Pages

திங்கள், 30 ஏப்ரல், 2018

குடிப்பெயர்கள்

பல நாடுகளில் மக்களுக்குக் குலமும் கோத்திரமும் உள்ளன. இல்லையென்றால்தான் அது ஒரு வியப்புக்குரியதாகத் தெரியும்.  காரணத்தைக் கேளுங்கள். மிகமிகப் பழங்காலத்தில் மனிதர்கள் காட்டிலும் மலைகளிலும் திரிந்து துன்புற்ற அந்தத் துன்ப நாட்களில் இரவு நேரத்தில் ஒரு குடும்பத்தினர் ஒரு மரத்திலோ ஒரு குகையிலோ தங்கினர்.  மரத்திலேற முடியாத நொண்டிகளாய் இருந்தால் மரத்தடியில் கிடப்பர். கரடி புலி முதலியவை வரும், பாம்பு பூரான் முதலியவை தீண்டுமென்று அஞ்சிக்கொண்டேதான் வாழ்ந்தனர்.  ஒரு குடும்பத்துக்கு எப்போதும் ஒரு மரம் தங்குமிடமாகிவிட்டால் தெரியாதவர்களை அந்த மரத்தில் வந்து தங்க ஒப்பார். இந்த நிலையிலிருந்துதான் குலம் கோத்திரம் முதலிய வளர்ந்தன. ஒரு மரத்துக்குரியவர்கள் எதாவது ஒரு பெயரை வைத்துக்கொண்டு  உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.  அவர்களுக்குத் தெரிந்தவர்கள்  பக்கத்து மரங்களில் தங்கினர்.  அவர்களின் குலத்திற்கு  ஏதாவது ஒரு பெயர் இருந்திருக்கும்.  அந்தக் குலத்தின் தலைவனுக்கு முடி மிகுந்த நீட்டமாய் இருந்திருந்தால்  "  நெட்டுமுடி" என்றோ வேறு எப்படியோ ஒரு பெயர் இருக்கும். அவனைச் சேர்ந்த எல்லோருக்கும் நெட்டுமுடி என்றே குலப்பெயர் இருந்திருக்கும்.  அவர்களில் சிலருக்கு கட்டைமுடி இருந்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள்.

குகைகளில் வாழ்ந்தோருள்ளும் இப்படியே குலங்கள் தோன்றின.  குலம் என்றால் சேர்ந்து வாழ்தல்.  குல்> குலை;  குல் > குலம்.  குலை: வாழைகுலை; திராட்சைக் குலை. எல்லோரும் பச்சை இறைச்சி, பழங்கள் தின்று வாழ்ந்ததால் உயர்வு தாழ்வு ஒன்றும் இல்லை.  எல்லோரும் இரைதேடி உண்ணும் குருவிகளே.

அதிபர் கென்னடி என்பவர் அமரிக்காவின் புகழ்ப்பெற்ற அதிபர்.  கென்னடி என்பது அவர் குடும்பப் பெயர். இந்தப் பெயரின் பொருளைச் சிலர் தேடிக் கண்டுபிடித்தனர்.  "கென்னடி " என்றால் அசிங்கத் தலை என்று பொருள்படுவதைக் கண்டு வியந்தனர்.  ஜான் கென்னடி, ரோபர்ட் கென்னடி , எட்வர்ட் கென்னடி என்று இவர்களையெல்லாம் நினைவு கூரும்போது, அசிங்கத்தலை என்று யாரும் எண்ணுவதில்லை. நாளடைவில் சொல்லின் பொருள் மறைந்து அது வெறும் குறியீடாகவே பயன்பட்டது. மேலும் இப்போது பேசும் ஆங்கிலத்தில் கென்னடி என்ற சொல்லுக்கு அத்தகைய பொருள் ஏதும் இல்லை. அதனாலும் அது வழங்க வசதியாகிவிட்டது.  கேமரூன் என்ற பெயருக்குக் கோணல்மூக்கு என்று பொருள். இதைக் குடிப்பெயராக உள்ள இந்நாள் பெரியவருக்கு மூக்கு அழகாக உள்ளது.  ஆகவே அது வெறும் பெயர்தான்.  கோனலி என்ற குடிப்பெயர்க்கு வலியவன் என்று பொருளாம். இப்போது யாருக்கும் அந்தப் பெயரின் பொருள் தெரியாது.  ஏதேனும் ஒரு வரலாற்று நூலைப் பார்த்து என்ன பொருள் என்று யாரும் தேடுவதில்லை.

