Pages

திங்கள், 11 ஜூன், 2018

இலாவண்யம் இலாபம் லேகியம் லாகிரி சொற்கள்

சொற்களைப் பற்றிய ஆராய்ச்சியைப் பல ஆண்டுகளாக ஈண்டு மேற்கொண்டு வருகின்றோம்.  நாம் ஆய்ந்து வெளிப்படுத்திய சொற்களும் பலவாகும்.

எடுத்துக்காட்டாக ஊர்ஜிதம் என்ற சொல்லை விளக்கினோம்.  உறுதிதம் என்பதினின்று  உறுஜிதம் > ஊர்ஜிதம் என்பது படைக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டினோம்.     இரு > இருத்தல் > (  இருத்தித்தல்) என்ற புனைவிலிருந்து சிருத்தித்தல்> சிருஷ்டித்தல் என்று புனைவுசெய்து,  இருக்கும்படி செய்தல், உண்டாக்குதல் என்ற பொருளில் சொல் உலவ விடப்பட்டது என்பதை விளக்கினோம்.  சொற்களைச் சிந்தனைக்குட்படுத்தி அவை எங்கனம் புனையப்பட்டன என்பதை அறிந்து விளக்குதல் எளிதானதே ஆகும்.  ஒன்றை உருவாக்கி அது இருக்கும்படி செய்தலே சிருஷ்டித்தல். செய்த  எதவும் இல்லாமலாய்விடுமானால்  அதனைச் சிருட்டித்தல் என்று சொல்லமாட்டோம்.

இன்றும் பல சொற்கள் புதிதாகப் படைக்கப்பட்டு வழக்குக்கு வந்துள்ளன. எடுத்துக்காட்டு: " இணையம்"  என்பது.  இணையம் ஏற்பட்டவுடன் தமிழர் இச்சொல்லைப் படைத்துக்கொண்டது மகிழற்குரியதே ஆகும்.  ஆனால் நம் ஆராய்ச்சியில் இன்று நாம் படைத்துக்கொண்ட சொற்களைவிட  ஏறத்தாழ் ஆயிரமுதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்த இந்தியர்கள் படைத்தளித்த சொற்கள் மிகப்பலவாகும்.  தாமே திரிந்த வடிவங்களிலிருந்தும் தாம் திரித்த வடிவங்களிலிருந்தும் அவர்கள் நம்முன் வைத்த சொற்கள் கண்டு வியக்கத்தக்க எண்ணிக்கையில் உள்ளன என்பதை நாம் மறுக்க ஒண்ணாது என்பதறிக.  அவர்கள் பல புதுமொழிகளைக் கூடப் படைத்து அளித்துள்ளனர். பல எழுத்துருக்களையும் படைத்துள்ளனர்.  அவர்கள் செய்துமுடித்த பணி மிகப் பெரிது ஆகும்.

பல சாதிகளைப் படைத்துக்கொண்டு பிரிந்து நின்றது போலவே இந்திய மக்கள் பல மொழிகளை உருவாக்கிக்கொண்டனர் என்று கூறின் அது ஓரளவு உண்மையே ஆகும்.  மலைகள், மடுவுகள், காடுகள், தொலைவு என்ற பல காரணங்களால் ஓரிடத்தில் இருப்பவர் பேச்சுக்கும் இன்னோரிடத்தில் இருப்பவர் பேச்சுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றி மிகுவது மொழிகள் மாத்திரத்தில் இயற்கையாகும்.  ஆனால் அவற்றை  அடிப்படையாக்கிப் புதுமொழிகள் பலவற்றைப் படைத்துக்கொண்டதில் நன்மையும் இருக்கலாம் தீமையும் இருக்கலாம்.

இனி வெறும் தத்துவங்களை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், இரண்டு மூன்று சொற்கள் அமைந்தவிதம் காண்போம்.

இலாவண்யா என்றது அழகு என்று பொருள்.   இலாவண்யா என்பது ஊரிலே எங்கும் காணற்கியலாத  அழகு.  இலா:   ஊருக்குள் இல்லாத;  அணி -   அழகு.
யா என்பது  ஆயா என்பதன் முதற்குறை.  இந்தப் புனைசொல்லை ஒரு பெண்ணுக்குப் பெயராய் இட்டால்,  அதற்குப் பொருள் ஊருக்குள் இல்லாத அல்லது காணமுடியாத பேரழகி என்று பொருள் கூறவேண்டும்.  எப்படிச் சொல்லை சுருக்கி எழுத்துக்களை வெட்டி வீசினாலும்  இலா (  இல்லாத ); அணி = அழகு என்பவற்றை மறைத்தல் இயலாது.

இதேபாணியில் அமைந்த இன்னொரு சொல் இலாபம் என்பது.  இலா -  முன் இல்லாத அல்லது கிட்டாத;  பம் -   பயன்.  பயன் என்ற சொல் பயம் என்றும் வரும்.   அன்  ஈற்றுச்சொற்கள் அம் ஈற்றிலும் வரும்.  அறம் அறன்;  பயம் - பயன்.  இவை பல வுள.    முன் கிடைக்காத பயன் இப்போது கிட்டினால் அல்லது முன் இல்லாத பயன் இப்போது வந்தால் அதுவன்றோ லாபம்.  இங்கு பயம் என்பதில் யகரத்தை வீசிவிட்டு,  இலா+பம் =  இலாபம் என்று புனைந்தனர்.

கட்டியாக இல்லாமல் இளகிய நிலையில் குழைக்கப்படும் மருந்து லேகியம்.
இளகு > இளகியம் > லேகியம் ஆனது,  லேகியம் என்பது இரசியாவிலிருந்து வந்த சொல் என்று எண்ணுவோன் ஆய்வுமூளை சற்று குறைந்தவன்.

மதுவை அருந்தியபின் மனிதன் சற்று இளகிய, திடம் கரைந்துவிட்ட நிலையை அடைவதுண்டு.  இதைத் தரும் மது   உண்மையில் இளகி இருக்கச் செய்வது ஆகும்.  இளகு+ இரி=  இளகிரி >  இளாகிரி > லாகிரி ஆனது.

இரு என்பது இரி என்று வருவது மலையாள வழக்கு.
லகர ளகர வேறுபாடு சில சொற்களில் கடைப்பிடிக்கப்படா.  இலக்கண நூல் காண்க.  எடுத்துக்காட்டு:  செதில்  -   செதிள்.
இளகு என்பதே இலகு என்றும் லகு என்றும் திரியும்.
இவை மொழிகளில் காணப்படும் திரிபுகளும் மாற்றங்களும்தாம்.

அறிந்து ஆனந்தம் காண்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.