Pages

செவ்வாய், 15 மே, 2018

அயம் இரும்பு உலோகம் இஸ்திரி முதலியவை/

எந்த மொழியைப் பேசினாலும் பேசும் போது சொற்களைச் சரியாகப் பலுக்க (     )  வேண்டுமென்று அவ்வொலிகளைத் தெரிந்தவர் கூறுவதுண்டு. சற்று  குறைகண்டாலும் பலர் சொல்லத் தவறுவதில்லை.  இவ்விடயத்தில் எல்லோரும் வாய்ப்பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்களே.  1

சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முந்திய காலங்களிலும் பலரும் நிகண்டுகள் அல்லது அகரவரிசைகளைப் பார்த்தே,  ஒரு சொல் தமிழ்ச்சொல்லா அல்லது பிற மொழிச் சொல்லா என்று கண்டுபிடித்தனர்.   மாங்காய்  என்ற சொல் மலாய் மொழியிலும் உண்டு.  அது மலாய் அகராதியிலும் இருந்தபடியால் அதைச் சிலர் மலாய் என்றனர்.    ஆனால்  மா என்ற மரம் குறித்த சொல் அங்கு இல்லை.  மா+காய் = மாங்காய் என்பதில் காய் என்பதும் அங்கு இல்லை.  மேலும் இது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டது,  ஆகவே அகராதிகளைப் பார்த்துச் சிலர் தவறான முடிவுகளை எட்டினர்.

இரும்பை முதல்முதல் தமிழர்கள் அறிந்திருக்கவில்லை. பின் அதையவர்கள் செய்யவும் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டனர்.  அதை அறியுமுன்பே பொன்னை அவர்கள் அறிந்திருந்தனர். பொன் நகைகளை உருவாக்கும் பொற்கொல்லர்கள் அல்லது தட்டார்களும் அவர்களிடையே தோன்றித் தழைத்திருந்தனர். பொன்னோடு ஒப்பிட  இரும்பு பின் வரவு என்பது சொல்லால் அறிந்துகொள்ளலாம்.    இரு+பொன் =  இரும்பொன் என்று இரும்பிற்குப் பெயரிட்டனர்.  இரு என்பது பெரிய என்று பொருள்படும் சொல்லும் ஆகும்.   இருங்கடல் என்றால் பெருங்கடல்.  " நளி யிரு முந்நீர்"  எனின் பெருங்கடலின் நடுப்பகுதி என்றும் பொருள்கொள்ளலாம்.  நள் -  நடு.
நளி =  நடுப்பகுதி. நள் - நடுவை, இ - உடையது, நளியிரு: பெரிய நடுப்பகுதியை யுடையது.    நிற்க,  இந்த இரும்பொன் என்ற  பெரிய பயன்பாடு உடைய பொன்போன்ற உலோகம் ( மண்ணினின்று கிடைப்பது),  பின் பெயர்த்திரிபினை அடைந்தது,  இரும்பொன் >  இரும்பு ஆகியது. இதை எமக்கு முன்னிருந்த தமிழறிஞர் கூறியுள்ளமையின் வேறு கூறோம்.

இரும்பை நம்மனோர் அடுத்து வாழ்ந்தோரிடமிருந்து அறிந்துகொண்டனர் என்பதற்கு இன்னொரு சொல்லையும் சுட்டிக்காட்டுவேம்.   இச்சொல் அயம் என்பது.  சித்தவைத்திய நூல்களில் அயச் செந்தூரம் என்றோரு மருந்து கூறப்படுகிறது,   அயமெனப்படுவது இரும்பு,  அயல் என்ற சொல்லுடன் இது தொடர்புடையது,  அயல் என்பதில் அ என்பது இங்கில்லாமல் தொலைவில் இருப்பது என்று பொருள்படுவது.  அல் என்பது விகுதி.  அவல் என்பதில் வரும் அல் விகுதி போன்றதே,  அவி+அல் =  அவல். இகரம் கெட்ட புணர்ச்சி.   இங்கு அல் விகுதி வருவது போலவே அயல் என்பதும்,  இனி அயம் என்பது அ+அம் = அயம் என்றாகும்,   அங்கிருந்து  அல்லது தொலைவிலிருந்து வந்தது என்பது பொருள்.இரும்பைப் பற்றிப் பெரிதும் அறியாதிருந்த காரணத்தால் அப்பொருளில் உள்ளமைப்புகளை அல்லது உள்ளீடுகளைக் கண்டு அவர்கள் பெயர்வைக்கவில்லை.  அது அயற்பொருள் என்பதுமட்டுமே அவர்கள் கண்டுகொண்டது ஆகும்,  பொன் அவர்கள் அறிந்திருந்தனர்,  ஆனால் அயம் அல்லது இரும்பு அவர்கள் புதிதாகக் கண்டுகொண்டது ஆகும்.

