Pages

ஞாயிறு, 10 ஜூன், 2018

சேனை என்னும் சொல்.

சேனை என்ற சொல்லுக்கு அடிச்சொல்  சேர்தல்,  கூடுதல் என்பதே என்பதை ஆய்ந்தறிவோம்.

சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம் என்பது முன்னர்ப்  பொருளாகும்,  அல்லது பிற பொருளிற் பல எண்ணிக்கை என்றும் கொள்ளலாம்,

"இந்த ஊருக்குக் குடிபெயர்ந்து வந்து சேனை நாட்கள் ஆகிவிட்டன."  இந்த வாக்கியத்தை வாசித்தால் சேனை என்பது பல என்று பொருள்படுதல் தெரியும்.  இது பேச்சு வழக்கில் உள்ள சொல். இன்று மறக்கப்பட்டு வருதல் அறியலாம்.

சந்தையையும் சிலர் சேனை என்பதுண்டு என்று அறிகிறோம்.  "சேனைக்குப் போய் வந்தாள்"  என்பது காண்க.

 சேனை என்பது உறவினர் நட்பினரையும் குறிக்கும்.  "  அந்தத் திருமணத்துக்கு அவர் தம் சேனையுடன் போயிருக்கிறார்"  என்பது இப்பொருளது ஆகும்.

இப்பொருளில் இது கம்பராமாயணத்திலும் வந்துள்ளது.   ( கம்ப. தைலமா.8)

பிங்கலந்தையில் இது தெரு என்று பொருள் தெரிக்கப்படுகின்றது.

சேனை என்பது படையையும் ஆயுதத்தையும் குறிக்கும்.

இருபது கவளி வெற்றிலைக்கு ஒரு சேனை என்பதுமுண்டாம்.

சேனை என்பது நண்பர்கள் என்றும் பொருள்படுதலால்  "கூடாச்சேனை"  என்பது கூடாநட்பு என்றும் பொருள்படும்.

சேனை என்ற சொல் தமிழிலக்கியத்தில் இடம்பெற்ற சொல்லே ஆகும். இதன் அடிச்சொல் சேர்தல் என்பதே.  இது பலர் என்றும் சேர்க்கப்பட்டவர்கள் என்றும் நன்  கு பொருள்தருவது ஆகும்.

சேர் >  சே+ன் + ஐ என்று அமைந்துள்ளது.  ரகர ஒற்று வீழ்ந்து சே ஆனது. பின்  -0னகர ஒற்று இடைநிலையாய் நின்று ஐகாரம் என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்றது.

இதைப் பானை என்ற சொல்லுடன் ஒப்பு நோக்குக.  பா என்பது விரிவு குறிக்கும் சொல். வாய் விரிந்த வனை ஏனத்துக்குப் பானை என்று சொல்கிறோம்.  விரித்துப்போடும் ஓலைப் பின்னலுக்குப் பாய் என் கிறோம்,
படுக்கைவாட்டத்தில் உள்ளதைப் பட்டை என் கிறோம். ப> படு > பட்டை.
பலகை என்பது விரிந்து சப்பட்டையாக உள்ள மரத்தின் அறுத்த பகுதி.
அதாவது ப > பா என்ற வரிசையில் இப்படி பரந்து விரிவுடைய பல பொருள்களின் பெயர்கள் வருகின்றன.  பார்த்தல் (see ) என்ற வினை,  பொதுவாக கண்ணால் புலப்படுத்திக்கொள்வது.  நோக்குதல்   (look  ) என்பது குறுக்கமாக ஒன்றைக் கட்புலப்படுத்திக்கொள்வது ஆகும்.   பா> பார் என்பதையும் பார் என்று பொருள்படும் விரிந்த உலகையும் சிந்திக்கவும்.

பா> பானை;   சே> சேனை.  இரண்டிலும் இடைநிலை 0னகர ஒற்று ஆகும்.

சேர் என்பது ரகர ஒற்று இழத்தலை சே  >  சேமி என்பதில் அறிக.1


எனவே பலர் என்றும்  கூடுதலென்றும் சேர்க்கப்படுதல் என்றும் பொருள்படும் சேனை  என்பதன் சொற்பிறப்பு அறிந்து மகிழ்வீராக.

அடிக்குறிப்பு:

1  சேகரன் :  அடிச்சொல்:  சேர் > சே.  சேர் + கரன்  =  சேகரன்.  பொருள்:  நிலவைச் சேர்த்துவைத்திருப்பவன்.  சே என்பது சிவப்பு என்றும் பொருளாம்.  சிவந்தான் ,  சிவன்.  இருபிறப்பிச் சொல்.    சேர்  + கு + அரன் =  சேகரன் எனினுமாம். ரகர ஒற்று  வீழ்ச்சியும் கு இடைநிலையும் காண்க .

2  சேர் + நர்  = சேர்நர் >    சேர்நை>  சேனை .  This accounts for the appearance of the intermediate ந் ( ன் ) resulting in  னை .    








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.