மாடி என்ற சொல் வழக்கில் உள்ளதாகும். மாடி என்பது வீட்டின் இரண்டாம் அடுக்குக்கும் அதற்குமேலும் உள்ள அடுக்குகளையும் குறிப்பதாகும்.
வீடுகட்டும் பாட்டாளி
வீதியிலே தூங்குகிறான்
கூடியந்த மாடியிலே
கும்மாளம் போடுகின்றார்
என்றொரு திரைக்கவிஞர் எழுதினார். திரைக்கவி யானாலும் நல்ல எதுகை மோனைகளுடன் எழுதி மகிழ்த்துவதில் நம் தமிழ்க்கவிகள் பண்பட்டவர்கள் ஆவர். தாம் வேலைக்கமர்த்தும் தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதிகள் செய்துதருவது கட்டுமானக் குத்தகையாளர்களின் சட்டப்படியான கடமை என்று சிங்கையில் சட்டமிருப்பதாகத் தெரிகிறது. வீதியிலே தூங்குவோரை இங்குக் காண்பதரிது.
அடுக்குமாடி என்பது பல அடிக்குகள் உள்ள கட்டடங்களுக்கு வழங்கும் சொல்.
புடவையில் விளிம்பு மடிக்கப்படுவதால் அதையும் மாடி என்று சொல்லும் வழக்கு உள்ளது. சிற்றூரார் தெய்வத்துக்கும் மாடன் என்ற பெயருண்டாதலால் அதன் பெண்பால் மாடி எனவரும். மாடத்தி எனினுமாம். பலரைப் பலிகொண்ட காவல்தெய்வம் மாடன். இவன்பெயர் மடி என்ற சொல்லடியாக அமைகிறது. மடி+அன் = மாடன் என்பது முதனிலை நீண்டு விகுதிபெற்ற ஆண்பாற்பெயர். பின்னர் இவனுக்கு மாடு ஒரு வாகனமாய் ஆக்கப்பட்டதென்று தெரிகிறது. பிணம் தின்னும் மாடன் ஆதலின் இவன் சுடலைமாடன் என்பர்.
"மாடனை வேடனைக் காடனைப் போற்றி
மயங்கும் அறிவிலிகாள் ....."
என் கின்றார் பாரதி. இவன் மனிதக்குருதி கேட்பானாம்.
மாடி என்பது இடர், இக்கட்டு, சினம் என்றும் பொருள்படும்.
மாடி - மடத்தின் தலைமையையும் குறிக்கும்.
மாடி கூரையில்லாத கட்டிடத்தில் மேலடுக்கையும் குறிக்கும்.
மடி என்பது வினையடிச்சொல் ஆகும். இது முதனிலை நீண்டு மாடி ஆகும்.
(தொழிற்பெயர்.)
மாடி+அம் = மாடம். ( எழுநிலை மாடம், வழக்கு நோக்குக).
கட்டிடத்தின் ஒரு நிலை அல்லது அடுக்கு அதன் தரை ஈறு மேலே எழுந்து, மடிந்து திரும்பி எதிர்ச்சுவருடன் இணைந்து நிற்பது போல் இருப்பதால் அது மாடி எனப்பட்டது. மடி - மாடி. ஒவ்வொரு நிலையும் ஒரு மடிப்பாகிறது. பன்னிலை மாடமென்பது பன்னிலை மடி ஆகும். புடவை மடிப்பும் மாடியே.
மடி என்பது திரும்புதல். இடர் என்பது மாறிமாறிவருவது. ஒருமுறை வந்து பின் மாறி மறுமுறை வருகையில் அது மாடி ஆகிறது, இப்படி அது இடர், இடுக்கண் என்ற பொருளை அடைகிறது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.