அயம் 2  என்பது தவிர இன்னொரு பெயரும் தமிழில் உண்டானது,  அதுவும் இந்த அகரச் சுட்டடியாகவே தோன்றியது.   அ+இல் என்ற இரண்டும் இணைக்கப்பட்டு அயில் என்ற சொல் அமைந்தது.  இங்கு இல் என்பது இருப்பது என்று பொருள்தருவது.  குடத்தில், மடத்தில் என்று  இல் என்று வேற்றுமை உருபாய் வந்து இடம் குறிக்கவில்லையா?  அதுவேபோல் அந்த இடத்திலிருந்து அதாவது தொலைவிலிருந்து வந்தது வந்து நாமறிந்துகொண்டது என்ற பொருளிலே இன்னொரு பெயரும் அமைந்துவிட்டது,  மண்ணினுள் தொலைவில் இருந்து எடுக்கப்படுவது எனினும் அமையுமேனும் அது அயல்வரவு குறிக்கவில்லை.

தகத்தக என்று மின்னியது தக> தங்க > தங்கம் ஆனது.    பொலிவு மிக்கது பொன் ஆனது.  பொல் என்பது அழகு.  பொல்லா என்பது எதிர்மறையில் வந்து அழகில்லாதது என்பதைத் தெரிவிக்கிறது.  பொல் என்ற சொல்லின் இறுதி லகர ஒற்று  0னகர ஒற்றாய்த் திரியத்தக்கது.    பொல்> பொன் ஆகும்.  பொல்> பொலிவு என்பது அழகு.

இந்த உலோகங்கள் எல்லாம் மண்ணிலிருந்து எடுத்து உருக்கப்பட்டபின் அவை மீண்டும் மண்ணாகும் வரை சுற்றிவந்து பயன் அளிக்கக்கூடியவை ஆகும்.  ஆகவே இரும்புவேலை செய்கிறவன் அவற்றை வேண்டியவாறு மீண்டும் உருக்கி வேறோர் உருவில் அமைத்துக்கொள்வான்; பிறருக்கு அளிப்பான்.  உல் என்பது உலவு என்பதன் அடிச்சொல். உல் =  சுற்றிவருதலை உடைய; ஓகம் =  ஓங்கும் பொருள்,  ஓங்கு என்பது இடைக்குறைந்து ஓகு என்றாகும்.  ஓகு+ அம் =  ஓகம்.   அதை ஓங்கு+ அம் = ஓங்கம், இடையில் உள்ள ஒற்றை எடுத்துவிட்டால் ஓகம் ஆகிவிடும் என்றும் காட்டலாம்.  முதலில் தமிழர் அறிந்துகொண்டது பொன் ஆகையால் அது ஒரு முறை உருவாகச் செய்யப்பட்ட பின், உருக்கி இன்னோர் உருவாகச் செய்துகொள்ள, அது மதிப்பிலும் பயன்பாட்டிலும் ஓங்கி நின்றது.  இக்காரணத்தால் பொன் உலோகம் ஆனது.  பின்வந்த இரும்பு செம்பு முதலானவையும் உருக்கி ஓங்குமாறு உலவ விடப்பட்டவையே ஆகும்.  ஆக உலோகமென்பது தமிழில் எழுந்த சொல் என்பது தெளிவு,

உருக்குதல் என்ற சொல்லும் அவற்றை நீர் போலும் காய்ச்சி,   வேண்டிய உருவில் அமைத்தல் என்பதையே தெரிவிக்கிறது.  உரு> உருக்கு> உருக்குதல்.

இஸ்திரி என்ற இரும்புத் திண்பட்டை அடிப்பெட்டியானது,  துணியின்மேல் வைத்து இழுக்கப்படுவது ஆகும், இழுத்து இழுத்து இருத்தித்  துணியைச்  சுருக்கம் இல்லாமல் நிமிர்த்துவதால்  இழுத்திரி எனப்பட்டது.  இரு > இரி. இரு என்பது கேரளத்தில் இரி என்றே வழங்கும்.  இழுத்திரி பின் இஸ்திரியாகி அயலாகக் கருதப்பட்டது.  இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு மானின் கழுத்தில் ஊறுவதாகக் கருதப்பட்ட வாசனை கழுத்தூறி என்று அழைக்கப்பட்டுப் பின்பு கஸ்தூரி ஆகிவிட்டதுபோன்ற திரிபே ஆகும். இவற்றை அவ்வளவு எளிதில் மறைத்துவிட இயல்வதில்லை.

பிழைகள் காணப்படின் திருத்தம் பெறும்.


அடிக்குறிப்பு:

1.  வாய் > வாய்த்தி > வாத்தியார் (  பணிவுப் பன்மை)  -  யகர ஒற்று ஒழிந்த சொல்.
உப அத்தியாயி > உபாத்தியாயி என்ற சங்கதச் சொல் வேறு. பழங்காலத்தில் பாடநூல்கள் இல்லை அல்லது குறைவு.

2   ஐ என்பது வியப்பும் ஆகும் .  வியப்புக்குரிய கடினப்பொருள்,  பல்வேறு உருக்களில் செய்துகொள்ள இயல்வது என்றும் கூறுதலுண்டு.  ஐ > அய்> அயம்
என இருபிறப்பிச் சொல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.