யாம் சந்தித்த ஒரு தமிழரின் குடும்பப் பெயர் " பம்பையர்" என்று பெயராம். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப் "பம்பு" வைத்திருந்த காரணமா?   பாம்பு வைத்திருந்ததால் பாம்பையர் என்று இருந்து பின் பம்பையர் என்று குறுகிவிட்டதா,  ஐயப்பன் கோவில் அருகில் உள்ள பம்பை நதிப் பக்கத்திலிருந்தவர்களா....... என்னவென்று அவர்களுக்கே புரியவில்லை.
ஒன்றும் புரியாத பெயரானால்தான், அதில் ஏதோ புரியாதது இருக்கிறதென்று எல்லோரும் போற்றும்படி நேர்கிறது. இல்லாவிட்டால் கோணல்மூக்கு என்ற பொருள்கூறும் பெயர் குதூகலம் தர வாய்ப்பில்லை.

காந்தி என்ற பெயர் அழகான ஒலி நயம் உடைய பெயரென்றாலும், அதன் பொருள் வாசனை விற்பவர்கள் என்ற பொருளுடையதாம். ஒலியில் உள்ள உயர்வு பொருளில் இருப்பதில்லை.   நேரு என்ற பெயர் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்தவர்கள் என்று  பொருள்தருமாம்.  ஆகவே   நேரு என்பதற்கும் நீர் என்பதற்கும் உள்ள நெருக்கம் புரிகிறது.. ஆறு என்பது நீரோடும்வழியைக் குறிக்கிறது. பொருளால்  அதுவே நேரு என்பது.    நீர்> நீரு.> நேரு.  காசுமீரில் இவர்கள் ஆற்றுப்பக்கத்து வாணர்களாய் இருந்தனராம்.  இங்கு வருமுன் அவர்களின் குடும்பப் பெயர் வேறு என்று தெரிகிறது.  சிலர் கவுல் என்று நினைக்கின்றனர். மிர்சா என்ற முஸ்லீம் குடிப்பெயர்  "அமீர் ஷா" என்பதன் திரிபாம்.  இது கடற்படைத் தலைவர் என்று பொருள்படும் என்பர்.  நல்ல பதவியைக் காட்டும் பெயர்தான். அட்மிரல் என்ற ஆங்கிலச் சொல் அமீர் என்பதிலிருந்து பெறப்பட்ட தாகும்.  காலிங்கராயர் என்ற குடிப்பெயரும் கலிங்க அரசாட்சியில் பங்கு பற்றியோர் என்ற  பொருளைத் தருகிறது.

வால் என்ற சொல் தூய்மை என்ற பொருளுடையது.  மிகி - மிகுந்தோர்.  எனவே வால்மிகி என்பது பொருளின்படி ஓர் முனிவர் என்று பொருள்தரவேண்டும்.  மேலும் முதற் பெருங்கவி அவராதலின்  நல்ல பொருளையே அது தமிழில் தருகிறது. அவர் இராமாயணம் பாடியதற்கு ஏற்ற பெயராகிறது.  அது பின் சாதிப்பெயராய் ஆயிற்றா அல்லது முன்பே அப்பெயரில் அம்மக்கள் இருந்தனரா என்று தெரியாது.  பாணினி பாணன் ஆதலின் அவனும் எடுத்த எடுப்பில் கவிபாடும் ஆற்றல் உள்ளவன் என்றே தெரிகிறது.  இலக்கணம் இயற்றுமளவிற்குப் பேரறிவு படைத்தவன் அக்கவி.

பரஞ்சோதி என்பது இயற்பெயராய்த் தெரிகிறது.   சுவ என்பதி சிவ, சிவப்பு, செகப்பு, செம்மை, என்றும் பொருள்தரும்.  சிவப்பு என்பதைச் சுவப்பு என்று கூறுதல் உண்டு, சொக்கன் என்பது சிவனின் பெயர். சோபித்தல் என்பது ஒளிதருதல். தொடர்புகொண்ட சுவதி என்ற சொல்லே பின்னர் சோதி* என்றானது.  சோனல், சோனாலி என்ற பெயர்களையும் காண்க. பரஞ்சோதி என்றால் இறையொளி. பரஞ்சோதி என்பது இனிய பெயர். ஆனால் குடிப்பெயர் அன்று என்று தெரிகிறது.

சில குடிப்பெயர்கள் நற்பொருளுடையவை.  சில அல்லவெனினும் அவற்றின் பொருள் நோக்குங்கால் அறிய இயலாமையின் அவையும் தொடர்கின்றன.

திருத்தம் பின்.
காணப்பெற்ற பிழைகள் சில, திருத்தப்பெற்றன.  28.12.2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.