார்.  அவருக்கு நாம் அதிகம் தொல்லை கொடுப்பதில்லை அல்லவா.....

நான்`கு வகைச் சொற்களையும் சொல்லுவார்.  இயற்சொல்,  திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பார்.

திசைகள் நான்`கு எண்ணங்கள் உள்ளன.  இன்னும் எட்டு பதினாறு என்று சொல்லிக்கொடுக்கும் வேறு வாத்தியார்களும் உள்ளனர். திசைகள்  என்பன  வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு  என்று பொதுவாக நாலுதாம்.

நாலு என்று சொல்லக்கூடாது; நான்`கு என்றுதான் சொல்லவேண்டும் என்று சில வாத்தியார்கள் சொல்வர்.  சரியானது என்று அவர்கள் கருதிய சொல்வடிவத்தினை நம் மூளைக்குள் ஏற்றும்பொருட்டு அவர்களிற் பலர் படாத பாடு பட்டுள்ளனர். பாவம்.

நால் >  நாலு   இது உகரச் சாரியை பெற்றது. இப்படிச் சாரியை பெற்றதில் தவறேதும் இல்லை.  இந்த உகரச் சாரியை பல மொழிகளில் பல சொற்களில் வருகிறது.   ராஜு என்பதைத் தெலுங்கில் ராஜுலு, ரகு என்பதைத் தெலுங்கில் ரகுலு என்று உகரத்தில் முடித்துச் சொன்னாலும் அங்கும் உகரச் சாரியை வந்துவிடுகிறது.  பெங்களூர் என்பதைப் பெங்களூரு என்று சொன்னாலும் உகரத்தில் முடிந்து சாரியை வருகிறதே! இதைப் பிற்பாடு தான் கண்டு நாம் மகிழ்வு கொண்டோம்.

நால்  >  நாலு.
நால்+கு = நான்`கு.

இரண்டும் ஒன்றுதான்.  உகரச் சாரியை தாழ்வுமில்லை; குகரம் இங்கு உயர்வுமில்லை.  உகரம் வந்து வாலாகினாலும் குகரம் வந்து வாலாகினாலும் பொருளில் எவ்வித வேறுபாடும் ஏற்படுவதில்லை.  மூழ் என்ற அடிச்சொல்லுடன் கு இணைய, வினைச்சொல் ஆக்கம் பெறுகிறது.  ஆனால் ஆழ் என்ற சொல் கு இல்லாமலே வினைப்பொருள் தருவதால் அங்கு நாம் கு என்பதைச் சேர்ப்பதில்லை.  தேங்கு  தாங்கு என்பவற்றில் கு வந்து வினைப்பொருள் விளைக்கின்றது. தே தா என்று மட்டும் சொன்னால் பொருள் மாறிவிடும்.  தே என்பது தேனையோ தேநீரையோ குறிக்கும். தேமதுரத் தமிழோசை என்ற தொடரில் தே என்பது இனிமைப் பொருளில் வருகிறது,

தா என்ற அடிச்சொல்லுடன் கு சேர்த்து வலித்தால் :   அதாவது வல்லெழுத்துக் கொண்டு  தா+கு =தாக்கு என்றால் வேறு பொருளும்  அதே கோவையில் மெலித்தால் தாங்கு என்று இன்னொரு பொருளும் கிட்டுகிறது.  இப்படி அருமையாக அமைத்திருக்கிறார்கள் சொற்களை.  ஆனால் அதே குகரம்தான்.

சொல்லமைப்பில் மிகுந்த கெட்டிக்காரர்கள் பழங்காலத்தில் இருந்தனர் என்று இதன் மூலம் அறிந்து மகிழ்கிறோம்.

திசை என்பது ஒரு திசையிலிருந்து தமிழுக்குள் வந்த சொல்; அல்லது தமிழிலும் திசையிலும் ஒரே காலத்தில் வழங்கும் சொல்.  தமிழிலும் வழங்குகின்றது; திசையிலும் வழங்குகின்றது.  திசையிலிருந்து இங்கு வந்தது என்பது நாம் அறியாதது.  அங்கிருந்து இங்கும் வந்திருக்கலாம்; இங்கிருந்து அங்கும் போயிருக்கலாம்.  எது எங்கு உண்டாகியது, எப்படி எங்கு வந்தது என்று நாம் பார்க்கவும் கேட்கவும் செய்யாவிட்டாலும்,  சிலர் அது அங்கும் வழங்குவதால் நாம் இங்கு வழங்கக் கூடாது என்று மறுப்புத் தெரிவித்திருப்பார்கள் போலிருக்கிறது.  அதனால் தொல்காப்பியனார்: அது அங்கு இருந்தால் பின் இங்கும் இருந்தால் அது திசைச்சொல் அதைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார் என்று நாம் அறிகிறோம்.  அங்கிருப்பவர் அது இங்கிருந்த சொல் என்று ஒதுக்க,  இங்கிருப்பவர் அது அங்கிருந்த சொல் என்று ஒதுக்க இவர்கள் சண்டையில் சொல் வழக்கொழிந்து போய்விடாமல் தொல்காப்பியனார் காப்பாற்றியுள்ளார்.  இது டோக்லாமிலுள்ள சொல்  என்று சீனர்கள் சொல்ல, இல்லை, இது சீனாவில் உள்ள சொல் என்று டோக்லாமியர் சொல்ல,  சரிசரி, ஏன் இந்தச் சண்டை, நாமே அதை மேற்கொண்டு பிறச்சினையை (பிரச்னையை) முடித்துவைத்துவிடுவோம் என்று சீனா நடவடிக்கை எடுத்தால், தொல்லை ஒழிந்துவிடும் அன்றோ? ஒரே நாடு உலகத்தை ஆண்டுவிட்டால் திசைச்சொற்களும் இருக்கமாட்டா, வடசொற்களும் இருக்கமாட்டா என்பது சரியாகுமா?  எமக்கு உலக அரசியல் தெரியவில்லை.

வடசொல் என்றால் மரத்தடியில் வழங்கிய சொல் என்று திரு வி.க சொன்னார்;  தமிழ் என்றால் தமில்; தமில் என்றால் தம் இல்லத்தில் வழங்கிய சொல் என்று கமில் சுவலபெல் கூறினார்.  இல்லத்துக்கு வெளியில் இருந்தது மரம்;  மரத்திற்கு அப்பால் இருந்தது இல்லம்.  சரி, இன்னொரு நாள் சந்தித்து நாம் உரையாடுவோமே!
பின் திருத்தம் பெறும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.