Pages

செவ்வாய், 12 ஜூன், 2018

மா, மகா, இர்> இரு பெரிது கருமைப் பொருள்.

கருமை:

ஒளி இல்லாத விண்ணிலே இருப்பது கருமை மட்டுமே.  விண் எவ்வளவோ பெரியது.  மாணப் பெரிது.  ஆரளவில்லாதது. எங்கும் கருமை. எதிலும் கருமை. இதைத்தான் விண் என்றனர் தமிழர்.  விண் என்பது இயற்கை இருள். ஒன்றுமற்ற இடம்.  பெரிதாகிய விண், தமிழர்களால் பெரிதும் கொண்டாடப்பெற்றது.  இது பிற்காலத்தில்   விண்ணு > விஷ்ணு ஆனது.

விண்ணில் சூரியனும் உடுக்களும் தோன்றின. ஓளி தந்தன.  சூரியன் ஒளியும் வெம்மையும் தந்து உயிர்கள் குளிரில் வாடுவதை விலக்கிற்று.  இது செவ்விய ஒளி. செம்மை சிவப்பு. செங்கதிரோன் எனப்பட்டான் சூரியன்.  விண்ணும் சூரியனும் தோற்றமளித்த காலை நாமில்லை.  ஆகையால் இவை எப்படித் தோன்றின என்பதை நாம் அறியோம்.  நாம் பிறந்த் பின் நோக்குங்கால் இவை இருக்கின்றன.

விண்ணு  -  விஷ்ணு - அகண்ட ஆகாய வெளி. கருமை அல்லது நீலம் அதன் வண்ணம்.

செங்கதிர் -  சிவப்பு - சிவம்.  ஒளி.  ஆகாயத்தில் தோன்றும் ஒளி.

இவற்றைத் தமிழர் வணங்கினர்.

இவற்றுள் மிக்க விரிவானது விண்ணு என்னும் விஷ்ணுதான்.  இது மகா விஷ்ணு எனவும் பட்டது.   மக -  பிறத்தல்.   மக -  மகன்; மகள்;  மகார் - பிள்ளைகள்; மக்கள்.   மகம் என்ற உடு அல்லது நட்சத்திரம்.  பிறந்தவற்றுள் எல்லாவற்றையும் உள்ளடக்கி நிற்பது விண்ணு என்ற விஷ்ணுதான்.  இது இயற்கை.  மிகப் பெரிதும் பரிதுமாதலின் மகாவிஷ்ணு ,  (மகவிண்)  ஆனார்.
இது இயற்கையை உருவகப்படுத்தியது ஆகும்.

பிறந்தவற்றுள் விஷ்ணுவே விரிவாதலால் மக (பிறத்தல்)   என்ற சொற்கு பெரிது என்ற பொருள் மொழியில் ஏற்பட்டது.   மக - பிறந்தது; மக >  மா: பெரிது; மக > மகா:  பெரிது.  

இருளே எங்கும் பரந்து கிடப்பது.  தாமேயாய் எங்கும் பரந்து கிடந்த இருள்,  பரந்தாமன் ஆனான். (தாமே எங்கும் பரந்து கிடந்த இருள் -   தாமே பரந்து > பரந்தாமன். 

(தாமம் : கயிறு.  கயிற்றால் உரலில் கட்டப்பட்டவன் என்பது தொன்ம விளக்கம்.)

சிவமென்பது இருளில் ஒளி.  ஒளியும் ஓரிடத்திலிருந்து புறப்பட்டு எங்கு தன் கதிர்களைப் பரப்பி,  இருளை விலக்கிற்று.  ஒளி மறைந்தக்கால் இருள் கவியும்.  இருள் கப்பிக்கொள்ளும்.  இப்படி செவ்வொளி பரப்பி நிற்பது, இருள் கடிவது  சிவமே.  சே என்றாலும் சிவப்பு.  சேயோன்.  சிவப்பன். சிவந்தான். சிவன்.

எல்லாம் அழகுதான். அழகே முருகு.  முருகன் எனப்பட்டான்.

விண்ணு, சிவம். முருகு என்பன மனிதர்களல்லர்.  இருந்தாலும் அன் விகுதி கொடுத்துச் சொல்வது மொழிமரபு. அல்லது உருவகம்.

பரந்து நிற்போன் பரமன்.  விண்ணு என்னும் விஷ்ணு பரமன்; சிவம் பரமன்.

இருளே பெரிதாதலின்  இரு என்ற அடிச்சொல்லுக்கு: பெரிது என்ற பொருள் மொழியில் ஏற்பட்டது.   இர்> இருள். உள் என்பது விகுதி. கடவுள், இயவுள் என்ற சொற்களிலும் உள் என்பது விகுதியே. அடிச்சொல் வினையாயினும் அன்றாயினும் வரும்.

மக என்ற அடிச்சொல் மா என்றும் திரிந்தது.  தலையெழுத்தை அடுத்து நிற்கும் ககரத்தால் தலையெழுத்து நீளும்.  பகு > பா என்று திரிந்தாற்போலும்.  பகுதி> பாதி. மிகுதி > மீதி.  இதுபோலவே மக என்பது மா ஆனது. பிறந்த விண்ணு பெரிதாதலின்,  மக என்பது மகா என்றும் திரிந்தது.  பெரிது என்பதே பொருள். பொருள் மாற்றம் ஏதுமில்லை. ஒலித்திரிபுகள்தாம்.

இரு பெரிது.  இருள் பெரிது.
மக பெரிது; மா பெரிது.  மகா பெரிது.

விண் கருமையாதலின்   மா என்பது  பெரிதென்றும் பின்னும் கருமை என்றும் இருபொருளும் தரும்  என்பதுணர்க.

மா என்பது கருமை.  அழுக்கும் கருப்பு.  ஆகையால் மா என்பதிலிருந்து ஒரு சு விகுதி சேர்ந்த சொல் உருவாகி மாசு என்று அழுக்கைக் குறித்தது.   அழுக்கு கருப்பு என்றால் கருப்பெல்லாம் அழுக்கன்று.  அழுக்கு வகைகளில் கருப்பு அழுக்கு மாசு எனப்பட்டது.

மா> மை:  கருப்பு நிறமான ஒரு பொருள்.

மை > மை+ இல்:  மயில். ( ஐகாரக்குறுக்கம்).  இல் = இடப்பெயர்.  கருப்பிடங்களை உடைய பறவை மயில்.

மை> மையில் > மயிலை.     (  மயிலைக் காளை).  மயிலைநாதன்:  மயிலை நிறத்தோனாகிய பரம்பொருள். 

இவற்றிலிருந்து விண் மா மகா இர் என்பவை உணர்க. இதில் சொல்லப்பட்டாதவை இன்னும் உள.  அவை விடப்பட்டன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.